search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    மேல்சாந்தி உண்ணிகிருஷ்ணன் நம்பூதிரி சபரிமலை ஐயப்பன் கோவில் நடையை திறந்து வைத்த போது எடுத்த படம்.
    X
    மேல்சாந்தி உண்ணிகிருஷ்ணன் நம்பூதிரி சபரிமலை ஐயப்பன் கோவில் நடையை திறந்து வைத்த போது எடுத்த படம்.

    சபரிமலை ஐயப்பன் கோவிலில் நடை திறக்கப்பட்டது

    சபரிமலை ஐயப்பன் கோவிலில் மண்டல பூஜைக்காக நேற்று மாலையில் நடை திறக்கப்பட்டது. பக்தர்கள் சரண கோஷம் முழங்க சாமி தரிசனம் செய்தனர்.
    கார்த்திகை மாத பிறப்பையொட்டி மண்டல பூஜைக்காக சபரிமலை ஐயப்பன் கோவில் நடை நேற்று மாலை 5 மணிக்கு திறக்கப்பட்டது.

    அதை தொடர்ந்து கோவில் மேல்சாந்தியாக தேர்வு செய்யப்பட்ட ஏ.வி.உண்ணி கிருஷ்ணன், மாளிகைப்புரம் கோவில் மேல்சாந்தியாக தேர்வு செய்யப்பட்ட அனீஷ் நம்பூதிரி ஆகியோர் பொறுப்பேற்றுக்கொண்டனர். இதனைத்தொடர்ந்து பக்தர்கள் சாமி தரிசனத்திற்காக அனுமதிக்கப்பட்டனர். ஏராளமான பக்தர்கள் சரண கோஷம் முழங்க சுவாமி ஐயப்பனை தரிசித்தனர். மற்ற சிறப்பு பூஜைகள் எதுவும் நேற்று நடைபெறவில்லை.

    இன்று முதல் (வியாழக் கிழமை) புதிய மேல்சாந்தி நடையை திறந்து பூஜைகள் செய்ய உள்ளார். அதிகாலை 3 மணிக்கு கோவில் நடை திறக்கப்பட்டு, நிர்மால்ய தரிசனம், கணபதி ஹோமம், 11.30 மணி வரை நெய் அபிஷேகம் நடைபெற்று, உச்ச பூஜை முடிவடைந்ததும் பகல் 1 மணிக்கு நடை அடைக்கப்படும்.

    மீண்டும் மாலை 4 மணிக்கு நடை திறக்கப்பட்டு, 6.30 மணிக்கு சிறப்பு தீபாராதனை, 7 மணிக்கு புஷ்பாபிஷேகம் நடைபெறுகிறது. அத்தாள பூஜைக்கு பின்பு இரவு 10.30 மணிக்கு அரிவராசனம் பாடல் இசைக்கப்பட்டு நடை அடைக்கப்படுகிறது. பக்தர்களின் வருகை அதிகமானால் தரிசனத்திற்கு வசதியாக கோவில் நடை திறப்பு நேரங்களில் மாறுதல் செய்யப்படும் என்று ஏற்கனவே தெரிவிக்கப்பட்டுள்ளது. அடுத்த மாதம் (டிசம்பர்) 26-ந் தேதி மண்டல பூஜையும், ஜனவரி 14-ந் தேதி மகர விளக்கு பூஜையும் நடைபெறுகிறது.

    ஐயப்பன் கோவிலில் கடந்த ஆண்டை விட கூடுதலாக 2 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டு உள்ளனர். பக்தர்களின் வருகையை கருத்தில் கொண்டு, சபரிமலையில் இந்த ஆண்டு இதுவரை 50 லட்சம் டின் அரவணை பிரசாதம் மற்றும் தேவைக்கு ஏற்றவாறு அப்பம் இருப்பு வைக்கப்பட்டு உள்ளது.

    மேலும் தினசரி 2 லட்சம் டின் அரவணை பிரசாதம் தயாரிக்கும் பணி மும்முரமாக நடைபெற்று வருகிறது.
    Next Story
    ×