search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    பொதுத்துறை நிறுவனங்கள் மூலம் தமிழக அரசுக்கு ரூ.2,825 கோடி நஷ்டம்: நிதித்துறை ஆய்வு அறிக்கையில் தகவல்
    X

    பொதுத்துறை நிறுவனங்கள் மூலம் தமிழக அரசுக்கு ரூ.2,825 கோடி நஷ்டம்: நிதித்துறை ஆய்வு அறிக்கையில் தகவல்

    தமிழக அரசுக்கு 17 பொதுத்துறை நிறுவனங்கள் மூலம் ரூ.2 ஆயிரத்து 825 கோடி நஷ்டம் ஏற்பட்டுள்ளதாக நிதித்துறை ஆய்வு அறிக்கையில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
    சென்னை:

    2015-16-ம் ஆண்டில் தமிழ்நாடு பொதுத்துறை நிறுவனங்களின் செயல்பாடு குறித்து சட்டசபையில் தமிழக நிதித்துறை ஆய்வு அறிக்கை ஒன்றை தாக்கல் செய்துள்ளது. அதில் கூறப்பட்டுள்ள அம்சங்கள் வருமாறு:-

    அனைத்து பொதுத்துறை நிறுவனங்களின் ஒட்டுமொத்த வருமானம் 2014-15-ம் ஆண்டில் ரூ.46 ஆயிரத்து 369 கோடியில் இருந்து, 2015-16-ம் ஆண்டில் ரூ.49 ஆயிரத்து 941 கோடியாக, அதாவது 7.70 சதவீதம் உயர்ந்துள்ளது. அதுபோல 2014-15-ம் ஆண்டில் இருந்த இயக்க நஷ்டம் ரூ.580.61 கோடி, 2015-16-ம் ஆண்டில் ரூ.426.59 கோடியாக குறைந்துள்ளது. அதே நேரத்தில் அந்த ஆண்டுகளில் ரொக்க நஷ்டம் ரூ.1,137 கோடியில் இருந்து ரூ.1,472 கோடியாக அதிகரித்துள்ளது.

    தமிழகத்தில் மொத்தம் 51 பொதுத்துறை நிறுவனங்கள் இயங்கி வருகின்றன. ஒரு லட்சத்து 65 ஆயிரத்து 75 பேர் பணியாற்றுகின்றனர். மொத்த நிறுவனங்களில் 36 நிறுவனங்கள் 2014-15-ம் ஆண்டில் லாபம் ஈட்டின, 15 நிறுவனங்கள் நஷ்டத்தில் இயங்கின. அதுபோல 2015-16-ம் ஆண்டில் 34 நிறுவனங்கள் மட்டுமே லாபம் ஈட்டிய நிலையில் 17 நிறுவனங்கள் நஷ்டம் அடைந்தன.

    2014-15-ம் ஆண்டில் அரசின் மொத்த முதலீடு 6 ஆயிரத்து 836 கோடி ரூபாயாகவும், 2015-16-ம் ஆண்டில் அந்தத் தொகை ரூ.7 ஆயிரத்து 971 கோடியாக உயர்ந்தது. அந்த ஆண்டுகளில் அரசுக்கு அளிக்கப்பட்ட பங்கு ஈவுத்தொகை முறையே ரூ.135 கோடியில் இருந்து ரூ.188 கோடியாக அதிகரித்துள்ளது.

    2015-16-ம் ஆண்டில் லாபம் ஈட்டிய 34 பொதுத்துறை நிறுவனங்களில் தமிழ்நாடு செய்தித்தாள் மற்றும் காகித நிறுவனம், தொழில் வளர்ச்சி நிறுவனம், கனிம நிறுவனம், காவலர் வீட்டு வசதிக் கழகம், மீன் வளர்ச்சிக்கழகம், சிறுதொழில் நிறுவனம், பூம்புகார் கப்பல் போக்குவரத்துக்கழகம், பஞ்சாலை நிறுவனம் ஆகியவை அடங்கும்.

    2015-16-ம் ஆண்டில் நஷ்டம் அடைந்த 17 பொதுத்துறை நிறுவனங்களின் விபரம் வருமாறு:- (அடைப்புக்குறிக்குள் நஷ்டத்தொகை காட்டப்பட்டுள்ளது)

    மாநகர் போக்குவரத்துக்கழகம் (ரூ.499.67 கோடி), தமிழ்நாடு அரசு கோயம்புத்தூர் போக்குவரத்துக் கழகம் (ரூ.401.98 கோடி) உட்பட கும்பகோணம் (ரூ.388.61 கோடி), திருநெல்வேலி (ரூ.340.60 கோடி), விழுப்புரம் (ரூ.304.92 கோடி), மதுரை (ரூ.276 கோடி), சேலம் (ரூ.233.57 கோடி) ஆகிய போக்குவரத்துக்கழகங்கள், அரசு விரைவுப் போக்குவரத்துக்கழகம் (ரூ.157 கோடி), தமிழ்நாடு மாநில வாணிபக் கழகம் (டாஸ்மாக், ரூ.125.64 கோடி), சர்க்கரைக் கழகம் (ரூ.41.44 கோடி), தேயிலைத் தோட்டக்கழகம் (ரூ.21.09 கோடி), தொழில் வெடிமருந்து நிறுவனம் (ரூ.13.51 கோடி), சதர்ன் ஸ்டர்க்சுரல்ஸ் நிறுவனம் (ரூ.11.29 கோடி), அரசு ரப்பர் கழகம் (ரூ.9.12 கோடி), சுற்றுலா வளர்ச்சிக்கழகம் (ரூ.21 லட்சம்), பல்லவன் போக்குவரத்து ஆலோசனை பணிக்கழகம் (ரூ.13 லட்சம்) ஆகிய 16 நிறுவனங்கள் நஷ்டத்தில் இயங்கியுள்ளன. தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக்கழகம் 2015-16-ம் ஆண்டில் லாபத்தையும் ஈட்டவில்லை, நஷ்டமும் அடையவில்லை. அந்த வகையில் இந்த 17 நிறுவனங்கள் மூலம் ரூ.2 ஆயிரத்து 824 கோடியே 94 லட்சம் நஷ்டம் ஏற்பட்டுள்ளது.

    இதில், பெரும்பாலான அரசு போக்குவரத்துக்கழகங்கள் 1014-15-ம் ஆண்டிலும் நஷ்டத்தில்தான் இயங்கின. ஆனால் டாஸ்மாக் நிறுவனம் கடந்த 2014-15-ம் ஆண்டில் ரூ.79.13 கோடி லாபம் ஈட்டியிருந்தது குறிப்பிடத்தக்கது. அதுபோல 2014-15-ம் ஆண்டில் ரூ.22 கோடி லாபம் ஈட்டிய சுற்றுலா வளர்ச்சிக்கழகம், மறு ஆண்டில் ரூ.21 லட்சம் நஷ்டத்தில் சிக்கியது. மதுரை அரசு போக்குவரத்துக்கழகம், தொழில் வெடிமருந்து நிறுவனம், பல்லவன் போக்குவரத்து ஆலோசனைப் பணிக்குழு 3 நிறுவனங்கள் மட்டும் நஷ்டத்தை ஓரளவு குறைத்துள்ளன. மற்ற சில போக்குவரத்துக்கழகம் உட்பட 11 பொதுத்துறை நிறுவனங்கள் 2014-15-ம் ஆண்டுடன் ஒப்பிடும்போது, மறு நிதியாண்டில் செயல்பாட்டில் பின்னடைவைக் கண்டதோடு, நஷ்டமும் அதிகரித்துள்ளது.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. 
    Next Story
    ×