search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    முக்தி தரும் காசி
    X

    முக்தி தரும் காசி

    காசியில் இறப்பவர்களுக்கு சிவபெருமானே, ராம நாமம் ஓதி முக்தியை வழங்குவதாக ஐதீகம். இது குறித்து விரிவாக பார்க்கலாம்.
    இந்தியாவில் பழமையான நகரங்களில் ஒன்று காசி நகரம். ராமாயணம், மகாபாரதம் காலங்களுக்கு முன்பிருந்தே காசி நகரம், புகழ்பெற்று விளங்கியதாக கூறப்படுகிறது. இதன் புராதனப் பெயர் ‘ஆனந்த வனம்’ என்பதாகும். சிவபெருமான் மகிழ்ச்சியுடன் தங்கியிருக்கும் இடம் என்பதால் இப்பெயர் பெற்றது.

    இங்கு இறப்பவர்களுக்கு சிவபெருமானே, ராம நாமம் ஓதி முக்தியை வழங்குவதாக ஐதீகம். முக்தியை தரவல்ல தலம் என்பதால் இந்த நகரத்தை ‘அவிமுக்தம்’ என்றும் அழைக்கிறார்கள். வாராண், அஸ்ஸி என்ற இரண்டு நதிகள், இந்தப் பகுதியில் கங்கையுடன் கலப்பதால் இத்தலத்திற்கு ‘வாரணாசி’ என்ற பெயரும் உண்டு. காசியின் சிறப்புகளைப் பற்றி இங்கே பார்ப்போம்.

    அன்னபூரணி ஆட்சி :

    காசி நகரத்தின் முக்கியமான சக்தி, அன்னபூரணி. காசி முழுவதும் இந்த அன்னையின் அருளாட்சிதான். விஸ்வநாதர் ஆலயத்தில் தனிச்சன்னிதியில் அன்னபூரணி அருள்பாலிக்கிறார். இந்த அம்பாளை சிறிய சாளரத்தின் வழியாக மட்டுமே தரிசனம் செய்ய இயலும். இடது கரத்தில் தங்கக் கிண்ணமும், வலது கரத்தில் தங்கக் கரண்டியும் ஏந்தி பிட்சாண்டவருக்கு அன்னம் அளிக்கும் கோலத்தில் இந்த அன்னை காட்சி தருகிறார். அன்னையின் இருபுறமும் ஸ்ரீ தேவியும், பூதேவியும் வீற்றிருக்கின்றனர். இந்த அன்னபூரணியை தீபாவளியன்று தரிசிப்பது வெகு விசேஷமானதாகக் கருதப்படுகிறது.

    கங்கா ஆரத்தி :

    காசிக்குச் செல்பவர்கள் தவற விடக்கூடாத ஒன்று ‘கங்கா ஆரத்தி.’ தசாஸ்வமேத காட்டில் தினசரி நடக்கும் நிகழ்வு இது. மாலை 6.30 மணிக்கு தொடங்கி இரவு 7.30 மணிக்கு இந்த வழிபாடு முடிவடையும். இளம் வயதுள்ள ஏழு ஆண்கள் கங்கை நதிக்குச் செய்யும் பூஜையே ‘கங்கா ஆரத்தி’ என்று அழைக்கப்படுகிறது. முதலில் புனிதமான சங்கை ஊதி, மணியை அடித்து பூஜையை தொடங்குகின்றனர். அடுத்தடுத்து ஊதுபத்தி, சாம்பிராணி, மலர்கள் என ஒவ்வொன்றின் மூலமும் ஆரத்தி காட்டப்படுகிறது.



    விஸ்வநாதர் ஆலயம் :

    காசி நகரத்தின் சிறப்புக்குரியது விஸ்வநாதர் ஆலயம். இந்தக் கோவில் ‘விஸ்வேசம்’ என்று குறிப்பிடப்படுகிறது. ஜோதிர்லிங்கத் தலங்களில் முதன்மையானது இது. தொடர் படையெடுப்பால் தொன்மையான ஆலயம் அழிக்கப்பட்டது. தற்போது உள்ள ஆலயத்தை 1785-ல் மகாராணி அகல்யா பாய் என்பவர் கட்டியதாக கூறப்படுகிறது. ஆலயத்தின் உள்ளே நேபாள அரசரால் வழங்கப்பட்ட பெரிய மணி ஒன்று உள்ளது. இந்த மணியின் நாதம் வெகு தொலைவிற்கு ஒலிக்கும் என்பது இதன் சிறப்பம்சம். ஆலயத்தின் உள்ளே உள்ள கிணற்றில் பழமையான லிங்கம் வைக்கப்பட்டிருப்பதாக சொல்லப்படுகிறது.

    அதிகாலை 3 மணி முதல் இரவு 11 மணி வரை திறந்திருக்கும் இந்த ஆலயத்தில், பக்தர்களே தங்கள் கையால் லிங்கத்திற்கு அபிஷேகம் செய்யலாம். தொட்டு வணங்கலாம். இங்கு இரவில் நடக்கும் சப்தரிஷி பூஜை முக்கியமானது.

    புண்ணிய தீர்த்தம் :

    காசி நகரத்தில் உள்ள மணிகர்ணிகா தீர்த்தம், மிகப் புனிதமானது. இங்குள்ள மயானம் மிகப் புனிதமானதாகப் போற்றப்படுகிறது. இங்கு தகனம் செய்வது மோட்சத்தைத் தரும் என்பது நம்பிக்கை. இங்கு நீராடி மணிகர்ணிகேஸ்வரரை தரிசித்த பின்தான், காசியின் பிற தெய்வங்களை வணங்கச் செல்ல வேண்டும் என்ற நியதியும் உள்ளது.

    காசியில் மரிப்போரின் காதுகளில் ஈசன் குனிந்து ராம நாமத்தை ஓதும் போது, அவர் காதுகளில் அணிந்துள்ள குண்டலங்கள் தரையில் படுவதால் இறைவனுக்கு இப்பெயர் (மணி - குண்டலம்; கர்ணிகா -காது).

    ‘மணிகர்ணிகையில் குளித்து மணிகர்ணிகேஸ்வரரைத் தியானிப்பவர்களுக்கு, மீண்டும் பிறவி இல்லை. இந்தத் தீர்த்தத்தில் ஒருமுறை மூழ்கி எழுந்தால் அது அனைத்துப் புண்ணிய நதிகளிலும் நீராடிய பலனைத் தரும். மணிகர்ணிகைக்குச் சமமான தீர்த்தம் எந்த லோகத்திலும் இல்லை’ என்கிறது கந்த புராணம்.

    காசியின் காவல்தெய்வம் :

    காசி நகரத்தை தன் கட்டுப்பாட்டில் வைத்து, காவல் காத்து வருபவர் அங்குள்ள கால பைரவர். இவர் கண்ணசைவின்றி காசியில் எதுவும் நடக்காது என்பது ஐதீகம். இவரைத் தரிசிக்காமல் காசி யாத்திரை பூர்த்தி ஆவதில்லை. உருண்டையான முகம், பெரிய கண்கள், அடர்ந்த மீசை என கம்பீரமாக காட்சி தருபவர் கால பைரவர். உள்ளே நுழைந்து பைரவரை வணங்கியதும், ஆலயத்தில் உள்ள மயிற்பீலியால் நம் முதுகில் தட்டுவார்கள். அதனைத் தொடர்ந்து தண்டம் என்ற நீண்ட கோல் கொண்டு, பக்தர்களின் தலையில் ஆசீர்வதிப்பார்கள். கால பைரவரின் ஆலய வாசலில் தான் ‘காசிக்கயிறு’ என்னும் கறுப்புக் கயிறு விற்பனை செய்யப்படும்.
    Next Story
    ×