search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    சோலைமலை முருகன் கோவிலில் சாமி யானை வாகனத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்த காட்சி.
    X
    சோலைமலை முருகன் கோவிலில் சாமி யானை வாகனத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்த காட்சி.

    கந்தசஷ்டி: சோலைமலையில் யானை வாகனத்தில் எழுந்தருளிய முருகன்

    சோலைமலையில் நடைபெறும் கந்தசஷ்டி பெருந்திருவிழாவில் சாமி யானை வாகனத்தில் எழுந்தருளினார். அதேபோல திருப்பரங்குன்றத்தில் முருகப்பெருமான் மயில் வாகனத்தில் காட்சியளித்தார்.
    அழகர்மலை உச்சியில் முருகப்பெருமானின் ஆறாவது படை வீடான சோலைமலை முருகன் கோவில் உள்ளது. இங்கு கடந்த 20-ந்தேதி கந்தசஷ்டி பெருந்திருவிழா தொடங்கியது. அதில் அன்னம், காமதேனு வாகனங்களில் எழுந்தருளினார். தொடர்ந்து சாமிக்கு சிறப்பு அபிஷேகங்கள், பூஜைகள் நடந்தன.

    நேற்று நடந்த திருவிழாவில் மேளதாளம் முழங்க தீவட்டி பரிவாரங்களுடன் முருகப்பெருமான் யானை வாகனத்தில் எழுந்தருளி நான்கு பிரகாரங்களில் வலம் வந்து பின்பு சஷ்டி மண்டபத்திற்கு வந்து சேர்ந்தார். இதில் ஏராளமான பக்தர்கள் குவிந்து முருக பெருமானை அரோகரா கோஷமிட்டு தரிசனம் செய்தனர். அங்கு சண்முகார்ச்சனை, பூஜைகள் நடந்தன. தொடர்ந்து மூலவர் வள்ளி ,தெய்வானை சமேத முருகப்பெருமானுக்கு சிறப்பு அபிஷேகம் நடந்தது.

    இன்று (திங்கட்கிழமை) ஆட்டுகிடாய் வாகனத்தில் சுவாமி புறப்பாடு நடக்கிறது. மறுநாள் காலை சப்பர புறப்பாடும், தொடர்ந்து சண்முகார்ச்சனையும் நடைபெறுகிறது. திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான 25-ந்தேதி சூரசம்ஹாரவிழாவில், பகலில் குதிரை வாகனத்தில் சுவாமி புறப்பாடும், மாலை 3.30 மணிக்கு வேல் வாங்குதலும், பின்னர் வெள்ளி மயில் வாகனத்தில் சுவாமி புறப்பாடாகி கோவில் ஈசான திக்கில் கஜமுகாசூரனையும், அக்கினி திக்கில் சிங்கமுகாசூரனையும் சம்ஹாரம் செய்து, ஸ்தல விருட்சமான நாவல் மரத்தடியில் பத்மாசூரனை சூரசம்ஹரம் செய்யும் காட்சி நடைபெறுகிறது. அதைத்தொடர்ந்து சஷ்டி மண்டபத்தில் சாமிக்கு சாந்தா அபிஷேகம், தீபாராதனை நடைபெறுகிறது.



    26-ந்தேதி வியாழக்கிழமை காலை திருக்கல்யாண உற்சவம், திருப்பாவாடை தரிசனம், பின்னர் பல்லக்கு வாகனத்தில் சாமி புறப்பாடும், மாலை 4.30 மணிக்கு ஊஞ்சல் சேவை, மஞ்சள் நீர் உற்சவம் நடைபெறுகிறது. திருவிழா ஏற்பாடுகளை தக்கார் வெங்கடாசலம், நிர்வாக அதிகாரி மாரிமுத்து மற்றும் திருக்கோவில் பணியாளர்கள் செய்திருந்தனர்.

    திருப்பரங்குன்றம் கோவிலில் கந்தசஷ்டி பெருந்திருவிழா நடைபெற்று வருகிறது. இதையொட்டி நேற்று உற்சவர் சன்னதியில் இருந்து தெய்வானை சமேத முருகப்பெருமான் மயில்வாகனத்தில் எழுந்தருளினார். இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு பயபக்தியுடன் தரிசனம் செய்தனர்.

    இதேபோல சோழவந்தான் அருகே தென்கரை அகிலாண்டேஸ்வரர் சமேத மூலநாதசாமி திருக்கோவிலில் உள்ள வள்ளி தெய்வானை சமேத முருகப்பெருமான் சன்னதியில் கந்தசஷ்டி விழாவில் சாமிக்கு பல்வேறு அபிஷேகங்கள், பூஜைகள் நடைபெற்றன. இதையொட்டி தினமும் ஆன்மிக சொற்பொழிவு நடைபெறுகிறது. விழா ஏற்பாடுகளை விழா குழுவினர், திருக்கோவில் செயல் அலுவலர் சக்கரையம்மாள் உள்பட பணியாளர்கள் செய்து வருகின்றனர்.
    Next Story
    ×