search icon
என் மலர்tooltip icon

    லைஃப்ஸ்டைல்

    சுறுசுறுப்பு தரும் சைக்கிள் பயிற்சி
    X

    சுறுசுறுப்பு தரும் சைக்கிள் பயிற்சி

    சைக்கிள் ஓட்டுவதால் உடல் பெறும் நன்மைகள் ஏராளம். நமது உடலை கட்டுகோப்பாக வைக்க, உதவும் எளிய பயிற்சி சைக்கிள் ஓட்டுவதுதான்.
    ஒவ்வொரு நாளும் விரல் நுனியில், அறிவியல் உலகத்தோடு வாழ்ந்து கொண்டிருக்கும் இந்த வேளையிலும் நம்மை ஏதாவது ஒரு நோய் தாக்கி கொண்டிருப்பதும் நடந்து கொண்டு தான் இருக்கிறது. இதற்கு என்ன காரணம். முறையான உணவும், சரியான உடற்பயிற்சியும் இல்லாதது தான் என்கிறார்கள் நிபுணர்கள்.

    நம் மூதாதையர் வாழ்ந்த காலத்தில் ஆரோக்கியமான உணவும், அதிகமான உடல் உழைப்பும் இருந்தது. நம் முன்னோர் பயன்படுத்திய பழைய கருவிகள், பொருட்கள், அனைத்தும் ஏதோ ஒரு வகையில் உடலை வலிமையாக்குவதாக இருந்தது. அது அவர்களின் ஆரோக்கியத்திற்கு துணை புரிந்தது. ஆனால், இன்று பெரும்பாலான வேலைகளை எந்திரங்கள் செய்து முடித்துவிட, நமது உடல் உழைப்பு நாளுக்கு நாள் குறைந்து வருகிறது. இது நோய்கள் பெருக்கத்திற்கு முக்கிய காரணமாக அழைக்கப்படுகிறது.

    மோட்டார் பைக்குகளின் மோகத்தால் இன்றைய தலைமுறையினர் பலரும் சைக்கிளின் பெருமையை உணர்வதில்லை. சைக்கிள் ஓட்டும் பழக்கத்தை மறந்து கொண்டிருக்கிறார்கள். சைக்கிள் ஓட்டுவதால் உடல் பெறும் நன்மைகள் ஏராளம்.

    முதன் முதலாக 19-ம் நூற்றாண்டில் ஐரோப்பாவில் அறிமுகமான சைக்கிள், ஆரம்பத்தில் வெளாசிபிட் என்று பெயரிடப்பட்டு, பிற்காலத்தில் சைக்கிள் என மாறியது. ஆரம்பத்தில் மரப்பலகையில் செய்யப்பட்ட சைக்கிள் பின்னர் ரப்பர் சக்கரம் கொண்டதாக மாற்றம் பெற்றது. சக்கரம், செயின், பெடல் என பல்வேறு மாற்றங்களை பெற்று இன்றைய நவீன சைக்கிள் கடந்த நூற்றாண்டில்தான் புதுவடிவம் பெற்றது.

    நமது உடலை கட்டுகோப்பாக வைக்க, உதவும் எளிய பயிற்சி சைக்கிள் ஓட்டுவதுதான். சைக்கிள் ஓட்டுவதால் உடல் உறுப்புகள் அனைத்தும் ஒருங்கிணைந்து செயல்படுகிறது. உடலுக்கும், உள்ளத்துக்குமான தொடர்பினை வலுப்படுத்துகிறது. மூளைக்கு செல்லும் ரத்த ஓட்டம் அதிகரித்து ஹிப்போகேம்பஸ் பகுதியில் புதிய செல்கள் உருவாக காரணமாக இருக்கிறது. இதனால் நினைவாற்றல் மேம்படும்.



    சைக்கிள் ஓட்டுவதால் இதயதுடிப்பை அதிகப்படுத்துவதோடு, இதயத்தை வலுப்படுத்துகிறது. எலும்பு மற்றும் மூட்டுகளை உறுதிப்படுத்துகிறது. தசைகளை வலிமையாக்குகிறது.

    பாதத்தால் சைக்கிளை மிதிப்பதால் கால் தசைகள் கூடுதல் பலம் பெறுகின்றன. கை, கால் தசைகள் உறுதி பெறுகின்றன. உடலில் ரத்த ஓட்டத்தை சீராக்குகிறது. உடல் வெப்பத்தையும் வியர்வையையும் வெளியேற்றுகிறது.

    தினமும் காலையில் 20 நிமிடம் சைக்கிள் பயணம் மேற்கொள்ளும் போது, உடற்பயிற்சிக்கு ஈடாக அமையும். இதனால் கை, கால், தசை நரம்புகள் இறுக்கத்தை போக்கி மிருதுவான தேகத்தை தரும். உடலில் அனைத்து பாகங்களும் இயங்க சிறந்த உடற்பயிற்சி சைக்கிள் ஓட்டுவது தான். இதனால் சுறுசுறுப்புடன் அன்றைய நாளின் வேலைகளை முடிக்க உதவும்.

    காலையில் எழுந்து இரண்டு கிலோ மீட்டர் தூரம் சைக்கிள் ஓட்டுவது, 10 கிலோ மீட்டர் தூரம் ஓடுவதற்கு சமம் ஆகும். உடம்பில் இருக்கும் அசுத்தங்களை வியர்வையாக வெளியேற்ற உதவும் சிறந்த உடற்பயிற்சியும் சைக்கிள் ஓட்டுவது தான்.

    குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை மகிழ்ச்சியுடன் அனுபவித்து செய்யக்கூடியது. இதன்மூலம் புதிய இடங்களையும் இயற்கை காட்சிகளையும் ரசிக்கும் வாய்ப்பும் அனுபவமும் கிடைக்கும். சிறு வயது முதலே சைக்கிள் ஓட்டுவதால், உடல் பருமன் ஏற்படுவதை தடுக்கலாம். நாம் சாப்பிட்ட உணவு பொருட்களில் இருக்கும் அதிகமான கலோரிகளை எரிக்கும் திறன் சைக்கிள் ஓட்டுவதால் கிடைக்கிறது.

    நம்மால் முடிந்த அளவிலான தூரத்துக்கு செல்ல எப்போதும் சைக்கிளையே பயன்படுத்தினால், அது சுற்றுச்சூழலுக்கும் நன்மை தருவதாக அமையும். எனவே ஆரோக்கியமும், சுகாதாரமும் தந்திடும் சைக்கிளை போற்றுவோம். பயன்படுத்துவோம்.
    Next Story
    ×