search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    மாடுகளின் காவல் தெய்வம்
    X

    மாடுகளின் காவல் தெய்வம்

    தர்மபுரி மாவட்டம் மொரப்பூர் பகுதியில் நடக்கும் பொங்கல் விழாவில் மாடுகளின் காவல் தெய்வமாக கருதப்படும் ஒழுக்கம் புல்லாரப்பன் வழிபாடு சிறப்பிடம் பெற்று விளங்குகிறது.
    தர்மபுரி மாவட்டம் மொரப்பூர் பகுதியில் நடக்கும் பொங்கல் விழாவில் மாடுகளின் காவல் தெய்வமாக கருதப்படும் ஒழுக்கம் புல்லாரப்பன் வழிபாடு சிறப்பிடம் பெற்று விளங்குகிறது. மொரப்பூரில் இருந்து கம்பைநல்லூர் செல்லும் சாலையில் அமைந்துள்ளது, கொசப்பட்டி கிராமம். இந்த கிராமத்தின் சாலையோரத்தில் உள்ள ஒரு பழமையான புளியமரத்தின் கீழ் பகுதியில் வெட்டவெளியில் சிறிய அளவிலான கற்கள் அடுக்கி வைக்கப்பட்டுள்ள பகுதிதான் ஒழுக்கம் புல்லாரப்பன் கோவில்.

    இங்கு மாடுகள், கன்றுக்குட்டிகளின் சிறிய அளவிலான மண் சிலைகளும் வைக்கப்பட்டுள்ளன. மொரப்பூர் சுற்றுவட்டார பகுதியில் வசிக்கும் 100-க்கும் மேற்பட்ட கிராமங்களை சேர்ந்த மக்கள் மாட்டுப்பொங்கல் விழாவை தங்கள் ஊரில் உள்ள பொது இடத்தில் பொங்கல் வைத்து கொண்டாடுவது வழக்கம். பொது இடத்தில் கிராம மக்கள் பொங்கல் வைப்பதற்கு முன்பாக காவல் தெய்வமான புல்லாரப்பன் கோவிலுக்கு தேங்காய், பழத்துடன் வருவார்கள். அங்கு பூஜை செய்து தேங்காயை உடைப்பார்கள். 

    அப்போது தேங்காயில் இருந்து வெளிவரும் தண்ணீரை கீழே விடாமல் சிறிய பாத்திரத்தில் பிடித்து தங்கள் கிராமத்திற்கு பத்திரமாக எடுத்து செல்வார்கள். அங்கு பொது இடத்தில் தயார் நிலையில் உள்ள பொங்கல் பானை மீது இந்த தேங்காய் தண்ணீரை தீர்த்தமாக தெளித்து வழிபடுவார்கள். அதன்பின்னர் பொது இடத்தில் பொங்கல் வைக்கும் பணி தொடங்கும். இவ்வாறு செய்வதன் மூலம் விவசாயம் செழிக்கும் என்பதும், விவசாயத்திற்கு பயன்படும் மாடுகள் நோய்நொடி இன்றி ஆரோக்கியமாக இருக்கும் என்பதும் நம்பிக்கை.

    இதேபோல் மாட்டுப்பொங்கலுக்கு அடுத்த நாள் கொண்டாடப்படும் காணும் பொங்கல் விழாவின்போது பல்வேறு கிராமங்களை சேர்ந்த மக்கள் புல்லாரப்பன் கோவில் பகுதிக்கு களிமண்ணால் ஆன பசுமாடு, கன்றுக்குட்டிகள் ஆகியவற்றின் சிறிய அளவிலான பொம்மைகளை எடுத்து வருவார்கள். அங்கு அந்த பொம்மைகளை மரத்தடியில் வைத்து அருகே அடுப்பு மூட்டி புது பானையில் பொங்கலிடுவார்கள். 

    பின்னர் பொங்கலை புல்லாரப்பனுக்கு படையலிட்டு வழிபடுவார்கள். இதன் மூலம் கால்நடைகள் நோய் பாதிப்பின்றி ஆரோக்கியமாக இருக்க காவல் தெய்வத்தின் அருள் கிடைக்கும் என்பது நம்பிக்கை. கோவில் என்ற கட்டிட அமைப்பே இல்லாத ஒரு இடத்தில் காணும் பொங்கலன்று ஆயிரக்கணக்கானோர் திரள்வதும், நூற்றுக்கணக்கானோர் அங்கு பொங்கல் வைத்து கால்நடைகளின் நலனுக்காக வழிபாடு நடத்துவதும் இந்த பகுதியில் நடக்கும் பொங்கல் விழாவின் சிறப்பு அம்சம்.
    Next Story
    ×