search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ஜி.எஸ்.டி. வரி உயர்வால் வரும் 1-ந்தேதி முதல் ஏ.சி.,முதல் வகுப்புக்கான ரெயில் கட்டணம் உயர்கிறது
    X

    ஜி.எஸ்.டி. வரி உயர்வால் வரும் 1-ந்தேதி முதல் ஏ.சி.,முதல் வகுப்புக்கான ரெயில் கட்டணம் உயர்கிறது

    ஜி.எஸ்.டி. வரி 5 சதவீதமாக நிர்ணயம் செய்யப்பட்டு இருப்பதால், வரும் 1-ந்தேதி முதல் ஏ.சி. வகுப்பு மற்றும் முதல் வகுப்புக்கான ரெயில் கட்டணம் சற்று உயர உள்ளது. இந்த கட்டண உயர்வு 1-ந்தேதிதான் அமல்படுத்தப்படும்.

    சென்னை:

    ரெயிலில் பயணம் செய்பவர்களிடம் தற்போது சேவை வரி வசூலிக்கப்பட்டு வருகிறது.

    அந்த வகையில் ஏ.சி. வகுப்பு மற்றும் முதல் வகுப்பு கட்டணங்களுடன் 4.5 சதவீதம் சேவை வரியாக வசூலிக்கப்படுகிறது.

    ரெயில் டிக்கெட் மீதான வரியும் ஜி.எஸ்.டி. வரி விதிப்புக்குள் கொண்டு வரப் பட்டுள்ளது. அதன்படி ரெயில் ஏ.சி. வகுப்பு மற்றும் முதல் வகுப்பு கட்டணங்களுக்கு 5 சதவீதம் ஜி.எஸ்.டி. வரி விதிக்கப்பட்டுள்ளது.

    வரும் 1-ந்தேதி முதல் இந்த புதிய வரி விதிப்பு அமலுக்கு வர உள்ளது. இது பயணிகளுக்கு குறிப்பாக தொலைதூரம் பயணம் செய்பவர்களுக்கும், சுற்றுலா பயணிகளுக்கும் கடும் இடையூறை ஏற்படுத்தும் என்று தெரிய வந்துள்ளது.

    அடுத்து ஜி.எஸ்.டி. வரி 5 சதவீதமாக நிர்ணயம் செய்யப்பட்டு இருப்பதால், வரும் 1-ந்தேதி முதல் ஏ.சி. வகுப்பு மற்றும் முதல் வகுப்புக்கான ரெயில் கட்டணம் சற்று உயர உள்ளது. இந்த கட்டண உயர்வு 1-ந்தேதிதான் அமல்படுத்தப்படும்.

    எனவே ஏற்கனவே முன்பதிவு செய்து இருப்பவர்களை இந்த கட்டண உயர்வு பாதிக்காது. அவர்கள் சேவை வரிக்கும், ஜி.எஸ்.டி. வரிக்கும் உள்ள வித்தியாச தொகையை செலுத்த வேண்டிய அவசியமில்லை என்று கூறப்பட்டுள்ளது.


    அதே சமயத்தில் ஜூலை 1-ந்தேதிக்கு முன்பு டிக்கெட் முன்பதிவு செய்தவர்கள், எதிர்பாராத காரணங்களால் ஜூலை 1-ந்தேதிக்கு பிறகு அந்த டிக்கெட்டை ரத்து செய்யக்கூடும். அப்படி ரத்து செய்பவர்களின் பயண கட்டணத்தில் இருந்து ஜி.எஸ்.டி வரிக்கான தொகை பிடித்துக் கொள்ளப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

    மேலும் ஜூலை 1-ந் தேதி முதல் ஏ.சி. வகுப்பு மற்றும் முதல் வகுப்புக்கான “ரிட்டர்ன்” பயண டிக்கெட்டுகளை பதிவு செய்ய இயலாது என்றும் ரெயில்வே அறிவித்துள்ளது. அதுபோல நீண்ட தூரம் சுற்றுலா செல்பவர்கள், புண்ணிய தலங்களிலும், பொழுது போக்கு இடங்களிலும் ஓரிரு நாட்களில் தங்கி இருந்து விட்டு, பிறகு மீண்டும் அதே டிக்கெட்டில் ரெயிலில் பயணத்தைத் தொடர்வார்கள்.

    அத்தகைய பிரேக் மற்றும் சர்க்குலர் பயண டிக்கெட்டுகள் வரும் 1-ந்தேதி முதல் பயணிகளுக்கு வழங்கப்பட மாட்டாது என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இது சுற்றுலா பயணிகளிடம் கடும் அதிர்ச்சியையும் தவிப்பையும் ஏற்படுத்தியுள்ளது.

    நீண்ட தொலைவுக்கு சுற்றுலா செல்பவர்கள் இடையிடையே தங்கி, தங்கி செல்வதால் அவர்களிடம் ஜி.எஸ்.டி. வரியை எப்படி வசூலிப்பது என்பதில் தொழில் நுட்ப சிக்கல்கள் ஏற்பட்டு இருக்கிறது. எனவேதான் பிரேக் ஜர்னி மற்றும் சர்க்குலர் ஜர்னி டிக்கெட்டுகளை யாருக்கும் வழங்க வேண்டாம் என்று ஸ்டே‌ஷன் மாஸ்டர்களுக்கு தென்னக ரெயில்வே அறிவுறுத்தியுள்ளது.

    ரெயில்வேயின் இந்த முடிவால் ஆன்மிக பயணம் மேற்கொள்பவர்களுக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது. அதே சமயத்தில் இரண்டாம் வகுப்பு படுக்கை வசதியில் பயணம் செய்பவர்களுக்கு ஜி.எஸ்.டி. வரியால் எந்த பாதிப்பும் ஏற்படாது என்று தெளிவுபடுத்தப்பட்டுள்ளது.

    Next Story
    ×