search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    டெங்கு காய்ச்சல் பரவுவதை தடுக்கும் வழிமுறைகள்: பெரம்பலூர் கலெக்டர் விளக்கம்
    X

    டெங்கு காய்ச்சல் பரவுவதை தடுக்கும் வழிமுறைகள்: பெரம்பலூர் கலெக்டர் விளக்கம்

    பெரம்பலூரில் டெங்கு காய்ச்சல் தடுப்பு நடவடிக்கைகள் குறித்த ஆய்வு கூட்டம் கலெக்டர் சாந்தா தலைமையில் நடைபெற்றது.

    பெரம்பலூர்:

    பெரம்பலூரில் டெங்கு காய்ச்சல் தடுப்பு நடவடி க்கைகள் குறித்த ஆய்வு கூட்டம் கலெக்டர் சாந்தா தலைமையில் நடைபெற்றது. கூட்டத்தில் டெங்கு காய்ச்சல் தடுப்பு வழிமுறைகள் குறித்து கலெக்டர் பேசியதாவது:-

    பெரம்பலூர் மாவட்டத்தில் டெங்கு நோயை தடுக்கும் பொருட்டு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக வட்டாரத்திற்கு 20 களப் பணியாளர்களும், பேரூராட்சிகளில் தலா 10 களப்பணியாளர்களும், நகராட்சியில் 30 களப் பணியாளர்களும் என மொத்தம் 150 களப் பணியாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

    இக்களப்பணியாளர்கள் வீடுவீடாக சென்று டெங்கு கொசுப்புழு உற்பத்தியாகும் இடங்களை கண்டறிந்து “அபேட்” என்ற மருந்தினை விட்டு கொசுப்புழுக்களை அழிப்பார்கள். எனவே பொது மக்கள் தங்கள் வீடுகளில் சேமித்து வைக்கும் தண்ணீரை நன்றாக மூடி வைக்க வேண்டும். அவ்வாறு செய்வதினால் கொசு தண்ணீரில் அமர்ந்து முட்டையிடுவதை தவிர்க்கலாம். மேலும் வீடுகளில் தண்ணீர் சேமித்து வைக்கும் தொட்டி மற்றும் பாத்திரங்களை 3 நாட்களுக்கு ஒருமுறை பிளிச்சிங் பவுடர் கொண்டு நன்றாக தேய்த்து சுத்தம் செய்து உலரவைத்து பிறகு தண்ணீரை நிரப்ப வேண்டும். வீடுகளின் அருகில் உடைந்த மண்பாண்டங்கள், உரல், டயர், தேங்காய் மட்டைகள் மற்றும் பிளாஸ்டிக் பொருட்களை அப்புறப்படுத்தி அவைகளில் மழை நீர் தேங்கி டெங்கு கொசுப்புழுக்கள் உற்பத்தியாகாமல் பொதுமக்கள் விழிப்புணர்வுடன் பார்த்துக் கொள்ள வேண்டும்.

    பொதுமக்கள் தங்களுக்கு காய்ச்சல் அறிகுறி தென் பட்டால் அருகில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள் மற்றும் அரசு மருத்துவமனைகளில் உள்ள மருத்துவரை அணுகி தேவையான சிகிச்சையை பெற்றுக்கொள்ள வேண்டும். கடைகளில் விற்கும் மாத்திரைகளை வாங்கி சாப்பிடக்கூடாது. மேலும் பொதுமக்கள் அனைவரும் தங்கள் வீட்டில் கொசுவலை மற்றும் கொசு விரட்டிகளை பயன்படுத்தலாம்.

    முதிர்ந்த கொசுக்களை ஒழிக்க பகல் நேரங்களில் வீடுகளில் புகைமருந்து அடிக்க வேண்டும். எனவே பொதுமக்கள் தங்கள் வீடு தேடிவரும் டெங்கு கொசுப்புழு ஒழிப்பு களப்பணியாளர்களுக்கு முழு ஒத்துழைப்பு தர வேண்டும்.மேலும் மழைக் காலங்களில் தண்ணீரை கொதிக்க வைத்து, ஆரவைத்த தண்ணீரை குடிப்பதால் கண்ணுக்கு தெரியாத நுண்கி ருமிகள் அழிந்துவிடுகிறது. எனவே பொதுமக்கள் குடிநீரை காய்ச்சி பருக வேண்டும்.

    இவ்வாறு அவர் தெரிவித்தார்.

    Next Story
    ×