search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    அனுமதித்த பணியில் ஊழல்: கவர்னர் தன் தவறை ஒப்புக்கொள்வாரா?- கந்தசாமி கேள்வி
    X

    அனுமதித்த பணியில் ஊழல்: கவர்னர் தன் தவறை ஒப்புக்கொள்வாரா?- கந்தசாமி கேள்வி

    தூர்வாரும் பணியில் ஊழலும், முறைகேடுகளும் நடைபெறுவதாக கவர்னர் குற்றம் சாட்டுவதால் தான் அனுமதித்த பணியில் ஊழல் நடப்பதை ஒப்புக்கொள்கிறாரா என அமைச்சர் கந்தசாமி கேள்வி எழுப்பியுள்ளார்.

    புதுச்சேரி:

    புதுவை கவிஞரேறு வாணிதாசனார் நினைவுதினம் இன்று அரசு செய்தி மற்றும் விளம்பரத்துறை சார்பில் அனுஷ்டிக்கப்பட்டது. இதையொட்டி அரசு ஆஸ்பத்திரி எதிரில் உள்ள அவரது சிலைக்கு அமைச்சர் கந்தசாமி மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். பின்னர் அவர் கூறியதாவது:-

    துறைமுக திட்டத்தை முடக்க சதி நடக்கிறது. முதல்-அமைச்சர், அமைச்சர்கள், எம்.எல்.ஏ.க்கள் அனைவரும் புதுவை மக்கள் மீது அக்கறை கொண்டவர்கள். வெளிமாநிலத்தில் இருந்து வந்துள்ள சிலர் மக்கள் மீது அக்கறை இருப்பதுபோல காட்டிக்கொண்டு திட்டங்களை தடுக்கும் வகையில் தொடர்ந்து செயல்பட்டு வருகின்றனர்.

    புதுவை துறைமுகத்தில் தூர்வாரும் பணிக்கு அரசு எந்த உத்தரவும் அளிக்கவில்லை. கவர்னர் நேரடியாக தலையிட்டு மத்திய அரசின் துறைமுக கழகம் மூலம் தூர்வாரும் பணிக்கு உத்தரவிட்டார். கவர்னர் உத்தரவின்பேரில்தான் தூர்வாரும் பணி நடந்தது. அப்படியிருக்க தூர்வாரும் பணியில் ஊழலும், முறைகேடுகளும் நடைபெறுவதாக கவர்னர் குற்றம்சாட்டியுள்ளார்.

    அப்படியென்றால் அவர் அனுமதித்த பணியில் ஊழல் நடந்துள்ளது என்பதை ஒப்புக்கொள்கிறாரா? மக்கள் மத்தியில் வேண்டும் என்றே திட்டமிட்டு காங்கிரஸ் அரசுக்கு அவப்பெயர் ஏற்படுத்த வேண்டும் என்ற நோக்கத்தோடு கவர்னர் தொடர்ந்து செயல்பட்டு வருகிறார். எத்தனை சதி திட்டங்கள் தீட்டினாலும் துறைமுக திட்டத்தை நிச்சயம் நாங்கள் செயல்படுத்துவோம்.

    ஏனெனில் இந்த திட்டத்தின் மூலம் மாநிலம் வளர்ச்சி காண்பதோடு, இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பும் கிடைக்கும். இதை தடுப்பதை முறியடிப்போம். கவர்னர் மீது அபாண்டமாக குறைகூற எனக்கு தனிப்பட்ட காழ்ப்புணர்ச்சி கிடையாது. என்னுடைய துறைகளின் கீழ் உள்ள திட்டங்கள் பலவற்றை கவர்னர் முடக்கி வைத்துள்ளார்.

    இலவச அரிசி, முதியோர் பென்‌ஷன், விவசாய கடன் தள்ளுபடி, தாழ்த்தப்பட்ட மாணவர்களுக்கு முழுமையான கல்வி நிதி உள்ளிட்ட அனைத்து திட்டங்களும் என் துறைகளை சார்ந்தது. இதற்கான கோப்புகளுக்கு அனுமதி தராமல் காலம் கடத்துகிறார். அதன்பேரில்தான் நான் குற்றம் சாட்டுகிறேன்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    Next Story
    ×