search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    பக்தனுக்காக அவதரித்த நரசிம்மர்
    X

    பக்தனுக்காக அவதரித்த நரசிம்மர்

    மகாவிஷ்ணு எடுத்த அவதாரங்களிலேயே உக்கிரமானதாக கருதப்பட்டாலும், பக்தர்களால் மிகவும் விரும்பப்படும் அவதாரமாக இருப்பது நரசிம்ம அவதாரம்.
    மகாவிஷ்ணு எடுத்த அவதாரங்களிலேயே உக்கிரமானதாக கருதப்பட்டாலும், பக்தர்களால் மிகவும் விரும்பப்படும் அவதாரமாக இருப்பது நரசிம்ம அவதாரம். அதற்கு முக்கிய காரணம், நரசிம்மர் பக்தர்களின் கூக்குரல் கேட்ட மறுநொடியே அவர்களின் துன்பங்களை களைவார் என்ற நம்பிக்கையே ஆகும். நரசிம்மன் என்றால் ‘ஒளிப்பிழம்பு’ என்று பொருள்.

    தனது மகன் என்றும் பாராமல், பிரகலாதனைக் கொல்ல துணிந்து விட்டான் இரண்யகசிபு. தன் ஒரே தம்பியான இரண்யட்சனைக் கொன்ற மகாவிஷ்ணுவின் பக்தனாக மாறிப்போன பிரகலாதனை பணிவாகவும், பயமுறுத்தியும் பார்த்துவிட்டார் இரண்யகசிபு. ஆனால் எதுவும் பலனளிக்கவில்லை. நமோ நாராயணனாய என்ற எட்டெழுத்து மந்திரத்தை உச்சரித்தபடியே இருந்தான் பிரகலாதன்.

    இறுதியாக தன் மகனை எச்சரித்தான் இரண்யகசிபு. ‘நான் தான் கடவுள். என்னைத் தவிர வேறு எவரும் உயர்ந்தவர் இல்லை. இதை ஒப்புக்கொள். அதற்கு மாறாக என்னை எதிரியான நாராயணனை நீ வணங்குவதாக இருந்தால் நான் உன்னை கொன்று விடுவேன். உன்னை காப்பாற்ற எவராலும் முடியாது’ என்று கொக்கரித்தான்.

    ஆனால் பிரகலாதனோ, ‘நான் நாளும் வணங்கும் நாராயணர் என்னைக் காப்பாற்றுவார்’ என்றான்.

    ‘உன் கடவுளை இப்போது காட்டு, அவன் எங்கிருக்கிறான்’ என்று ஆத்திரத்தில் அறிவிழந்து கத்தினான் இரண்யகசிபு.

    பிரகலாதன் நம்பிக்கை துளிர்த்த பக்தியுடன் கூறினான். ‘அவர் எங்கும் இருப்பார். தூணிலும் இருப்பார், துரும்பிலும் இருப்பார்’ என்றான்.

    உடனே அங்கிருந்த ஒரு தூணை தன் கதாயுதத்தால் தட்டி, ‘இதில் இருக்கிறானா?’ என்றபடி அந்த தூணை ஓங்கி உடைத்தான் இரண்ய கசிபு.

    தூண் உடைந்து விழும் சத்தத்தின் நடுவில் இருந்து பயங்கரமாக கர்ஜனை கேட்டது. அதைக் கேட்டு இரண்ய கசிபு சில அடி தூரம் தள்ளிப்போனான். உடைந்த தூணில் இருந்து மனித உடலும், சிங்க தலையும் கொண்டு, நரசிம்ம மூர்த்தி வெளிப்பட்டார். அவரிடம் இருந்து வெளியான கர்ஜனையானது, அரண்மனை மட்டுமல்ல அகில உலகமும் நடுங்கும்படி இருந்தது.

    இரண்யகசிபுவை தூக்கி பந்தாடிய நரசிம்மமூர்த்தி, அவனை அரண்மனை வாசலில் வைத்து வதம் செய்தார். இரண்யனின் வதம் முடிந்த பிறகும் நரசிம்மபெருமாளின் சீற்றம் தணியவில்லை. தேவர்கள், பிரம்மா, சிவபெருமான், லட்சுமிதேவி எவராலும் அந்த சீற்றத்தை தணிக்க முடியவில்லை. இறுதியில் அவர் மீது அளவு கடந்த பக்தி வைத்து, அதன்காரணமாக பல துன்பங்களை அனுபவித்த சிறுவன் பிரகலாதனால் மட்டுமே அந்த அரிய செயலைச் செய்ய முடிந்தது.

    நரசிம்மர், தன் பக்தன் பிரகலாதனுக்கு முடிசூட்டி விட்டு, நரசிம்ம அவதாரத்தை களைந்து வைகுண்டம் சென்றார். பக்தனைக் காப்பாற்றுவதற்காக நரசிம்மர் அவதரித்த தினமே, நரசிம்ம ஜெயந்தி என்று கொண்டாடப்படுகிறது.
    Next Story
    ×