search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    பிறவி துயர் நீக்கும் ஏகாதசி
    X

    பிறவி துயர் நீக்கும் ஏகாதசி

    வருடம் முழுவதும் ஏகாதசி விரதம் இருக்க முடியாதவர்கள், வைகுண்ட ஏகாதசியிலாவது விரதம் இருந்தால் சிறப்பான பலனை அடையலாம்.
    ஒரு வருடத்தில் 24 ஏகாதசிகள் வரும். ஒரு சில வருடங்கள் மட்டும் 25 ஏகாதசிகள் வர வாய்ப்பு உண்டு. வருடம் முழுவதும் வரும் ஏகாதசிகளில் விரதம் இருந்து, இறைவனை வழிபடுபவர்கள் பிறவி துயர் நீங்கி, வைகுண்ட பதவியை அடைவார்கள் என்பது நம்பிக்கை. வருடம் முழுவதும் ஏகாதசி விரதம் இருக்க முடியாதவர்கள், வைகுண்ட ஏகாதசியிலாவது விரதம் இருந்தால் சிறப்பான பலனை அடையலாம்.

    * சித்திரை மாத தேய்பிறை ஏகாதசி ‘பாபமோஹினி’. வளர்பிறை ஏகாதசி ‘காமதா'. இந்த ஏகாதசி தினங்களில் விரதம் இருந்தால் நினைத்தவை நினைத்தபடி நடைபெறும்.

    * வைகாசி மாத தேய்பிறை ஏகாதசி ‘வருதினி'. வளர்பிறை ஏகாதசி ‘மோகினி'. இந்த மாதத்தில் விரதம் இருப்பது, இமயமலை சென்று பத்ரிநாத்தை தரிசித்த பலனைத் தரும்.

    * ஆனி மாத தேய்பிறை ஏகாதசி ‘அபரா'. வளர்பிறை ஏகாதசி ‘நிர்ஜலா'. இந்த ஏகாதசிகளில் விரதம் இருந்து வழிபடுவோர், இறைவனின் திருப்பதம் பெறுவர்.

    * ஆடி மாத தேய்பிறை ஏகாதசி ‘யோகினி'. வளர்பிறை ஏகாதசி ‘சயன’. இந்த இரு ஏகாதசிகளில் விரதம் இருந்தால், பலருக்கு அன்னதானம் செய்த பலன் கிடைக்கும்.

    * ஆவணி மாத தேய்பிறை ஏகாதசியான ‘காமிகை'; வளர்பிறை ஏகாதசியான ‘புத்திரதா' ஆகியவற்றில் விரதம் இருந்தால் நன்மக்கட்பேறு கிட்டும்.

    * புரட்டாசி மாத தேய்பிறை ஏகாதசி ‘அஜா’. வளர்பிறை ஏகாதசி ‘பத்மநாபா’. இந்த ஏகாதசிகளில் விரதம் இருப்பின், வறுமை நீங்கும்.

    * ஐப்பசி மாத தேய்பிறை ஏகாதசி ‘இந்திரா’. வளர்பிறை ஏகாதசி ‘பாபங்குசா’. இந்த நாட்களில் விரதம் இருந்தால், முன்னோர்கள் நற்கதி அடைவர். கங்கையில் நீராடிய பலன் கிடைக்கும்.

    * கார்த்திகை மாத தேய்பிறை ஏகாதசி ‘ரமா’. வளர்பிறை ஏகாதசி ‘ப்ரபோதினி’. இந்த நாட்களில் விரதம் இருப்பின் மிக உயர்ந்த நன்மைகள் நடைபெறும்.

    * மார்கழி மாத தேய்பிறை ஏகாதசி ‘உற்பத்தி’. வளர்பிறை ஏகாதசி ‘மோட்ச’ (வைகுண்ட) ஏகாதசி. இந்த இரு விரதங்களையும் மேற்கொண்டால் வைகுண்ட பதவி கிடைக்கும்.

    * தை மாத தேய்பிறை ஏகாதசி ‘ஸபலா’. வளர்பிறை ஏகாதசி ‘புத்ரதா’ ஏகாதசி. இந்த நாட்களில் விரதம் இருந்தால் குழந்தைப்ேபறு கிடைக்கும்.

    * மாசி மாத தேய்பிறை ஏகாதசி ‘‌ஷட்திலா’. வளர்பிறை ஏகாதசி ‘ஜயா’. இந்த இரு நாட்கள் விரதம் இருப்பின் சாப விமோசனம் நீங்கும்.

    * பங்குனி மாத தேய்பிறை ஏகாதசி ‘விஜயா’. வளர்பிறை ஏகாதசி ‘ஆமலதி’. இந்த நாட்கள் விரதம் இருந்தால் கோ தானம் செய்த பலன் கிடைக்கும்.

    * சில வருடங்களில் மட்டும் வரும் ‘கமலா’ ஏகாதசியை கடைப்பிடித்தால் மகாலட்சுமியின் அருள் கிடைக்கும்.



    முக்கோடி ஏகாதசி

    இலங்காபுரியை ஆட்சி செய்தவன், ராவணன். அவன் தேவர்களுக்கும், முனிவர்களுக்கும் செய்து வந்த இன்னல்கள் ஏராளம். அவற்றையெல்லாம் சகித்துக் கொள்ள முடியாத தேவர்கள் அனைவரும் பிரம்மாவுடன் இணைந்து, வைகுண்டம் சென்று, அங்கு பாம்பு பஞ்சணையில் இருந்த நாராயணனை வணங்கி, தங்கள் துன்பங்களை போக்கக் கூறினர். அப்படி அவர்கள் நாராயணரை வழிபட்ட தினம் வைகுண்ட ஏகாதசி என்று சொல்லப்படுகிறது. தன்னை வேண்டி நின்ற தேவர் களின் துன்பங்களைப் போக்கியதால், வைகுண்ட ஏகாதசிக்கு ‘முக்கோடி ஏகாதசி’ என்றும் பெயர் உண்டு.

    வைகுண்ட வாசம்

    தேவர்களும், அசுரர்களும் அமுதம் பெற வேண்டி இரவும், பகலும் விரதம் இருந்து பாற் கடலை கடைந்தனர். அப்போது அமுதம் வெளிப்பட்ட தினம் ஏகாதசி என்று கூறப்படுகிறது. மறுநாள் துவாதசி திதியில் மகாலட்சுமி சமுத்திரத்தில் இருந்து வெளியே வந்து தேவர்களுக்குக் காட்சி அளித்தார். எனவே ஏகாதசி அன்று இரவும் பகலும் விரதம் இருந்து, திருமாலை துதித்து விட்டு, துவாதசியில் விரதத்தை நிறைவு செய்ய வேண்டும். அவ்வாறு செய்வதால் நிலைத்த புகழ், நோயற்ற வாழ்வு, நன்மக்கட்பேறு போன்றவற்றுடன், வைகுண்டவாசத்தையும் இறைவன் வழங்குவதாக புராணங்கள் கூறுகின்றன.

    கீதா ஜெயந்தி

    அதர்மத்தை எதிர்த்து, தர்மத்தைக் காக்கும் பொருட்டு, மகாபாரதப் போர் உருவானது. அந்தப் போரில் கவுரவர்களை எதிர்த்துப் போர் புரிய பாண்டவர்கள் எதிர்வரிசையில் நின்று கொண்டிருந்தனர். குருசேத்திரத்தில் அனைவரும் நின்றிருக்க, அர்ச்சுனன் தனக்கு எதிரில் நிற்கும் தன் உறவுகளைப் பார்த்து கவலை கொண்டான். அவர்களை எதிர்த்து போர்புரிவதை விட போரை கைவிடுவது மேல் என்று எண்ணினான். அப்போதுதான் அர்ச்சுனனுக்கு, கிருஷ்ணர் ‘பகவத் கீதை’யை உபதேசம் செய்தார். அவர் கீதையை உபதேசம் செய்த தினம் ‘வைகுண்ட ஏகாதசி’ நாள் என்று சொல்லப்படுகிறது. எனவே இந்த நாளை ‘கீதா ஜெயந்தி’ என்றும் அழைக்கிறார்கள்.
    Next Story
    ×