search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ஜி.எஸ்.டி. வரி: மத்திய அரசைக் கண்டித்து ஓட்டல்கள், மருந்து கடைகள் இன்று மூடல்
    X

    ஜி.எஸ்.டி. வரி: மத்திய அரசைக் கண்டித்து ஓட்டல்கள், மருந்து கடைகள் இன்று மூடல்

    மத்திய அரசைக் கண்டித்து மாநிலம் முழுவதும் இன்று ஓட்டல்கள் மூடப்படுகிறது. அதேநேரத்தில் மருந்து கடைக்காரர்களும் கடையடைப்பு போராட்டம் நடத்துகின்றனர்.
    சென்னை:

    இந்தியா முழுவதும் ஒரே மாதிரியான வரி விதிப்பினை வகை செய்யும் சரக்கு மற்றும் சேவை வரி (ஜி.எஸ்.டி.) முறையை அமல்படுத்த மத்திய அரசு இறுதி முடிவு எடுத்து ஜூலை 1-ந்தேதி முதல் நாடு முழுவதும் நடைமுறைபடுத்த உள்ளது. ஜி.எஸ்.டி. வரி 4 அடுக்காக 5, 12, 18, 28 சதவீதம் என பிரிக்கப்பட்டுள்ளது.

    இந்த புதிய வரி விதிப்புக்கு பல்வேறு தரப்பிலும் எதிர்ப்பு கிளம்பி உள்ளது. குறிப்பாக வணிகர்கள் இந்த வரி விதிப்புக்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர். ஜி.எஸ்.டி. வரி விதிப்பு பொதுமக்களுக்கு கடுமையாக பாதிப்பை ஏற்படுத்தும் என்றும் விலைவாசி உயரும் என்றும் குற்றம்சாட்டி வருகின்றனர்.

    அது மட்டுமல்ல ஓட்டல்கள் நடத்துபவர்களுக்கு பெரும் பாதிப்பு ஏற்படும் என்றும் கூறப்படுகிறது. இதனால் தென் மாநிலங்கள் முழுவதும் இன்று ஓட்டல்களை அடைத்து ஓட்டல் உரிமையாளர் சங்கத்தினர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். அதே நேரத்தில் மருந்து கடைக்காரர்களும் இன்று கடையடைப்பு நடத்துகின்றனர்.

    மத்திய அரசு இந்த வரி உயர்வை திரும்ப பெற வலியுறுத்தி தமிழ்நாடு முழுவதும் உள்ள 1 லட்சத்து 50 ஆயிரம் ஓட்டல்கள் இன்று அடைக்கப்படும் என்றும், சென்னையில் மட்டும் 15 ஆயிரம் ஓட்டல்கள் மூடப்படும் என்று ஓட்டல் உரிமையாளர்கள் சங்கம் அறிவித்துள்ளது. தமிழகம் மட்டுமல்லாமல் ஆந்திரா, கர்நாடகா, தெலுங்கானா, புதுச்சேரி மாநிலங்களிலும் நடைபெறும் இந்த போராட்டத்தில், தென் மாநிலங்களில் மட்டும் சுமார் 5 லட்சம் ஓட்டல்கள் மூடப்படுகிறது.

    ஜூன் 3-ந்தேதி ஜி.எஸ்.டி. வரி தொடர்பாக மத்திய அரசு ஆலோசனை கூட்டம் நடத்துகிறது. இந்த கூட்டத்தில் நல்ல முடிவு எட்டாவிட்டால், இந்தியா முழுவதும் ஓட்டல்களை அடைத்து காலவரையற்ற போராட்டத்தில் ஈடுபடுவோம் என்று ஓட்டல் உரிமையாளர் சங்கம் அறிவித்துள்ளது.

    இது ஒருபுறம் இருக்க ஆன்-லைன் மூலம் மருந்து பொருட்கள் விற்பனை நடைபெறுவதை கண்டித்து மருந்து கடைக்காரர்களும் இன்று கடையடைப்பு நடத்துகின்றனர். மத்திய அரசைக் கண்டித்து இன்று காலை முதல் மாலை 6 மணி வரை மருந்து கடைகள் மூடப்படுகிறது.

    தமிழகத்தில் 3 ஆயிரம் மருந்து கடைகள் உள்ளன. இதில் 30 ஆயிரம் மருந்து கடைகள் போராட்டத்தில் பங்கேற்கின்றன. 3 ஆயிரம் மருந்து கடைகள் மருத்துவமனைகளில் உள்ளதால் அவை கடையடைப்பில் பங்கேற்கவில்லை. சென்னையில் உள்ள 5 ஆயிரம் மருந்து கடைகளில் 4 ஆயிரம் மருந்து கடைகள் அடைக்கப்படுகிறது. நாடு முழுவதும் 8 லட்சம் மருந்து கடைகள் அடைக்கப்படும் என்று தமிழ்நாடு மருந்து வணிகர்கள் சங்கம் அறிவித்துள்ளது. 
    Next Story
    ×