search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    திருச்செல்வி -  பீர்பானு
    X
    திருச்செல்வி - பீர்பானு

    டெங்கு - மர்ம காய்ச்சலுக்கு இதுவரை 74 பேர் பலி

    தமிழகத்தில் டெங்கு - மர்ம காய்ச்சலுக்கு இதுவரை 74 பேர் பலியாகி உள்ளனர். நூற்றுக்கணக்கானோர் தொடர்ந்து அரசு, தனியார் ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.
    சென்னை:

    தமிழகம் முழுவதும் டெங்கு காய்ச்சல் வேகமாக பரவிவருகிறது. குறிப்பாக கோவை மாவட்டத்தில் அதன் பாதிப்பு அதிகமாக இருக்கிறது.

    இதனால் மாநிலம் முழுவதும் ஆஸ்பத்திரிகளில் காய்ச்சலுக்கு சிகிச்சை பெற கூட்டம் அலைமோதுகிறது. இந்த ஆண்டு ஜனவரி மாதம் முதல் தற்போது வரை டெங்கு மற்றும் மர்ம காய்ச்சலுக்கு 68 பேர் பலியாகியுள்ளனர்.

    இதுகுறித்து சுகாதாரத்துறை இயக்குனர் குழந்தைசாமி கூறியதாவது:-

    இந்த ஆண்டு மாநிலம் முழுவதும் டெங்கு காய்ச்சலுக்கு 20 பேரும், பன்றி காய்ச்சலுக்கு 14 பேரும், பிற காய்ச்சலுக்கு 32 பேரும் பலியாகியுள்ளனர் என்றார்.

    இந்த நிலையில் டெங்கு காய்ச்சலுக்கு மேலும் 4 பேர் பலியாகியுள்ளனர்.

    மதுரையை அடுத்த அய்யர்பங்களா அருகே உள்ள திருப்பாலை பகுதியைச் சேர்ந்தவர் செல்லப்பாண்டி. இவரது மகள் திருச்செல்வி (11).

    நரசிங்கத்தில் உள்ள பள்ளியில் 6-ம் வகுப்பு படித்து வந்தாள். காய்ச்சலால் பாதிக்கப்பட்ட திருச்செல்வியை மதுரை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு பரிசோதித்ததில் டெங்கு காய்ச்சல் பாதிப்பு இருப்பது உறுதியானது. மருத்துவக் குழுவினர் தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி திருச்செல்வி பரிதாபமாக இறந்தாள்.

    திண்டிவனம் அருகே ஒலக்கூர், நத்தமேடு கிராமத்தை சேர்ந்தவர் செல்வம். இவருடைய மகள் நிவேதா (5). 1-ம் வகுப்பு படித்து வந்தாள். இவளுக்கு கடந்த ஒரு வாரத்துக்கு முன்பு காய்ச்சல் ஏற்பட்டது. முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

    அங்கு ரத்த பரிசோதனை செய்தபோது, அவள் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டிருப்பது தெரியவந்தது. அவள் சிகிச்சை பலனின்றி நிவேதா இறந்தாள்.

    கள்ளக்குறிச்சி வ.உ.சி.நகரை சேர்ந்தவர் கிருஷ்ணன் (34). டிராவல்ஸ் நிறுவனம் நடத்தி வந்தார். கடந்த சில நாட்களுக்கு முன்பு காய்ச்சலால் பாதிக்கப்பட்ட கிருஷ்ணன், கள்ளக்குறிச்சியில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். அங்கு ரத்தபரிசோதனை செய்தபோது அவருக்கு டெங்கு காய்ச்சலுக்கான அறிகுறி இருப்பது தெரியவந்தது.

    அவர் மேல்சிகிச்சைக்காக புதுவை ஜிப்மர் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். அங்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி கிருஷ்ணன் பரிதாபமாக உயிரிழந்தார்.

    நெல்லை பாவூர்சத்திரம் அருகே குறும்பலாப்பேரி சமுத்திரபுரம் தெருவைச் சேர்ந்தவர் கடல்முருகன். இவரது மனைவி சீவகைனி. இவர்களது ஒரு வயது மகள் மகா நீஷாவுக்கு காய்ச்சல் பாதிப்பு ஏற்பட்டது. குழந்தையை நெல்லை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.

    அங்கு குழந்தைக்கு டெங்கு பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டது. இந்த நிலையில் குழந்தை மகா நீஷா சிகிச்சை பலனளிக்காமல் நேற்று பரிதாபமாக இறந்தாள்.

    திண்டுக்கல் அருகே உள்ள நல்லமனார்கோட்டை பஞ்சாயத்து தொட்டணம்பட்டி கிழக்குத் தெருவைச் சேர்ந்தவர் முனியப்பன். கொத்தனார் வேலை பார்த்து வருகிறார். அவரது மகள் தனுஸ்ரீ (வயது 6). 1-ம் வகுப்பு படித்து வந்தார்.

    கடந்த ஒரு வாரத்துக்கும் மேலாக இவருக்கு தொடர் காய்ச்சல் இருந்து வந்தது. திண்டுக்கல் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார். அங்கு பரிசோதித்த டாக்டர்கள் டெங்கு காய்ச்சல் இருப்பதை உறுதி செய்தனர். உடனே தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. ஆனால் நேற்று சிகிச்சை பலனின்றி தனுஸ்ரீ பரிதாபமாக உயிரிழந்தார்.

    பழனி அருகே உள்ள கலையம்புத்தூர் பகுதியை சேர்ந்தவர் நசீர். அவரது மகள் பீர்பானு (வயது 13). அந்த பகுதியில் உள்ள ஒரு பள்ளியில் 9-ம் வகுப்பு படித்து வந்தார். கடந்த சிலநாட்களாக பீர்பானு கடும் காய்ச்சலால் அவதிப்பட்டு வந்தார். தனியார் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அப்போது பரிசோதித்த டாக்டர் மாணவி பீர்பானுவுக்கு டெங்கு இருப்பதை உறுதி செய்தார்.

    அதிர்ச்சி அடைந்த நசீர் உடனடியாக பீர்பானுவை பழனி அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தார். அங்கு சிகிச்சை பலனின்றி அவர் இன்று காலை பரிதாபமாக இறந்தார்.

    கடந்த 4 மாதத்தில் கோவை அரசு ஆஸ்பத்திரியில் டெங்கு காய்ச்சலுக்கு 35 பேரும், வைரஸ் காய்ச்சலுக்கு 14 பேரும் பலியாகி உள்ளனர். தற்போது கோவை அரசு ஆஸ்பத்திரியில் டெங்கு காய்ச்சலுக்கு 21 பேரும், வைரஸ் காய்ச்சலுக்கு 119 பேரும், பன்றி காய்ச்சலுக்கு 2 பேரும் சிகிச்சை பெற்று வருகிறார்கள். இவர்களுக்கு காய்ச்சலுக்கென அமைக்கப்பட்ட சிறப்பு வார்டில் வைத்து சிகிச்சை அளித்து வருகிறார்கள்.

    கோவை மாநகர பகுதிகளில் உள்ள தனியார் ஆஸ்பத்திரிகளில் டெங்கு மற்றும் வைரஸ் காய்ச்சல் பாதிப்புடன் 250-க்கும் மேற்பட்டோர் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.

    டெங்கு காய்ச்சல் அறிகுறிகளுடன் கடலூர் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ள 5 பேருக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகிறார்கள்.

    ஈரோடு மாவட்டத்தில் டெங்கு நோயின் தாக்கம் அதிகம் உள்ளது. இதுவரை 27 பேர் டெங்கு மற்றும் மர்ம காய்ச்சலால் உயிரிழந்து உள்ளனர். நூற்றுக்கணக்கானோர் தொடர்ந்து பாதிக்கப்பட்டு அரசு, தனியார் ஆஸ்பத்திரிகளில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்கள்.

    Next Story
    ×