search icon
என் மலர்tooltip icon

    லைஃப்ஸ்டைல்

    குழந்தைகள் தோல்வியை பழக வேண்டும்
    X

    குழந்தைகள் தோல்வியை பழக வேண்டும்

    தோல்வியைப் பற்றியே யோசித்துக்கொண்டிருக்காமல், அடுத்து என்ன செய்யலாம் என்று யோசிக்கும்போது, அந்தக் குழந்தைக்குள் பிரச்சனைகளை சமாளிக்கும் திறன் வளரும்.
    ஒற்றைக் குழந்தைகள் மட்டுமே உள்ள நியூக்ளியர் குடும்பங்களில், குடும்பத்தின் மொத்த கவனமும் குழந்தை மீதே குவிகிறது. அவர்கள் பசியை உணரும் முன்பே உணவூட்டப்படுகிறது. விளையாட்டுப் பொம்மைகள் வாங்கிக் குவிக்கப்படுகிறது. குழந்தை தனக்கு எது தேவை என்று யோசிப்பதற்கான வாய்ப்பே கொடுக்கப்படுவதில்லை. பெற்றோரின் அதீத கவனிப்பு, அவர்களின் வாழ்விலிருந்து அனுபவம் வழியாகக் கற்றுக்கொள்வதற்கான வாய்ப்புகளைத் தடுக்கிறது.  

    நாம் எதிர்பார்க்கும் எல்லாம் உடனே கிடைத்துவிடாது. சிலவற்றுக்குக் காத்திருக்க வேண்டும். தோல்விகளையும் சந்திக்க வேண்டி வரும் என்பதைக் குழந்தைகள் உணராமல் வளர்க்கப்படுகின்றனர். சிறு வயதில்தான் நினைத்தது கிடைக்காவிட்டால், அந்தக் குழந்தை அழுகையாகவும் அடம்பிடித்தலாகவும் வெளிப்படுத்தும். அதன் அழுகையை நிறுத்துவதற்காகவும் மனம் வருந்தக்கூடாது என்ற நோக்கத்திலும் கேட்பதை வாங்கிக் கொடுத்துவிடுகின்றனர்.



    இது தவறான நடைமுறை. குழந்தை வளர்ப்பில் பெற்றோர் திருத்திக்கொள்ள வேண்டிய விஷயங்கள் அதிகம் உள்ளன. ஒரு குழந்தை நல்ல விஷயங்களைச் செய்யும்போது, பாராட்டி உற்சாகப்படுத்த வேண்டும். அவர்கள் தன்னம்பிக்கை அதிகரிக்கும். அதே குழந்தை தவறு செய்யும்போது தண்டிப்பதால், குழந்தை கோபம்கொள்கிறது. இங்கே தண்டிப்பதற்குப் பதிலாக, 'நீ செய்தது தவறு' எனப் புரியவைக்க வேண்டிய பொறுப்பு பெற்றோருக்கு உள்ளது.

    குழந்தைகளின் சின்னச் சின்ன எதிர்பார்ப்புகள் தோல்வியில் முடியும்போது, சமாதானப்படுத்துவது தவறு. மாறாக, 'நடந்தது நடந்துவிட்டது அடுத்து என்ன செய்யலாம்?' என்று உங்கள் குழந்தையிடமே கேளுங்கள். தோல்விக்கான காரணங்களை குழந்தைகளிடம் தெளிவாகவும் வெளிப்படையாகவும் கலந்துரையாடுங்கள். எதையெல்லாம் தவிர்த்திருக்கலாம் என்று ஆலோசித்து தன்னை மதிப்பிட்டுக்கொள்ளும் வாய்ப்பை குழந்தைக்குக் கொடுங்கள்.

    தன்னிடம் மாற்ற வேண்டிய குறைகள் இவைதான் என்று குழந்தைகள் மனம் பட்டியலிட்டுக்கொள்ளும். அவற்றை மாற்றவும் முயற்சி செய்யும். இதுபோன்ற விஷயங்கள் குழந்தைக்குள் தானாகவே நடக்கும். தோல்வியைப் பற்றியே யோசித்துக்கொண்டிருக்காமல், அடுத்து என்ன செய்யலாம் என்று யோசிக்கும்போது, அந்தக் குழந்தைக்குள் பிரச்சனைகளை சமாளிக்கும் திறன் வளரும்.
    Next Story
    ×