search icon
என் மலர்tooltip icon

    லைஃப்ஸ்டைல்

    குழந்தைகளின் சிந்தனையை செதுக்குங்கள்
    X

    குழந்தைகளின் சிந்தனையை செதுக்குங்கள்

    நிதானமாக சிந்தித்து செயல்படும் பழக்கத்தை குழந்தை பருவத்திலேயே தங்கள் பிள்ளைகளிடம் உருவாக்குவது பெற்றோரின் பொறுப்பு. சிறுவயதில் இருந்தே அவர்களின் சிந்தனை திறனை கூர்தீட்டி மெருகேற்ற வேண்டும்.
    நெருக்கடியான சூழ்நிலைகளிலும் நிதானமாக சிந்தித்து செயல்படுகின்ற ஆற்றல் படைத்தவர்கள் எல்லா சிக்கல்களையும் எளிதாக தகர்த்தெறிந்து வாழ்க்கையில் முன்னேறுவார்கள். சுயமாக சிந்தித்து செயல்படுபவர்களிடம் தேவையற்ற மனக்குழப்பங்கள் எட்டிப்பார்க்காது. அப்படி நிதானமாக சிந்தித்து செயல்படும் பழக்கத்தை குழந்தை பருவத்திலேயே தங்கள் பிள்ளைகளிடம் உருவாக்குவது பெற்றோரின் பொறுப்பு. சிறுவயதில் இருந்தே அவர்களின் சிந்தனை திறனை கூர்தீட்டி மெருகேற்ற வேண்டும்.

    குழந்தைகளிடம் சிந்திக்கும் ஆற்றல் நிறைய உண்டு. சிலசமயங்களில் அவர்கள் கேட்கும் கேள்விகள் சம்பந்தமில்லாமல் இருப்பதாக பெற்றோர் நினைப்பார்கள். ஆனாலும் அப்படி கேள்வி கேட்கக்கூடாது என்று தடை போடக்கூடாது. அவர்களின் சிந்தனையை பிரதிபலிக்கும் கேள்விகளுக்கு பொருத்தமான பதிலை சொல்லும் பக்குவம் கொண்டவர்களாக பெற்றோர் விளங்க வேண்டும். எந்தவொரு விஷயமாக இருந்தாலும் அதை அப்படியே ஏற்றுக்கொள்ளும் மனநிலைக்கு குழந்தைகளை தள்ளிவிடக்கூடாது. அதுசம்பந்தமான கேள்விகள் கேட்கவும், விவாதிக்கவும் குழந்தைகளை ஊக்கப்படுத்த வேண்டும்.

    தங்கள் குழந்தை மற்றவர்களை விட திறமைமிக்கவர்களாக இருக்க வேண்டும், சாதனையாளராக திகழ வேண்டும் என்பது பெரும்பாலான பெற்றோரின் விருப்பமாக இருக்கிறது. அதற்கு குழந்தைகளை தயார்படுத்தும்போது அவர்களின் சிந்தனை திறனுக்கு எல்லை வகுத்துவிடுகிறார்கள். ஏதாவது ஒரு குறிக்கோளை அவர்களின் மனதில் நிறுத்தி அதை நோக்கியே அவர்களின் சிந்தனையை படரவிட்டு விடுகிறார்கள். அது அவர்களின் மற்ற தனித்திறன்களை வெளிப்படுத்துவதற்கு முட்டுக்கட்டை போட்டு விடும்.

    அவர்களின் சிந்தனைகளுக்கும், கருத்துகளுக்கும் செவி சாய்க்க வேண்டும். அதைவிடுத்து பெற்றோரின் கருத்துக்களை அவர்கள் மீது திணிப்பது அவர்களின் சிந்தனைத் திறனுக்கு குந்தகம் விளைவிப்பதாக அமைந்துவிடும். குழந்தைகள் தவறு செய்வது இயல்பானது. அவர்களின் குறைகளை நிவர்த்தி செய்வதற்கு முயற்சிக்க வேண்டுமே தவிர, செய்த தவறுகளை சுட்டிக்காட்டி தண்டிக்கக் கூடாது. தண்டனை அவர்களின் தன்னம்பிக்கையை குறைத்துவிடும்.
    Next Story
    ×