search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    தொழிற்சாலைகளுக்கு தடையில்லா மின்சாரம் வினியோகம்: மின்வாரியம் நடவடிக்கை
    X

    தொழிற்சாலைகளுக்கு தடையில்லா மின்சாரம் வினியோகம்: மின்வாரியம் நடவடிக்கை

    தொழில் வளர்ச்சியை ஊக்குவிக்க தொழிற்சாலைகளுக்கு தடையில்லா மின்சாரம் வினியோகம் செய்ய மின்வாரியம் நடவடிக்கை எடுத்துவருகிறது.
    சென்னை:

    தமிழ்நாடு மின்சார வாரியம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    தமிழ்நாடு மின்சார வாரியம் மின்சார பயன்பாட்டில் தொழில்நுட்ப ரீதியிலும், நிதி நிலைமையிலும் மேம்பாடு அடைந்துள்ளது. கடந்த மே 31-ந் தேதி நிலவரப்படி உபரி மின்சாரத்துடன், மின்சாரம் கொள்திறனும் 18,733 மெகாவாட்டாக அதிகரிக்கப்பட்டுள்ளது. இதன்மூலம் 2 கோடி மின்நுகர்வோர்களுக்கு முறையான மின்சாரம் வினியோகம் செய்யப்படுகிறது.

    இதுதவிர சூரியசக்தி மற்றும் காற்றாலை பயன்பாட்டை ஊக்குவிப்பதில் மின்சார வாரியம் முன்னேறி வருகிறது. மே 31-ந் தேதி நிலவரப்படி காற்றாலை மற்றும் சூரியசக்தி மின்சாரத்தின் கொள்திறன் 7,855 மெகாவாட் மற்றும் 1,702 மெகாவாட் என்ற அளவில் உயர்ந்துள்ளது. 24 மணி நேரமும் மின்சார வினியோகம், பிற மாநிலங்களைவிட குறைந்த அளவே மின் இழப்பு உள்ளிட்ட பல்வேறு நிலைகளை எட்டியுள்ளது.

    தொழில் வளர்ச்சியை ஊக்குவிக்க, ‘எளிய வகையில் வணிகம்’ என்ற திட்டத்தின் கீழ் தடையற்ற மின்சாரம் வழங்கும் வகையில் புரிந்துணர்வு ஒப்பந்தம் போடப்பட்டுள்ளது. இதன் மூலம் தொழிற்சாலைகளுக்கு தங்குதடையின்றி மின்சாரம் வழங்கப்படும். தேவையில்லாமல் மின்சார நிறுத்தம் செய்யப்படுவதில்லை.

    இயற்கை சீற்றம் ஏற்படும் காலங்கள் மற்றும் தொழில்நுட்ப கோளாறு ஏற்படும் நேரங்கள் தவிர மற்ற அனைத்து நாட்களிலும் தடையில்லா மின்சாரம் வினியோகம் செய்யப்படும்.

    இதனால் தொழிற்சாலைகளில் உற்பத்தி அதிகரிப்பு, விரைவாக முதலீட்டை திரும்ப பெறுதல், மின்நுகர்வோர் மனதிருப்தி, நேரடி மற்றும் மறைமுக வேலைவாய்ப்புகள் உள்ளிட்ட பல்வேறு வசதிகளை பெறமுடியும்.

    டிஜிட்டல் மீட்டர், மின்தடையை போக்க குறுஞ்செய்தி போன்ற பல்வேறு திட்டங்களும் அறிமுகப்படுத்தப்பட்டு வருகிறது. இயக்குனர் (வினியோகம்) தலைமையில் ‘வசதிகள் அளிக்கும் மையம்’ ஒன்றும் அமைக்கப்பட உள்ளது.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
    Next Story
    ×