search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    அய்யாக்கண்ணுவின் போராட்டம் பண்பாட்டை சிதைக்கிறது: விவசாயிகள் சங்கங்களின் கூட்டமைப்பு வேதனை
    X

    அய்யாக்கண்ணுவின் போராட்டம் பண்பாட்டை சிதைக்கிறது: விவசாயிகள் சங்கங்களின் கூட்டமைப்பு வேதனை

    அய்யாக்கண்ணு நடத்தும் போராட்டம் நம் பண்பாட்டை சிதைக்கிறது என்றும், இதனால் தன்மானமும், சுயமரியாதையும் பாதிக்கப்படுவதாக தமிழ்நாடு விவசாயிகள் சங்கங்களின் கூட்டமைப்பினர் வேதனை தெரிவித்து உள்ளனர்.
    சென்னை:

    தமிழ்நாடு விவசாய சங்கங்களின் கூட்டமைப்பு செயலாளர் செ.நல்லசாமி சென்னையில் நேற்று நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    ஜனநாயக நாட்டில் போராடி உரிமைகளை பெறுவதற்கு குடிமக்களுக்கு உரிமை உண்டு. ஆனால் அந்த போராட்டம் தன்மானத்தையும், சுயமரியாதையும் சிதைத்துவிடக்கூடாது. விவசாயிகளின் கோரிக்கைகளை முன்னிறுத்தி அய்யாக்கண்ணு தலைமையில் விவசாயிகள் போராட்டம் நடத்துகிறோம் என்ற பெயரில் டெல்லியை நாறடித்து விட்டனர். இது பண்பாட்டை, நாகரிகத்தை சிதைக்கும் செயல். போராட்டத்தின் நோக்கம் நியாயமாக இருந்தாலும், வடிவம் ஏற்புடையதாக இல்லாவிட்டால் அது தோல்வியில் தான் முடியும். மேலும் தன்மானத்தையும், சுயமரியாதையையும் பாதிக்கும். இதுபோன்ற செயல் அறிவுடைமை ஆகாது.

    நிலத்தடி நீர் தாவரங்களுக்கும், மழைநீர் மனிதர்களுக்கும் சொந்தமானது. இது தான் இயற்கை. இஸ்ரேல், ஜெர்மனி போன்ற நாடுகளில் நிலத்தடி நீரை பயன்படுத்த தடை உள்ளது. ஆனால் தமிழகத்தில் நிலத்தடி நீர் அளவுக்கு அதிகமாக உறிஞ்சப்பட்டு வருகிறது. எனவே நதிகள் இணைப்பு மட்டும் தான் இப்போதைய முக்கிய தேவை. அதே நேரத்தில் நிலத்தடி நீரை உறிஞ்ச தடையும் விதிக்கப்பட வேண்டும். நாம் பயன்படுத்துவதை விட இரு மடங்கு நீர் வீணாக கடலில் கலக்கிறது. இதனை தடுத்து நிறுத்த வேண்டும்.

    அதேபோல காவிரியில் இருந்து வரும் நீரை விகிதாச்சார அடிப்படையில் தினந்தோறும் மாநிலங்களுக்கு பிரித்து கொடுப்பது தான் காவிரி பிரச்சினைக்கு நிரந்தர தீர்வாக அமையும். மாநிலங்கள் இடையிலான மோதலுக்கும் முடிவு கிடைக்கும். அதே நேரத்தில் காவிரி நீர் பிரச்சினை விவகாரத்தில் ஒரு சீராய்வு மனுவை தமிழக அரசு தாக்கல் செய்ய வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.
    Next Story
    ×