search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    மது விற்பனை மூலம் கடந்த ஆண்டை விட ரூ.1,149 கோடி கூடுதல் வருவாய்
    X

    மது விற்பனை மூலம் கடந்த ஆண்டை விட ரூ.1,149 கோடி கூடுதல் வருவாய்

    கடைகள் குறைந்தபோதும் மது விற்பனை மூலம் கடந்த ஆண்டை காட்டிலும் ரூ.1,149 கோடி கூடுதல் வருவாய் கிடைத்துள்ளதாக கொள்கை விளக்க குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
    சென்னை:

    தமிழகத்தில் கடந்த 2015-ம் ஆண்டு வரை 6 ஆயிரத்து 350 மதுபான கடைகள் செயல்பட்டு வந்தது. தேர்தல் நேரத்தில் மக்களுக்கு கொடுத்த வாக்குறுதியின்படி மறைந்த முதல்-அமைச்சர் ஜெயலலிதா 500 மதுக்கடைகளை மூடுவதற்கு உத்தரவிட்டார். அவரது மறைவுக்கு பிறகு முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி மேலும் 500 மதுக்கடைகள் மூடப்படும் என்று அறிவித்தார். அதன்படி ஆயிரம் மதுக்கடைகள் மூடப்பட்டன.



    இந்த நிலையில் நெடுஞ்சாலைகளில் உள்ள மதுக்கடைகளை மூட கோர்ட்டு உத்தரவிட்டது. அதனை தொடர்ந்து நெடுஞ்சாலைகளில் இருந்த 3,321 மதுக்கடைகள் அடைக்கப்பட்டன. அவற்றில் சில கடைகள் வேறு இடங்களுக்கு மாற்றப்பட்டன. மதுக்கடைகள் குறைந்ததால் தமிழகத்திற்கு வரும் வருமானம் வெகுவாக குறையும் என்று கருதப்பட்டது. ஆனால் கடந்த ஆண்டைவிட ரூ.1,149 கோடி கூடுதலாக வருவாய் கிடைத்துள்ளது.

    உள், மதுவிலக்கு, ஆயத்தீர்வைத்துறை கொள்கை விளக்க குறிப்பில் இதுபற்றி கூறப்பட்டுள்ளதாவது:-

    * சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பின்படி, 3,321 மதுக்கடைகள் 1.4.2017-ம் அன்று மூடப்பட்டுள்ளது.

    * கடந்த 2015-2016-ம் ஆண்டு ஆயத்தீர்வை வருவாய் (மதிப்பு கூட்டு வரியும் சேர்த்து) ரூ.25,845.58 கோடியாக இருந்தது. 2016-2017 (மே மாதம் வரை) ரூ.26,995.25 கோடியாக உயர்ந்தது. (அதாவது, ஒரே ஆண்டில் 1,149.67 கோடி ரூபாய் வருவாய் அதிகரித்து இருக்கிறது.)

    * அயல்நாட்டு மதுபானங்கள் மீதான சிறப்பு கட்டணம் மூலம் வருவாயாக 2015-2016-ம் ஆண்டில் ரூ.7.74 கோடி கிடைத்தது. 2016-2017-ம் ஆண்டில் ரூ.10.80 கோடி வருவாயாக கிடைத்துள்ளது. (இது கடந்த ஆண்டை காட்டிலும் ரூ.3.06 கோடி அதிகமாகும்.

    * தமிழ்நாட்டில் இருந்து வெளிநாடுகளுக்கு இந்த ஆண்டு பீர் மதுவகை 1,27,150 பெட்டிகளில் ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு 5,56,490 பெட்டிகள் ஏற்றுமதி செய்யப்பட்டு இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
    Next Story
    ×