search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    கந்தசஷ்டி 5-வது நாள்: இந்திரனுக்கு மீண்டும் அரசாட்சியை பெற்று தந்தது, முருகப்பெருமானின் வேல்
    X

    கந்தசஷ்டி 5-வது நாள்: இந்திரனுக்கு மீண்டும் அரசாட்சியை பெற்று தந்தது, முருகப்பெருமானின் வேல்

    முருகனது வேல் நமது தீவினைகளை, தீய குணங்களை அழித்து மனிதனை செம்மைப்படுத்துகிறது.
    முருகபெருமானின் வேலையும், மயிலையும் நினைத்து வழிபடுபவர்களின் துன்பங்கள் தீரும் என்பது அருணகிரிநாதரின் வாக்கு. முருகபெருமான் கையில் உள்ள வேல் அவரது தாயான பார்வதிதேவி வழங்கிய வேல். சக்தி மிகுந்த வேல். அன்று சூரர்களை அழித்தது. இன்று முருகனது வேல் நமது தீவினைகளை, தீய குணங்களை அழித்து மனிதனை செம்மைப்படுத்துகிறது. அதைப்போன்று கொடுமைகள் பலபுரிந்த சூரபதுமன்அழிந்து அவனது ஆன்மாவே முருகனின் வாகனமான மயிலாக மாறியது. இதுவும் முருகனின் அருளால் என்று கச்சியப்பர் புலவர் கூறுகிறார்.

    வேலும், மயிலும் துணை. வேலும் மயிலும் துணை என்று இடையறாது சொல்லி பெற வேண்டிய பேறு பெற்றவர்கள் பலர். வேலையும், மயிலையும் வணங்கி வழிபடுவதால் அஞ்ஞானம் நீங்கி மெய்ஞானம் பெற்று நீண்ட ஆயுளும், சகல பேறுகளும் கிடைக்கும்.

    ஓர் அதிகாரியை அணுக வேண்டுமானால் வாயிற்காவலரை வசப்படுத்திக் கொள்ள வேண்டும் என்பது இயல்பு. இதை அன்றே உணர்ந்த அருணகிரிநாதர், முருகனின் வேலையும், மயிலையும் பத்து பத்து விருத்தப்பாடல்களாக பாடியுள்ளார். மேலும் தனது திருப்புகழ் பாடல்களில் மயில் குறித்து 213 இடங்களிலும், வேல் குறித்து 123 இடங்களிலும் சேவல் பற்றி 58 இடங்களிலும் பாடியிருக்கிறார்.



    வேலின் தத்துவம் எது என்றால் அறிவின் முழு உருவம் வேலாயுதம். ஞான பூரண சக்தி என்று வேலைக்குறிப்பர். வெற்றியை தரும் வேலை வணங்குவதே எமக்கு வேலை என்று சான்றோர் கூறுவர். மயில் என்பது ஓம் என்ற பிரணவ சொரூபம். உமையம்மை மயில் உருவத்தில் சிவபெருமானை வழிபட்டார்.

    வேல் விருத்தம் பாடல்களில் வேலின் சிறப்புகள் பலவாறு சொல்லப்படுகின்றன. வேலாயுதத்தால் மட்டுமே சூரபதுமன் உள்பட அனைத்து அசுரர்களும் அழிந்தனர். சிவபெருமானின் பாசுபத அஸ்திரமான சூலாயுதமும், திருமாலின் சக்ராயுதமும், தேவேந்திரனுடைய வஜ்ஜிராயுதமும் இந்த மூன்றைக்காட்டிலும் வலிமையானது முருகனின் வேல்.

    முருகபெருமான் எழுந்தருளியுள்ள திருத்தலங்களை எப்போதும் புகழ்ந்து கொண்டிருக்கிற அடியவர்களின் நாவிலும், அறிவிலும் எந்தை கந்தவேள் வேலானது. அவர்களுக்கு நல்வழிகாட்டும்.

    ஒவ்வொரு பாடலிலும் உள்ள 16 வரிகளில் முதல் 8 வரிகளில் முருகனது பெருமைகளை சொல்லி, முருகன் பக்தர்களுக்கு என்னென்ன நன்மை செய்கிறான். வணங்குவதால் நமக்கு ஏற்படும் பயன் ஆகியவை குறித்து கடைசி 8 வரிகளில் பாடுகிறார். இயமன் வந்து உயிரை பற்றும் போது அடியவரை அஞ்சேல் என்று நம்மை காப்பது வேலாகும். இந்திரனுக்கு மீண்டும் அரசாட்சியை தந்தது, மாமரமாக நின்ற சூரபதுமனை இரண்டாக பிளக்க செய்தது. சேவலும், மயிலும் கிடைத்தது. இதை எல்லாம் செய்தது முருகனதுவேலாகும்.



    மயில் விருத்தம் என்ற தொகுதியில் 11 பாடல்களிலும் முருகனது பெருமைகளையும், மாம்பழத்திற்காக உலகை ஒரு நொடிப்பொழுதில் சுற்றி வந்த வரலாறையும் சிறப்பித்து கூறுகிறார். மயில் என்பது பிரணவவொளி. அந்த ஒளியானது ஒரு நொடியில் உலகம் எங்கும் வியாபிக்கும் என்றும் கூறுகிறார். மயிலுக்கு கழுத்து நீல நிறமாக இருக்கும்.

    அதனால் மயில் நீலகண்டம் எனப்பெயர் பெற்றது. நீலகண்டத்தைதான் கழுத்தில் தேக்கியவர் சிவபெருமான். எனவே விஷத்தை அதாவது தீவினையை நீக்குகிற குணம் மயிலுக்கு உண்டு. தணிகை முருகன் ஏறும் மயில்தான் ஆதிசேடன் அஞ்சவும், சூரர்கள் திடுக்கிடவும் வைத்தது. மேலும் மயில் விருத்தம் பாடல்களில் சைவம், வைணவம், வள்ளுவரின் கருத்துக்கள் ஆகியவை வருவதால் ஒருமைப்பாடு, சமய நல்லிணக்கம் இவற்றுக்கு எடுத்துக்காட்டாக திகழ்கிறது.

    முருகபெருமானின் மயில் சகல அண்டங்களையும் தன் சிறகினால் கட்டி காப்பாற்றும். திருமாலின் கண்ணில் பிறந்த அமுதவல்லி குழந்தையாக மாறி இந்திரனிடம் சென்று ஐராவதம் என்ற யானையால் வளர்க்கப்பட்டு தேவயானை என்று பெயர் பெற்றாள். இந்திரன் தன் நன்றி கடனாக தேவயானையை முருகனுக்கு திருமணம் செய்து கொடுத்தார் என்ற வரலாற்றையும் மயில் விருத்தம் பாடல்களில் சொல்கின்றனர்.

    எனவே வேலும், மயிலும் துணை என்று எப்போதும் கூறுவோர்களின் துன்பத்தை அகற்றி கேட்ட வரங்களை முருகன் தந்து அருள்புரிவார்.

    நெல்லை புலவர் மா.கந்தகுமார்.
    Next Story
    ×