search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    அ.தி.மு.க.வை யாராலும் அசைக்க முடியாது: அமைச்சர் கே.பி.அன்பழகன் பேச்சு
    X

    அ.தி.மு.க.வை யாராலும் அசைக்க முடியாது: அமைச்சர் கே.பி.அன்பழகன் பேச்சு

    அ.தி.மு.க. பல்வேறு சோதனைகளை கடந்து வந்துள்ளது. யார் நினைத்தாலும் இந்த கட்சியை அசைக்க முடியாது என்று அமைச்சர் கே.பி.அன்பழகன் தெரிவித்துள்ளார்.
    தர்மபுரி:

    எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழா வருகிற 7-ந்தேதி தர்மபுரி அரசு கலைக்கல்லூரி மைதானத்தில் நடைபெற உள்ளது. இந்த விழாவில் முதல்அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அமைச்சர்கள் கலந்து கொள்கிறார்கள். இந்த விழாவை சிறப்பான முறையில் நடத்துவது குறித்து தர்மபுரி நகர அ.தி.மு.க. செயல்வீரர்கள் ஆலோசனைக் கூட்டம் தர்மபுரியில் உள்ள மாவட்ட கட்சி அலுவலகத்தில் நடைபெற்றது.

    கூட்டத்திற்கு நகர எம்.ஜி.ஆர். இளைஞரணி செயலாளர் பழனி தலைமை தாங்கினார். நகர மாணவரணி செயலாளர் சென்னகேசவன் வரவேற்று பேசினார். முன்னாள் நகராட்சி தலைவர் எஸ்.ஆர்.வெற்றிவேல், முன்னாள் நகர செயலாளர் பூக்கடை ரவி ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில் தமிழக உயர்கல்வித்துறை அமைச்சரும் மாவட்ட அ.தி.மு.க. செயலாளருமான கே.பி.அன்பழகன் கலந்து கொண்டார்.

    கூட்டத்தில் அமைச்சர் கே.பி.அன்பழகன் பேசுகையில், தமிழக அரசியலில் இருந்து அ.தி.மு.க.வை அழிக்க வேண்டும் என்று சிலர் நினைக்கிறார்கள். அந்த எண்ணம் நிறைவேறாது. அ.தி.மு.க. பல்வேறு சோதனைகளை கடந்து வந்துள்ளது. யார் நினைத்தாலும் இந்த கட்சியை அசைக்க முடியாது. இரட்டை இலை சின்னத்தை மீட்டெடுப்போம். வருகிற உள்ளாட்சி தேர்தல் மற்றும் பாராளுமன்ற தேர்தலில் அ.தி.மு.க. மகத்தான வெற்றி பெறும். தமிழகத்தில் தொடர்ந்து அ.தி.மு.க. ஆட்சி நிலைத்து நிற்கும், என்றார்.

    கூட்டத்தில் மாவட்ட அவைத்தலைவர் நாகராஜன், மாவட்ட பொருளாளர் நல்லத்தம்பி, முன்னாள் எம்.எல்.ஏ. சிங்காரம், முன்னாள் மாவட்ட ஊராட்சிக்குழு தலைவர் டி.ஆர்.அன்பழகன், நகர துணைசெயலாளர் அறிவாளி, சார்பு அமைப்பு மாவட்ட செயலாளர்கள் பழனிசாமி, தகடூர் விஜயன், மோகன் மற்றும் கட்சி நிர்வாகிகள், சார்பு அமைப்பு பொறுப்பாளர்கள், முன்னாள் நகராட்சி கவுன்சிலர்கள் கலந்து கொண்டனர்.

    முடிவில் நகர எம்.ஜி.ஆர்.மன்ற அவைத்தலைவர் முனியப்பன் நன்றி கூறினார்.
    Next Story
    ×