search icon
என் மலர்tooltip icon

    லைஃப்ஸ்டைல்

    பெண்கள் அன்றும்.. இன்றும்.. ஒரு புதிய பார்வை
    X

    பெண்கள் அன்றும்.. இன்றும்.. ஒரு புதிய பார்வை

    இன்றைய பெண்கள், ஆண்களுக்கு இணையான வேலைவாய்ப்பு, கல்வி, பொருளாதார சுதந்திரம் போன்றவற்றை பெற்றிருக்கிறார்கள். ஆனாலும் மனதளவிலும், உடல் அளவிலும் பலகீனமாகவே பார்க்கப்படுகிறார்கள்.
    மனித இனம் காடுகளில் சுற்றித்திரிந்த காலத்தில் பெண்கள் குடும்பத்தினரின் உணவுத்தேவையை பூர்த்தி செய்பவர்களாக செயல்பட்டிருக்கிறார்கள். காடுகளில் அலைந்து தானியங்கள், விறகுகள் சேகரித்து சமைத்து, உணவு வழங்கிக்கொண்டிருந்தாலும்- சிதறிய தானியங்கள் மழைநீரில் முளைத்து விளைந்து பெருகுவதை கூர்ந்து நோக்கியிருக்கிறார்கள். அதை பின்பற்றி விதைக்கவும், அறுவடை செய்யவும் கற்றிருக்கிறார்கள். அதனால் மனித சமூகத்திற்கு விவசாயத்தை பெண்களே தந்திருக்க முடியும் என்ற கருத்து நிலவி வருகிறது.

    சங்ககாலத்தில் இருந்துதான் நமக்கு இலக்கியங்களின் வாயிலாக நிறைய சான்றுகள் கிடைக்கின்றன. அந்த காலத்து சமூகத்தில் ஐந்து வகை குடும்ப அமைப்புகள் காணக்கிடக்கின்றன. அவை: தனிக்குடும்பம், கூட்டுக்குடும்பம், தந்தையை தலைமையாகக் கொண்ட குடும்பம், தாயை தலைமையாகக்கொண்ட குடும்பம், சமத்துவ குடும்பம் எனப்படுகின்றன. இவைகளில் எல்லாமே பெண்கள் முக்கியமானவர்களாக வாழ்ந்திருக்கிறார்கள்.

    அச்சம், மடம், நாணம், பயிற்பு என்பவை பெண்களின் அறங்களாகவும், வீரம், போர், வெற்றி, ஈகை, புகழ், ஒழுக்கம் இவை ஆண்களின் அறங்களாகவும் அக்கால இலக்கியங்களில் கூறப்பட்டுள்ளது. பிற்காலத்தில் ‘கற்பு’ என்ற அறம் பெண்களின் தலையாய அறமாக வற்புறுத்தப்படுகின்றது.

    ‘திருமணத்தின் மூலம் ஒரு குடியிருப்பில் கணவன், மனைவி, தந்தை, தாய், மகன், மகள், தம்பி, தங்கை போன்ற உறவுமுறைகளுடன் பொதுப்பண்பை படைத்து பாதுகாத்து வளர்வதே குடும்பம்’ என்று பிரிட்டன் கலைக்களஞ்சியம் கூறுகிறது. அதற்கு ஆயிரமாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே தமிழ்ச்சமூகம் அதன் வழியே வாழ்ந்து காட்டியிருக்கிறது என்பதை சங்க இலக்கியங்கள் நமக்கு உணர்த்துகின்றன. இதன் வாயிலாக தமிழ்ச்சமூகம் பண்பாட்டில் உச்சத்தில் இருந்ததை உணர்ந்துகொள்ள முடிகிறது.

    அவைகளில் கற்பு என்ற ஒழுக்கம் சார்ந்த அறம் பெண்களுக்கு மட்டுமே வலியுறுத்தப்படுவதும் நோக்கத்தக்கது. அதிலும் தலைவன், தலைவியை பிரிந்து பரத்தையருடன் செல்வதும் கூறப்படுகிறது. பிரிவு, துயரம் இவற்றை தலைவியே அடைகிறாள். தலைவனை பிரிந்து தலைவி துயர் அடைந்தாலும் தனது குழந்தைகளை வளர்த்து ஆளாக்கும் கடமையை அவள் துறந்தவள் அல்ல. அவ்வாறு ஒழுக்கம் தவறாமல் கடமையை செய்யும் மகளிரே பாட்டுடை தலைவியாக போற்றப்படுகிறாள். சமுதாயத்தால் துயரடைந்து தன் நிலைமாறும் பெண்கள் பரத்தையராக வர்ணிக்கப்படுவதையும் இலக்கியங்களில் காண கிடைக்கிறது.

    அன்றைய பெண்களின் நிலை அதுவென்றால், இன்றைய பெண்களின் நிலை என்ன?

    இன்றைய பெண்கள், ஆண்களுக்கு இணையான வேலைவாய்ப்பு, கல்வி, பொருளாதார சுதந்திரம் போன்றவற்றை பெற்றிருக்கிறார்கள். ஆனாலும் மனதளவிலும், உடல் அளவிலும் பலகீனமாகவே பார்க்கப்படுகிறார்கள். விதிவிலக்காக ஒரு பகுதி பெண்கள் அவர்களின் தந்தை அல்லது கணவனின் சமூக அந்தஸ்தால் மதிக்கப்படுகிறார்கள். பெரும்பாலான பெண்கள் பலகீனமானவர்களாகவே பார்க்கப்படுகின்றார்கள்.

    இதற்கான காரணங்களை ஆராயும் போது காரணிகளாக சுட்டப்படுவது ஆண்கள் மட்டுமல்ல, பெண்களும்தான். இன்னும் ஆழமாக சிந்தித்தால் பெண்களே முதற்காரணமாகின்றார்கள்.

    பெண்களின் வாழ்க்கையை முக்கிய மூன்று நிலைகளாக பிரிக்கலாம். பகுத்து ஆராய்ந்தால் முதல் நிலை, மகள். இந்த நிலையில் அவள் குடும்பத்தினரின் அன்பையும், அரவணைப்பையும் கல்வியையும் பெறுகிறாள். இரண்டாம் நிலையில் மனைவி, மருமகள், இளம் தாய் ஆகிய மூன்று முகங்களை அவள் கொண்டிருக்கிறாள். இந்த காலகட்டத்தில் இன்றைய பெண்கள் நிறைய பொறுப்புகளையும், பொருளாதார சுமைகளையும் சுமக்க வேண்டிய கட்டாயத்திற்கு உள்ளாக்கப்படுகிறார்கள். அதனால் மனஉளைச்சலுக்கு ஆளாகிறார்கள்.

    மூன்றாவது முதிர்ந்த தாய் என்ற நிலையை அடைகிறாள். இந்த நிலையில் பெண்கள் குடும்பத்தினரால் புறக்கணிக்கப்பட்டாலும், சமுதாயத்தின் அரவணைப்புடன் பாதுகாக்கப்படுகிறார்கள்.



    இவைகளை எல்லாம் கணக்கிட்டு பார்க்கும்போது, புகுந்த வீட்டில்தான் பெண் அதிக சிரமங்களை சந்திக்கிறாள். அங்கு புதிய உறவினர்களான கணவனது சகோதரி, தாய் ஆகியோர்களிடம் இயல்பான அன்பை வெளிப்படுத்த மருமகளாகிய அவள் தயக்கம்கொள்கிறாள். இதனை புரிந்துகொண்டு வழிநடத்த மாமியார் முன்வராததால் உறவில் தடுமாற்றம் ஏற்படும். முதல் கோணல், முற்றிலும் கோணல் என்ற வழக்கிற்கு ஏற்ப இறுதிவரை இந்த உறவு ஒரு நெருடலுடனே தொடர்வதை காண முடிகிறது.

    ஒரு ஆணை பெற்று- வளர்த்து ஆளாக்குவதில் அவனது தாய்க்கு பெரும்பங்கு உண்டு. அவனது வளர்ச்சியில் அவனது சகோதரிகளுக்கும் பங்கு உண்டு. அதனால் அவர்கள் அவனோடு பாசத்தால்

    பிணைக்கப்பட்டுள்ளனர். இந்தநிலையில் அவனது திருமணத்திற்கு பின், வேறு ஒரு குடும்பத்தில் இருந்து மனைவியாக அவள் வருகிறாள். அவள் வளர்ந்த சூழ்நிலைகளையும், பெற்றோரையும் விட்டு தனது கணவனுடன் வாழ்நாள் முழுவதும் வாழும் நோக்கத்துடன் அந்த இளம் பெண் புகுந்த வீட்டிற்குள் நுழைகிறாள்.

    அவளுக்கு அன்பான, ஆதரவான சூழல் தேவைப்படுகிறது. அதை அவளது கணவனது குடும்பத்தினரிடம் இருந்து எதிர்பார்க்கிறாள். அவள் பொருளாதார, சமூக, உளரீதியாக கணவனை சார்ந்து வாழ விரும்புகிறாள்.

    அதே நேரத்தில் அவனது பாசத்திற்கும், வருமானத்திற்கும் அதுவரை உரிமை கொண்டாடிய அன்னையும், சகோதரியும் அவன் மனைவி மேல் பொறாமையும், காழ்ப்புணர்ச்சியையும் கொள்கின்றனர்.

    அவள், அவனது அன்பிலும், பொருளாதாரத்திலும் பங்குபெற வந்த போட்டியாளராகவும், குடும்பத்தின் ஒற்றுமையை குலைக்க வந்தவளாகவும் மாமியார், நாத்தனார் என்ற உறவுகளால் கருதப்படுகிறாள். அதை எதிர்த்து தனித்து போராடும் மனைவி ஒரு கட்டத்திற்குமேல் போராட முடியாமல் கணவன் குடும்பத்தை விட்டு பிரியவும் துணிகிறாள். இந்த கட்டத்தில் சமுதாய அழுத்தத்தை மீறி அவளது பிறந்த வீட்டில் அரவணைப்பு கிடைத்த பெண்கள் வாழ்க்கை போராட்டத்தில் வெற்றி பெறுகிறார்கள்.

    பிறந்த குடும்பத்தின் அரவணைப்பு கிடைக்காத பட்சத்தில் சமூக விரோதிகளின் கைகளில் சிக்கி சீரழிகிறாள். அல்லது தற்கொலை முடிவுக்கு தள்ளப்படுகிறாள் என்பதே உண்மை.

    இந்த மாதிரியான நிலை ஏற்படாமல் இருக்க, பிறந்த வீட்டிலே மகளுக்கு தேவையான படிப்பினைகளை தாய் கற்றுக்கொடுக்கவேண்டும். மகளுக்கு திருமணம் நிச்சயிக்கப்பட்ட உடனே தாய், அவளை மனோரீதியாகவும், உடல் ரீதியாகவும் தயார்செய்யவேண்டும். புகுந்த வீட்டில் அவளுக்கு எப்படி எல்லாம் உறவுச்சிக்கல்கள் ஏற்படும்? யார்- யாருக்கு முன்னுரிமையை கொடுக்கவேண்டும்? பிரச்சினைகள் உருவாகாமல் வாழ்க்கை நடத்துவது எப்படி? பிரச்சினைகள் வந்தால் எதிர்கொள்வது எப்படி? என்றெல்லாம் சொல்லிக்கொடுக்கவேண்டும். அதுபோல் பொருளாதார நெருக்கடி வராத அளவுக்கு வாழ்க்கை நடத்துவது எப்படி என்றும் கற்றுக்கொடுக்கவேண்டும். இத்தகைய முன்னெடுப்பு நட வடிக்கைகளை மண வாழ்க்கைக்கு ஓரிரு ஆண்டுகள் முன்னதாகவே தொடங்கிவிடலாம்.

    இதில் குறிப்பிடத்தக்க விஷயம் என்னவென்றால், இப்போது பெரும்பாலான பெற்றோர் ஒரே ஒரு குழந்தை மட்டுமே பெற்றுக்கொள்கிறார் கள். ஒற்றையாய் வளர்க்கப்படுவது பெண் குழந்தையாக இருந்துவிட்டால் அதிக செல்லம் கொடுத்து வளர்க்கிறார்கள். அப்படி வளர்க்கப் படும் பெண்களே, புகுந்த வீட்டிற்கு சென்ற பின்பு அதிக அல்லல்படுகிறார்கள். பெற்றோர் இதுபோன்ற ஒற்றைப் பெண் குழந்தைகள் விஷயத்தில் அதிக கவனம் செலுத்தவேண்டும்.

    திருமணமாகி கணவர் வீட்டிற்கு செல்லும் பெண்கள் புதிய உறவு களால் சூழப்படுகிறார்கள். அந்த உறவுகளை சரிசெய்யவும், மேம்படுத்தவும் அவள் புத்திசாலித்தனமாக களமிறங்கவேண்டும். அதற்கு அன்பு, பொறுமை, தியாகம், விட்டுக்கொடுத்தல் போன்றவைகளை ஆயுதங்களாகக்கொள்ளவேண்டும்.
    Next Story
    ×