search icon
என் மலர்tooltip icon

    லைஃப்ஸ்டைல்

    பலவித உணவுகளை விரைவாய் சமைக்கும் எலக்டிரிக் ரைஸ்குக்கர்
    X

    பலவித உணவுகளை விரைவாய் சமைக்கும் எலக்டிரிக் ரைஸ்குக்கர்

    எந்தவித டென்ஷனும் இன்றி சமைக்க உதவும் எலக்டிரிக் ரைஸ் குக்கர்கள் தற்போது அதிக பயன்பாட்டு வசதி மற்றும் தொழில்நுட்ப வசதிகளுடன் கிடைக்கின்றன.
    அலுவலகத்திற்கு செல்லும் பெண்கள் விரைவாய் சாதம் சமைக்க உதவுவது எலக்ட்ரிக் ரைஸ் குக்கர்தான். ஏனென்றால் தினசரி சாதம் தயாரிக்கும் பணியை கேஸ் அடுப்பில் செய்யும்போது நாம் அதனுடன் நின்று கொண்டு சாதம் குழைய விடாமல் பார்த்து பதமாக வடித்து எடுக்க வேண்டும். இந்நேரத்தில் நாம் கிளம்ப தேவையான வேறு பணிகளை மேற்கொள்ளலாம். இதற்கெனவே பணிக்கு செல்லும் பெண்கள் எலக்டிரிக் ரைஸ் குக்கரை அதிகம் விரும்புகின்றனர். எலக்டிரிக் ரைஸ் குக்கரில் சாதம் குழையாமல், தனித்தனியாக நன்றாக வேக வைக்க முடிகிறது. அதுபோல் கேஸ் அடுப்பில் சாதம் வேகும்போது பொங்கி வழிந்து அடுப்பையும், பர்னரையும் ஒரு வழி பண்ணிவிடும்.

    எனவே சுலபமாக, எந்தவித டென்ஷனும் இன்றி சமைக்க உதவும் எலக்டிரிக் ரைஸ் குக்கர்கள் தற்போது அதிக பயன்பாட்டு வசதி மற்றும் தொழில்நுட்ப வசதிகளுடன் கிடைக்கின்றன.

    விரைவாய் சமைக்க உதவும் எலக்டிரிக் ரைஸ் குக்கர்:-

    எலக்டிரிக் ரைஸ் குக்கர் முன்பு சிறிய அளவிலானதாக மட்டுமே கிடைத்தது. தற்போது ஒரு பெரிய குடும்பத்திற்கு தேவையான அளவு அதிகப்படியான அரிசியை வேககூடிய 4 லிட்டர், 5 லிட்டர் கொள்ளளவுடன் கிடைக்கின்றன. அதிகபட்ச அளவு அரிசியையும் விரைவாய் குறைந்த நேரத்தில் வேக வைக்கும் திறன் கொண்டவைகளாக உள்ளன. வீடுகளை தவிர்த்து உணவகங்களுக்கு ஏற்ற பெரிய ரைஸ் குக்கர்களும் தற்போது வருகின்றன. இந்த ரைஸ் குக்கர்கள் அனைத்தும் ஆட்டோமெடிக் வசதி உள்ளதால் ஒரே தொடுதலில் சிறப்பான பணிகளை மேற்கொள்கின்றன. அரிசியை அதன் சத்துகள் குறையாதவாறு மேம்பட்ட வெப்ப பாய்ச்சலை வெளிபடுத்தி வேக வைப்பதில் எலக்டிரிக் ரைஸ் குக்கர் சிறப்புடன் செயல்படுகிறது.

    இதிலுள்ள மைக்ரோ பிரஷர் கண்ட்ரோல் தொழில்நுட்பம் பொங்கி வரச் செய்யாமல் கட்டுப்படுத்துகிறது.



    சாதம் மட்டுமல்லாது பிற சமையல்களும்:-


    எலக்டிரிக் ரைஸ் குக்கர் என்றவுடன் சாதம் சமைக்க மட்டும் என்பதல்லாமல் தற்போது இட்லி, இடியாப்பம், காய்கறிகள், கொழுக்கட்டை, இறைச்சி, பாஸ்தா, நூடுல்ஸ் போன்ற பலவற்றை சமைத்து உண்ண வசதியான அமைப்பாக உள்ளது.

    இதற்கென தனிப்பட்ட இரண்டு டிஸ்பேன் மற்றும் இட்லி, இடியாப்ப தட்டுகள், பாஸ்தா பேன், காய்கறி வேகவைக்க தனி ட்ரே என பல இணைப்புகளுடன் எலக்ட்ரிக் ரைஸ் குக்கர் வருகின்றன. இதன் மூலம் ஒரே நேரத்தில் சாதம் வேக வைக்கும்போதே மேலே தனி ட்ரே அமைப்பில் காய்கறிகளை வேக வைத்து கொள்ளலாம்.

    சூடாக பரிமாற உதவும் ரைஸ் குக்கர்:-

    நாம் சாதம் வேக வைத்த பின் அதுவே அதன் சூடாக வைக்கும் அமைப்பிற்கு மாறிவிடும். இதன் மூலம் சாதம் 5 மணி நேரம் வரை சூடாகவே இருக்கும். இதன் வாயிலாக நாம் எப்போது வேண்டுமானாலும் சுடச்சுட சாதம் சாப்பிட வசதி ஏற்படுகிறது. ரைஸ் குக்கர் பாதுகாப்பு அளவிற்கு அதிகமாக வெப்பநிலையை தொடும்போது தானாகவே ஆப் ஆகிவிடும். எனவே எலக்டிரிக் ரைஸ் குக்கர் பயன்படுத்தும்போது ஏதும் பயப்பட தேவையில்லை. அதிக எடை மற்றும் தண்ணீர் இன்றி இயக்கும்போது பாதுகாப்பு எச்சரிக்கை செய்து நம்மை பாதுகாத்திடும்.

    அழகிய வடிவமைப்புடன் எலக்டிரிக் ரைஸ் குக்கர்:-


    வீட்டின் சமையல் அறையில் அழகுடன் இடம் பெறுதல் வேண்டி அதன் மேற்புற அமைப்பு அழகிய தோற்றத்துடன் வண்ணமயமான பூ வேலைப்பாடு மற்றும் வழவழப்புடன் உருவாக்கப்பட்டுள்ளது. இதனால் சமையல் அறையில் ஓர் அலங்கார வீட்டு உபயோக பொருள் என்றவாறு காட்சி தருகின்றது. கண்கவர் மெட்டாலிக் வண்ண புதிய எலக்டிரிக் ரைஸ் குக்கர் அனைவரையும் கவர்கின்றன. சுவைமிகு புலாவ், பிரியாணி மற்றும் சூப் வகைகள், ஆவியில் வேக வைக்கும் உணவுகள் என்றவாறு அனைத்து உணவு சமையல் அறையும் விரைவாய் நமக்கு ஏற்ற சுவையுடன் தயாரிக்க பெரிதும் உதவுகிறது.
    Next Story
    ×