search icon
என் மலர்tooltip icon

    லைஃப்ஸ்டைல்

    குழந்தைகளின் மேதாவித்தனமும் அதனால் உருவாகும் துயரங்களும்
    X

    குழந்தைகளின் மேதாவித்தனமும் அதனால் உருவாகும் துயரங்களும்

    ரியாலிட்டி ஷோக்களில் ‘தோற்றதாக’ கருதப்படும் குழந்தைகளிடம் தாழ்வு மனப்பான்மையும், குறைந்த சுயமதிப்பு உணர்வும் குடியேறும் என்பதை பெற்றோர் உணர்வதில்லை.
    காட்சி 1: அந்த பிரபல டி.வி. ரியாலிட்டி ஷோவில் பங்கேற்ற சிறுவன், நடுவர்களில் ஒருவரான பெண் பாடகியைப் பார்த்து, தன்னை திருமணம் செய்துகொள்ள முடியுமா என்று கேட்கிறான். பாடகி ‘நாணுகிறார்’. பார்வையாளர்கள் ‘கொல்’லென்று சிரிக்கிறார்கள்.

    காட்சி 2: அந்த நடனப் போட்டி நிகழ்ச்சியில், ஆபாச எல்லையை மீறும் பாடலுக்கு வாயசைத்து, இடுப்பை வளைத்து நெளித்து ஆடுகிறாள், அச்சிறுமி. நடன அசைவுகளும், பாடல் வரிகளும் ஆபாசம் என்பது அச்சிறுமிக்குத் தெரியாது. நிகழ்ச்சியின் நடுவர்கள், அதில் பங்கேற்றிருக்கும் பார்வையாளர்கள், பெற்றோருக்குக்கூடவா?

    காட்சி3: பெரிய பெண் போன்று நிகழ்ச்சியில் நடித்த சிறுமி, நடித்து முடித்தபிறகு தான் ஒரு காலத்தில் ஒரு வேளை சாப்பாட்டுக்கே எப்படி எல்லாம் கஷ்டப்பட்டேன் என்று கண்ணீர் கசிய (நடிப்பில்) விவரிக்கிறாள். அப்போது அந்த சிறுமியின் விவரிப்பு, வார்த்தைகள் எல்லாமே பெரிய மனுஷத்தனம்.

    ‘டி.ஆர்.பி.’யை உயர்த்துவதற்காக தொலைக்காட்சிகள் பின்பற்றும் உத்திகளில், குழந்தைகளின் குழந்தைத்தனம் காணாமல்போகிறது என்ற குற்றச்சாட்டு பரவலாக எழுகிறது. அது எந்த அளவு நிஜம்?

    இதுகுறித்து அலசி ஆராய்ந்தால், முற்றிலுமாக உண்மையில்லை என்று ஒதுக்கிவிட முடியாது. இன்று எல்லா டி.வி.களிலும் எல்லா வகை நிகழ்ச்சிகளும் இடம்பெறுகின்றன.

    இந்நிலையில், அவை ஒன்றை ஒன்று முந்தும் முயற்சியில்தான், தங்கள் நிகழ்ச்சிகளில் பங்கேற்கும் குழந்தைகளின் குழந்தைத்தனத்தைப் பலிகொடுக்கிறார்கள் என்று கூறப்படுகிறது. ‘உங்க அம்மா கோபப்படும்போது அவரை உங்கப்பா எப்படி சமாதானப்படுத்துவார்?’ என்று நிகழ்ச்சித் தொகுப்பாளர் கேட்க, ‘அப்போ அப்பா, புஜ்ஜிம்மா, செல்லக்குட்டிம்மான்னு கொஞ்சுவார், உம்மா கொடுப்பார்’ என்று மழலைக் குரலில் கூறுகிறது, குழந்தை. பார்வையாளர் பகுதியில் அமர்ந்திருக்கும் அந்த அம்மாவும், அப்பாவுமே ரசித்துச் சிரிக்கிறார்கள்.

    குழந்தைகளிடம் மறைந்திருக்கும் திறமையை வெளிக்கொணர்கிறோம், போட்டித் திறனை வளர்க்கிறோம், அதற்கு ஒரு தளம் அமைத்துக்கொடுக்கிறோம் என்று டி.வி.கள் கூறினாலும், சின்னத்திரையில் குழந்தைகளின் அசத்தல்களுக்குப் பின்னே அவர்கள் எவ்வளவு அவஸ்தைகளை அனுபவிக்கிறார்கள் என்று எத்தனை பேருக்குத் தெரியும்?

    ஒரு நடன நிகழ்ச்சியில் ஒரு குழந்தை காற்றில் சுழன்று, அடுத்தடுத்து குட்டிக் கரணம் அடித்து மின்னலாய் நடனம் ஆடுகிறது, இன்னொரு ‘சிங்கர்’ நிகழ்ச்சியில், கஷ்டமான ராகத்தில் கர்நாடக சங்கீதப் பாடல் பாடுகிறது, மற்றொரு நிகழ்ச்சியில் குட்டி சமையல் கலைஞராய் விதவிதமாய்ச் சமைக்கிறது.

    இதுபோன்ற நிகழ்ச்சிகளில் நுழைத்து தங்கள் குழந்தையையும் பிரபலமாக்கிவிட வேண்டும் என்று துடிக்கிறார்கள், பெற்றோர். அதைப் புரிந்துகொண்டு புதிது புதிதாய் பயிற்சி மையங்களும் முளைக்கின்றன.

    குழந்தைகள் தங்கள் வயதுக்கு மீறி பேசும், பாடும், ஆடும், செயல்படும் ‘ரியாலிட்டி ஷோக்கள்’ எதில் போய் முடியும்? நிகழ்ச்சியில் இருந்து ‘வெளியேற்றப்படும்’ பத்து வயது குழந்தை கண்ணீர் வழியப் பேசுவதை காட்சிப்படுத்துவதன் அவசியம் என்ன? உண்மையில் இதன் அபாயத்தை நாம் உணர்ந்திருக் கிறோமா?

    “மேடைப் பயத்தை ஒழிக்கிறது, சவாலை நேருக்கு நேர் எதிர்கொள்ளும் தைரியத்தைத் தருகிறது என்ற வகையில் இந்த ‘ரியாலிட்டி ஷோக்களை’ பாராட்டலாம். ஆனால் நீண்டகால அடிப்படையில் பார்த்தால், ஒருவருடன் ஒருவர் போட்டியிடும் குழந்தைகளின் மனோநிலை கடுமையாக பாதிக்கப்படுகிறது. டி.வி. நிகழ்ச்சி என்பது, பணம் சம்பாதிப்பது, அதற்காக டி.ஆர்.பி. ரேட்டிங்கை உயர்த்துவதை பிரதான நோக்கமாகக் கொண்டது. எனவே அங்கே குழந்தைகளின் மனநலம், உடல்நலம் குறித்தெல்லாம் அலட்டிக்கொள்வதே இல்லை. அவர்களுக்கு இடப்படும் ஒப்பனை, காமிரா முன் உதிர்க்கப்படும் கண்ணீர், சொல்லப்படும் ‘தீர்ப்பு’ வார்த்தைகள் எல்லாமே குழந்தைகளிடம் ஆழமான தாக்கத்தை ஏற்படுத்தும்” என்கிறார், குழந்தை உளவியல் நிபுணர் சீமா.

    புன்னகை முக நடுவர்கள், ஜாலி என்ற பெயரில் எல்லை தாண்டும் தொகுப்பாளர்களின் கமெண்ட்கள், கைதட்டும், ஆரவாரித்து ஆடும் பார்வையாளர்கள் எல்லாமே ரியாலிட்டி ஷோக் களின் மாறாத அங்கங்கள். இதுபோன்ற நிகழ்ச்சிகளில் குழந்தைகள், பாடுவது, ஆடுவதுடன், கொஞ்சம் ‘நடிக்கவும்’ வேண்டும் என்று பரவலாக எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிகழ்ச்சிகள் எல்லாம் மிக இயல்பாக இருப்பது போலத் தோன்றினாலும் இந்திய ரசிகர்களின் உணர்வுகளுக்கு ஏற்ப திறமையாக இயக்கப்படுபவை இவை என்பது பலருக்குத் தெரியாது.

    ஒரு நிகழ்ச்சியில் பங்கேற்கும் சிறுவன், பெண் நடுவரிடம் ஜாலியாக பேசுவதுகூட சொல்லிக்கொடுக்கப்படும் வசனம்தான். உண்மையில் அதன் நிஜமான அர்த்தம், குறிப்பிட்ட குழந்தைக்குத் தெரியாது.

    அந்தக் குழந்தை பாடி அல்லது ஆடி முடித்ததும், உருக்கமான கதை ஒன்றைக் கூறவும், முடிந்தால் கண்ணீர் சிந்தவும் கூட அறிவுறுத்தப்படுகிறது. பங்கேற்பாளர்கள் நடுவே ஏற்படும் ‘மோதல்’, சர்ச்சை போன்றவையும் டி.ஆர்.பி. யை எகிறவைக்கின்றனவாம்.

    இதெல்லாம், சம்பந்தப்பட்ட குழந்தைகளின் பருவ வயதில் பாதிப்பை ஏற்படுத்தும் என்பது உளவியல் நிபுணர்களின் கருத்தாக உள்ளது.

    “ஒரு குழந்தையின் மனம் என்பது வளர் நிலையில் உள்ளது. குழந்தையை ஒரு சீரான வாழ்க்கை முறையில் இருந்து பிடுங்கி, தீவிர போட்டிச் சூழலுக்குள் திணிக்கும்போது, பின்வரும் வருடங்களில் உணர்வு நிலையின்மை போன்ற பிரச்சினைகளுக்கு நாமே காரணமாகி விடுகிறோம்” என்று கூறுகிறார், மனோவியல் நிபுணர் தனுஸ்ரீ.

    அவரே தொடர்ந்து, “புகழுக்காக வலுக்கட்டாயமாக இதுபோன்ற போட்டிகளுக்குள் குழந்தைகளைத் தள்ளுவது, அவர்களின் நடத்தை, மனோபாவத்தில் பாதிப்பை ஏற்படுத்தும். குழந்தைகள் தம்மைப் போன்ற சக சிறுவர், சிறுமியருடன் இயல்பாகக் கலந்து பழக வேண்டிய காலகட்டம் இது. ஆனால், டி.வி. நிகழ்ச்சிகள் போன்றவை அவர்களுக்கு ஏற்படுத்தும் ஒளிவட்டம், அதுபோன்ற தொடர்புகளையே துண்டித்துவிடுகிறது” என்கிறார்.

    ஆனால் இந்த விஷயத்தில், டி.வி. நிர்வாகம், நடுவர்களை விட குழந்தைகளின் பெற்றோருக்குத்தான் அதிகப் பொறுப்பு இருக்கிறது என்றும் நிபுணர்கள் கூறுகிறார்கள். பணம், புகழையே குறிவைக்கும் பெற்றோர், தங்கள் குழந்தை ஒரு மனிதப்பிறவி என்பதையே மறந்துவிடுகிறார்கள். பிற போட்டியாளர்களைத் தாண்டி ‘சாதிக்க வேண்டும்’ என்று குழந்தைகளை அளவுக்கு மீறித் தள்ளுவது, நெருக்கடி கொடுப்பது அவர்களின் உளவியலில் எந்தளவு தாக்கத்தை ஏற்படுத்தும் என்பதை மறந்துவிடுகிறார்கள். படிப்பு, விளையாட்டு என்று தங்களின் வழக்கமான விஷயங்களுக்கு இடையில்தான் குழந்தைகள் இதுபோன்ற போட்டிகளுக்கும் தயாராக வேண்டியிருக்கிறது.

    இந்த ரியாலிட்டி ஷோக்களில் ‘தோற்றதாக’ கருதப்படும் குழந்தைகளிடம் தாழ்வு மனப்பான்மையும், குறைந்த சுயமதிப்பு உணர்வும் குடியேறும் என்பதை பெற்றோர் உணர்வதில்லை.
    Next Story
    ×