search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    முன்னாள் அமைச்சர் நத்தம் விசுவநாதனுக்கு எதிரான மனு தள்ளுபடி: சென்னை ஐகோர்ட்டு உத்தரவு
    X

    முன்னாள் அமைச்சர் நத்தம் விசுவநாதனுக்கு எதிரான மனு தள்ளுபடி: சென்னை ஐகோர்ட்டு உத்தரவு

    மின்சாரம் கொள்முதல் செய்ததில் முறைகேடு நடந்ததாக கூறி முன்னாள் அமைச்சர் நத்தம் விசுவநாதனுக்கு எதிராக தாக்கலான மனுவை தள்ளுபடி செய்து சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
    சென்னை:

    சென்னை கோட்டூர்புரத்தைச் சேர்ந்த சீனிவாஸ் என்பவர் சென்னை ஐகோர்ட்டில் தாக்கல் செய்த மனுவில் கூறி இருந்ததாவது:-

    தமிழக மின்சாரத்துறை அமைச்சராக நத்தம் விசுவநாதன் (அ.தி.மு.க.) இருந்தபோது சூரிய மின்சக்தி மூலம் உற்பத்தி செய்யப்படும் மின்சாரம் அதிக விலைக்கு கொள்முதல் செய்யப்பட்டுள்ளது. இதற்காக சூரிய மின்சக்தி உற்பத்தியாளர்களிடம் இருந்து நத்தம் விசுவநாதன் பல கோடி ரூபாய் லஞ்சமாக பெற்றுள்ளார்.

    எனவே, நத்தம் விசுவநாதன் மற்றும் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும் என்று ஏற்கனவே ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தேன். அப்போது லஞ்ச ஒழிப்புத்துறை, நான் கூறிய குற்றச்சாட்டுக்கு எந்த ஆதாரமும் இல்லை என்று தெரிவித்ததால் வழக்கை ஐகோர்ட்டு முடித்து வைத்தது. உயர் அதிகாரிகளை காப்பாற்ற எந்த ஆதாரமும் இல்லை என்று லஞ்ச ஒழிப்புத்துறை கூறுகிறது. எனவே, எனது புகார் குறித்து சி.பி.ஐ. விசாரித்து உரிய நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டிருந்தது.

    இந்த மனு நீதிபதி ஜெயச்சந்திரன் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. அப்போது அரசு வக்கீல், ‘சட்டத்திற்கு உட்பட்டு தான் மின்சாரத்தின் கொள்முதல் விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. எந்த முறைகேடும் நடக்கவில்லை’ என்றார்.

    மனுவை விசாரித்த நீதிபதி, ‘மின்சார கொள்முதலில் முறைகேடு நடந்துள்ளதாக கூறுவதற்கு ஆதாரம் இல்லை. முறைகேடு நடந்திருப்பதாக கருதினால் டெண்டரில் பங்கேற்றவர்கள் தீர்ப்பாயத்தில் வழக்கு தொடர முடியும். மனுதாரர் டெண்டரில் பங்கேற்கவில்லை. எனவே, அவரது கோரிக்கையை ஏற்க முடியாது. மனு தள்ளுபடி செய்யப்படுகிறது’ என்று உத்தரவிட்டார்.
    Next Story
    ×