search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    காரிமங்கலம் அருகே டாஸ்மாக் கடையை சூறையாடிய பெண்கள்
    X

    காரிமங்கலம் அருகே டாஸ்மாக் கடையை சூறையாடிய பெண்கள்

    காரிமங்கலம் அருகே டாஸ்மாக் கடையை நிரந்தரமாக மூட வேண்டும் என 200-க்கும் மேற்பட்ட பள்ளி மாணவர்கள் மற்றும் கிராம பெண்கள் மது கடையை முற்றுகையிட்டனர்.
    காரிமங்கலம்:

    தர்மபுரி மாவட்டம் காரிமங்கலத்தை அடுத்த மல்லிக்குட்டை கிராம பகுதியில் செயல்படும் டாஸ்மாக் கடைக்கு கண்ணீர் அஞ்சலி பேனர் அடித்து நூதன முறையில் டாஸ்மாக் கடையை நிரந்தரமாக மூட வேண்டும் என 200-க்கும் மேற்பட்ட பள்ளி மாணவர்கள் மற்றும் கிராம பெண்கள் மது கடையை முற்றுகையிட்டனர். பாதுகாப்பில் ஈடுபட்ட போலீசாரிடம் முற்றுகையிட்ட பெண்கள் கூறியதாவது:-

    தர்மபுரி மாவட்டம் காரிமங்கலம் தாலுகாவிற்கு உட்பட்ட மல்லிக்குட்டை ஊராட்சியில் கடந்த 15-ம் தேதி நடந்த கிராம சபைக் கூட்டத்தில் டாஸ்மாக்கடையை 10 நாட்களுக்குள் நிரந்தரமாக மூட பரிந்துரை செய்வதாக உயர் அதிகாரிகள் உறுதியளித்த பின்னர், கிராம மக்கள் தீர்மானத்தில் கையொப்பமிட்டு தீர்மானத்தை நிறைவேற்றினர்.

    ஆனால் இதுவரை டாஸ்மாக் கடையை மூடுவதற்கு எவ்வித நடவடிக்கையும் இதுவரை எடுக்கப்படவில்லை. மேலும் டாஸ்மாக் கடை அருகே சுமார் 500 அடி தூரத்தில் 2 மேல்நிலைப்பள்ளி பள்ளிகளும், மற்றும் கல்லூரியும் உள்ளதால் குடிப்பவர்களால் அந்தப் பகுதியில் நடந்து போகும் பெண்கள் மற்றும் மாணவிகளுக்கு தொல்லை ஏற்படுவதாலும் தகாத வார்த்தைகளால் பேசுவதாக இக்கிராம மக்கள் குற்றம்சாட்டினர்.

    குடி பிரியர்களை பார்த்து பள்ளிக்கு செல்லும் மாணவர்களின் வாழ்க்கை சீரழிவு ஏற்படும் அது மட்டுமல்லாமல் கடையை சுற்றிலும் உள்ள நிலத்தில் விவசாயம் செய்யப்படுகிறது அங்கு கூலி வேலைக்கு வரும் பெண்களிடம் தவறாக நடந்து கொள்கிறார்கள். எனவே இங்குள்ள டாஸ்மாக் கடையை மூட வேண்டும் கோரிக்கை விடுத்தனர்.

    அப்போது போலீசார் அவர்களை கலைந்து போகுமாறு வற்புறுத்திய போது பெண்களுக்கும் போலீசாருக்கும் இடையே வாக்குவாதம், தள்ளு முள்ளு ஏற்பட்டது. பின்னர் பெண்கள் டாஸ்மாக் கடையை ஒட்டி நீளமாக கட்டப்படவிருந்த குறுக்குச் சுவர்களை இடித்துத் தள்ளினர். பின்பு கற்கள் மற்றும் கையில் கிடைத்த பொருட்களை கொண்டு வீசியும் தாக்கினர்.

    இதில் கடையின் முன்பு வைக்கப்பட்டிருந்த பிரிட்ஜை, மேசை, குளிர்பானங்கள் அடித்து நொறுக்கினர். இதனால் அப்பகுதியில் பரபரப்பாக காணப்பட்டது. தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த காரிமங்கலம் போலீஸ் இன்ஸ்பெக்டர் சதீஷ்குமார் மற்றும் போலீசார்களும் சேர்ந்து நிலைமையை கட்டுக்குள் கொண்டு வந்தனர்.

    பின்னர் அங்கு வந்த டி.எஸ்.பி காந்தி, வட்டாட்சியர் தமிழரசு ஆகியோர் போராட்டத்தில் ஈடுபட்ட கிராம பெண்களோடு பேச்சுவார்த்தை நடத்தினர். மூடச் சொல்லும் உங்களின் கோரிக்கையை மேல் அதிகாரிகளிடம் தெரிவிப்பதாகவும், அதுவரை அமைதி காக்குமாறும் கேட்டுக் கொண்டார். பின்னர் பெண்கள் அனைவரும் தங்கள் கோரிக்கையை மனுவாக வட்டாட்சியரிடம் அளித்து கலைந்து சென்றனர்.
    Next Story
    ×