search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    புதுவையில் டெங்கு காய்ச்சலுக்கு மேலும் ஒரு மாணவி பலி
    X

    புதுவையில் டெங்கு காய்ச்சலுக்கு மேலும் ஒரு மாணவி பலி

    புதுவையில் டெங்கு காய்ச்சலுக்கு மேலும் ஒரு மாணவி பலியாகி உள்ளார்.
    புதுச்சேரி:

    தமிழகத்திலும், புதுவையிலும் டெங்கு காய்ச்சல் வேகமாக பரவி வருகிறது. புதுவையில் டெங்கு காய்ச்சலை கட்டுப்படுத்த அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.

    எனினும் டெங்கு மற்றும் வைரஸ் காய்ச்சலால் ஏராளமானோர் பாதிக்கப்பட்டு அரசு ஆஸ்பத்திரியிலும், தனியார் ஆஸ்பத்திரிகளிலும் சிகிச்சை பெற்று வருகிறார்கள். புதுவையில் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டு ஏற்கனவே 5 பேர் பலியாகி உள்ளனர்.

    இந்த நிலையில டெங்கு காய்ச்சலால் மேலும் ஒரு மாணவி பலியாகி உள்ளார். அதன் விவரம் வருமாறு:-

    புதுவை கதிர்காமம் ஆனந்தா நகரை சேர்ந்தவர் ஷேக் அப்துல்லா. தனியார் நிறுவனத்தில் காவலாளியாக வேலை பார்த்து வருகிறார். இவரது இளைய மகன் ஜாஸ்மின் பேகம் (வயது 13). இவர் அங்குள்ள அரசு பள்ளியில் 8-ம் வகுப்பு படித்து வந்தார்.

    இந்த நிலையில் கடந்த 1-ந் தேதி ஜாஸ்மின் பேகத்துக்கு திடீரென காய்ச்சல் ஏற்பட்டது. இதையடுத்து ஜாஸ்மின் பேகத்தை பெற்றோர் கதிர்காமம் அரசு மருத்துவ கல்லூரி ஆஸ்பத்திரிக்கு அழைத்து சென்று சிகிச்சை அளித்து விட்டு வீட்டுக்கு அழைத்து வந்தனர்.

    ஆனால், மீண்டும் காய்ச்சல் ஏற்படவே அங்கிருந்து ஜிப்மர் ஆஸ்பத்திரிக்கு அழைத்து சென்றனர். அங்கு பரிசோதித்த டாக்டர்கள் சாதாரண காய்ச்சல் என்று கூறி மருந்து, மாத்திரைகளை வழங்கி அனுப்பி வைத்தனர். ஆனாலும், காய்ச்சல் குறையாததால் தனியார் மருத்துவ கல்லூரி ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். அங்கும் வைரஸ் காய்ச்சல் என கூறி சிகிச்சை அளித்து வந்தனர்.

    இந்த நிலையில் கடந்த 2 நாட்களுக்கு முன்பு ஜாஸ்மின் பேகத்துக்கு உடல்நிலை பெரிதும் பாதிக்கப்படவே அங்கிருந்து மீண்டும் ஜிப்மர் ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். அங்கு தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி நேற்று இரவு ஜாஸ்மின் பேகம் பரிதாபமாக இறந்து போனார். அதன்பின்னரே ஜாஸ்மின் பேகம் டெங்கு காய்ச்சலால் இறந்ததாக ஜிப்மர் நிர்வாகம் சான்றிதழ் அளித்தது.

    ஏற்கனவே அரசு ஆஸ்பத்திரி, ஜிப்மர், தனியார் ஆஸ்பத்திரிகளில் மாணவிக்கு டெங்குகாய்ச்சல் அறிகுறி இல்லை என்று கூறி அலைக்கழித்து விட்டு பின்னர் டெங்கு காய்ச்சலால் மாணவி இறந்ததாக ஜிப்மர் ஆஸ்பத்திரி அறிவித்ததால் பெற்றோர் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
    Next Story
    ×