search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    அனைத்து கட்சி கூட்டத்தை ரத்து செய்ததில் உள்நோக்கம் உள்ளது: அன்பழகன் எம்.எல்.ஏ. பேட்டி
    X

    அனைத்து கட்சி கூட்டத்தை ரத்து செய்ததில் உள்நோக்கம் உள்ளது: அன்பழகன் எம்.எல்.ஏ. பேட்டி

    சட்டமன்ற உறுப்பினர்கள் கூட்டத்திற்கு நாராயணசாமி அழைப்பு விடுத்திருந்தார். திடீரென இந்த கூட்டத்தை ரத்து செய்துள்ளார். இதில் உள்நோக்கம் உள்ளது என்று அன்பழகன் எம்.எல்.ஏ.கூறினார்.

    புதுச்சேரி:

    புதுவை அ.தி.மு.க. சட்டமன்ற கட்சி தலைவர் அன்பழகன் நிருபர்களிடம் கூறியதாவது:-

    நீட் தேர்வில் இருந்து தமிழகத்திற்கு விலக்கு அளிக்கும் பிரச்சினையில் தமிழக மாணவர்கள் மத்தியில் தி.மு.க. செயல் தலைவர் ஸ்டாலின் இரட்டை வேடம் போடுகிறார். அவரை பின்பற்றி புதுவை மாநிலத்திலும் தி.மு.க. துணையோடு ஆட்சி நடத்தும் முதல்-அமைச்சர் நாராயணசாமி நீட் தேர்வு சம்பந்தப்பட்ட பிரச்சினையில் மாணவர்களையும் மக்களையும் குழப்பும் விதத்தில் நாடகம் நடத்தி வருகிறார்.

    தமிழகத்தில் முதல்- அமைச்சர் எடப்பாடி தலைமையில் நடைபெறும் ஆட்சியில் அவசர சட்டம், சட்டத்திருத்த மசோதாக்கள் கொண்டு வரப்பட்டு அதை மத்திய அரசுக்கு அனுப்பி நீட் தேர்வில் இருந்து தமிழகத்திற்கு விலக்கு அளிக்க கோரி வருகின்றனர்.

    இதை பின்பற்றி புதுவை அரசு செயல்படவில்லை. மத்திய அரசை வலியுறுத்தி எந்த சட்டத்திருத்தையும், சட்ட மசோதாவையும் கொண்டு வரவில்லை. புதுவையில் இருந்த எந்த கடிதத்தையும் மத்திய அரசுக்கு அனுப்பவில்லை. அரசு இடஒதுக்கீட்டிற்கு முழுமையான கவுன்சிலிங் நடத்தி முடிக்கப்பட்டுள்ளது. கலந்தாய்வில் தேர்வு செய்யப்பட்டுள்ளவர்களிடம் நிர்ணயித்த கட்டணம் வசூலிக்கப்பட்டுள்ளது.

    இந்நிலையில் தமிழக அரசின் முயற்சியால் நீட் தேர்வில் இருந்து ஓரிரு ஆண்டுகளுக்கு விலக்கு கிடைக்கும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.

    இதை கருத்தில் கொண்டு நாராயணசாமி மாணவர்கள் மத்தியில் அச்சத்தையும் பயத்தையும் உருவாக்கும் விதத்தில் நேற்று முன்தினம் சட்ட மன்ற உறுப்பினர்கள் கூட்டத்திற்கு அழைப்பு விடுத்திருந்தார். திடீரென சுகாதாரத்துறை அமைச்சர் ஊரில் இல்லை என்று இந்த கூட்டத்தை ரத்து செய்துள்ளார்.

    ஒரு அமைச்சர் ஊரில் இல்லை என்பதற்காக இந்த கூட்டத்தை ரத்து செய்வதில் உள்நோக்கம் உள்ளது. இதில் மிகப்பெரிய மிரட்டல் நடத்தப்பட்டுள்ளது. நீட் தேர்வில் விலக்கு பெற அமைச்சருக்கு விருப்பம் இல்லை.

    கூட்டம் ரத்து செய்ய மல்லாடியின் நெருக்கடியே காரணம். இவ்வி‌ஷயத்தில் நாராயணசாமி இரட்டை வேடம் போடுகிறார். அரசு தவறான பாதைக்கு செல்லும் போதும், ஊழல் முறைகேடு நடக்கும் போதும் அதை தடுத்து நிறுத்தி நேர்வழிப்படுத்துவது கவர்னரின் பொறுப்பு. கவர்னர் நீட் தேர்வு பிரச்சினையில் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். துறைமுக அபிவிருத்தி திட்டத்தை தடுக்கும் நோக்கத்தோடு கவர்னர் செயல்படுகிறார்.

    புதுவை மக்களின் நீண்ட நாள் கனவும், சுற்றுலா பயணிகளை ஈர்க்கும் விதத்திலும் செயற்கை மணல் பரப்பு உருவாக்கும் திட்டத்தையும் கவர்னர் தடுத்து நிறுத்துகிறார். இதன்மூலம் புதுவை மக்களுக்கு கவர்னர் துரோகம் செய்கிறார்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    Next Story
    ×