search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கடன் தள்ளுபடி உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி டெல்லியில் நவம்பர் 20-ந் தேதி போராட்டம்
    X

    கடன் தள்ளுபடி உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி டெல்லியில் நவம்பர் 20-ந் தேதி போராட்டம்

    விவசாய கடன் தள்ளுபடி உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி டெல்லியில் விவசாயிகளை திரட்டி நவம்பர் 20-ந் தேதி போராட்டம் நடத்தப்படு என அகில இந்திய போராட்ட விவசாயிகள் குழு ஒருங்கிணைப்பாளர் வி.எம்.சிங் கூறினார்.
    பெரம்பலூர்:

    கூட்டுறவு மற்றும் தேசியமயமாக்கப்பட்ட வங்கிகளில் விவசாய கடனை தள்ளுபடி செய்ய வேண்டும், எம்.எஸ்.சாமிநாதன் குழு பரிந்துரைப்படி விவசாய விளைபொருளுக்கு உற்பத்தி செலவுக்கு மேல் 50 சதவீதம் கூடுதலாக விலை நிர்ணயம் செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை நிறைவேற்றவும், விவசாயிகளுக்காக போராடவும் அகில இந்திய அளவில் பல்வேறு மாநிலங்களை சேர்ந்த விவசாய சங்கங்கள், விவசாயிகள் ஒருங்கிணைந்து அகில இந்திய போராட்ட விவசாயிகள் குழு அமைக்கப்பட்டது. இந்த குழுவினர் இந்தியாவின் பல்வேறு இடங்களுக்கும் சென்று விவசாயிகளின் ஆதரவை பெற்று வருகின்றனர்.

    அந்த வகையில் நேற்று பெரம்பலூருக்கு வந்த அகில இந்திய போராட்ட விவசாயிகள் குழுவினரை பெரம்பலூர் மாவட்ட விவசாய சங்கபிரதிநிதிகள் வரவேற்றனர். பின்னர் பெரம்பலூர் புதிய பஸ்நிலைய பகுதியிலுள்ள உழவர் தலைவர் நாராயணசாமி நாயுடு சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.

    அப்போது அகில இந்திய போராட்ட விவசாயிகள் குழு ஒருங்கிணைப்பார் வி.எம்.சிங் பேசுகையில், கரும்பு உற்பத்தி செய்யும் விவசாயிகளுக்கு அரசின் பரிந்துரை விலை போதுமானதாக இல்லை. உற்பத்தி செலவுக்கு மேல் 1½ மடங்கு லாபம் கிடைக்கும் வகையில் பரிந்துரை விலை நிர்ணயிக்கப்பட வேண்டும். விவசாயிகளை பிரித்து பார்க்காமல் பாரபட்சமின்றி விவசாய கடன்களை தள்ளுபடி செய்ய வேண்டும்.

    விவசாயிகளின் ஒற்றுமையை பிரதிபலிக்கும் விதமாக தற்போது 160 சங்கங்களை சேர்ந்த விவசாயிகள் உள்ளிட்டோர் ஒருங்கிணைந்திருக்கிறோம். விவசாயிகளின் கோரிக்கைகளை மத்திய அரசுக்கு எடுத்துரைக்கும் விதமாக பாராளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் நடைபெறும் சமயத்தில் நவம்பர் 20-ந்தேதி டெல்லியில் விவசாயிகள் பாராளுமன்றம் என்பதை ஏற்படுத்தி போராட்டம் நடத்தப்பட உள்ளது. இதில் திரளான தமிழக விவசாயிகள் பங்கேற்க வேண்டும் என்று கூறினார்.

    அதனை தொடர்ந்து இக்குழுவில் இடம்பெற்றிருக்கும் மராட்டிய மாநில எம்.பி. ராஜீஷெட்டி மற்றும் நிர்வாகிகள் சுனில்லாம், கவிதா குர்ஹாந்தி ஆகியோர் பேசினர். அதனை தொடர்ந்து அகில இந்திய போராட்ட விவசாயிகள் குழுவினர் காரில் ஏறி, தஞ்சையில் நடைபெறும் பொதுக்கூட்டத்தில் பங்கேற்க புறப்பட்டு சென்றனர். இந்த நிகழ்ச்சியில் தமிழக விவசாயிகள் சங்க மாநில செயலாளர் ராஜாசிதம்பரம், தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்ட செயலாளர் செல்லதுரை, மாவட்ட பொருளாளர் அன்பழகன், பெரம்பலூர் மாவட்ட உழவர் மன்ற தலைவர் வரதராஜன் மற்றும் வேணுகோபால், ராஜேந்திரன் உள்பட பலர் கலந்து கொண்டனர். 
    Next Story
    ×