search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    சத்திரப்பட்டி அருகே வனத்துறையை கண்டித்து மலை கிராம மக்கள் திடீர் மறியல்
    X

    சத்திரப்பட்டி அருகே வனத்துறையை கண்டித்து மலை கிராம மக்கள் திடீர் மறியல்

    திண்டுக்கல் மாவட்டம் சத்திரப்பட்டி அருகே மலை கிராம மக்கள் திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் இப்பகுதியில் சுமார் 6 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

    சத்திரப்பட்டி:

    திண்டுக்கல் மாவட்டம் சத்திரப்பட்டி அருகே வடகாடு மலைப்பகுதியைச் சேர்ந்த சிறுவாட்டுக்காடு, செட்டுக் காடு, தாழையூத்து காடு மற்றும் மாட்டுப்பட்டிகாடு ஆகிய மலை கிராமங்கள் உள்ளது. இந்த மலை கிராமங்களில் பழங்குடியின மக்கள் உள்பட சுமார் 1000-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் வசித்து வருகின்றனர்.

    இந்த மலை கிராமங்களில் அடிப்படை வசதிகளான சாலை, குடிநீர், சுகாதாரம், போக்குவரத்து, மின்சாரம் ஆகியவையின்றி நாடு சுதந்திரம் அடைந்து 69 ஆண்டுகள் ஆன பின்பும் அடிப்படை வசதிகள் இன்றி பொதுமக்கள் தினமும் அவதிப்பட்டு வருகின்றனர். சிறுவட்டுக்காடு பிரிவிலிருந்து சிறுவாட்டுக்காடு மலை கிராமம் வரை சுமார் 4 கிலோ மீட்டர் வனப்பகுதியில் சாலை அமைக்கப்பட்டுள்ளது.

    இந்த பகுதியில் யானைகள் நடமாட்டம் இருப்பதால் மாலை 6.30 மணி முதல் அதிகாலை 6 மணி வரை வனத்துறையினர் பெத்தேல்புரம் அருகில் தடுப்பு அமைத்துள்ளனர். இதனால் இம்மலை கிராமங்களில் வசித்து வரும் கர்ப்பினி பெண்கள், முதியோர்கள் மற்றும் குழந்தைகள் நோய்வாய் படும்போது இரவு நேரங்களில் ஒட்டன்சத்திரம் போன்ற நகரங்களுக்கு வந்து சிகிச்சை பெறுவதில் பல்வேறு பிரச்சினைகள் உள்ளன.

    இது குறித்து கடந்த மாதம் சிறுவாட்டுக்காடு மலைப்பகுதி கிராமத்திற்கு வருகை தந்த மாவட்ட கலெக்டர் வினய், மாவட்ட வன அலுவலர் வெங்கடேஸ் ஆகியோருடன் வனத்துறையினர் அமைத்துள்ள தடுப்பினை எடுக்க கோரி பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர். இதனை கேட்ட மாவட்ட கலெக்டர் தடுப்பை அகற்றிவிடுமாறு வனத்துறைக்கு உத்தரவிட்டார்.

    ஆனால் தடுப்பு இதுவரை அகற்றப்படாததால் திடீரென 150-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் பாச்சலூர்-ஒட்டன்சத்திரம் செல்லும் சாலையில் சிறுவாட்டுக்காடு பிரிவு அருகில் திடீரென சாலை மறியலில் ஈடுபட்டனர்.

    தகவல் அறிந்த ஒட்டன்சத்திரம் காவல் ஆய்வாளர் பாலமுருகன், சப் இன்ஸ்பெக்டர் சுந்தரவடிவேல் மற்றும் வனவர் தாஜ்தீன் ஆகியோர் பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.

    வனத்துறையினர் அமைத்துள்ள கேட்டை நிரந்தரமாக அகற்றினால் தான் பஸ் மறியலை கைவிடுவோம் என பொதுமக்கள் கூறினார்கள். அதிகாரிகள் மாவட்ட வன அலுவலரிடம் பேசி வனத்துறையினர் அமைத்துள்ள தடுப்பை அகற்றி விடுவதாக கூறியதால் பொதுமக்கள் சமாதானம் அடைந்து மறியலை கைவிட்டனர். இதனால் இப்பகுதியில் சுமார் 6 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

    Next Story
    ×