search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    செவ்வாய் பகவானை பற்றி அறிந்து கொள்ளுங்கள்
    X

    செவ்வாய் பகவானை பற்றி அறிந்து கொள்ளுங்கள்

    உண்மையில் செவ்வாயை கிரகத்தை நினைத்து பயப்பட வேண்டியதில்லை. முதலில் செவ்வாய் யார் என்பதை தெரிந்து கொள்ளுங்கள்.
    செவ்வாய் தோஷம் என்றதும் நிறைய பேர் பயப்பட்டு விடுகிறார்கள். செவ்வாய்தோஷம் படாதபாடுபடுத்தி விடுமோ என்ற உணர்வே அதற்கு காரணமாகும். உண்மையில் செவ்வாயை நினைத்து பயப்பட வேண்டியதில்லை. முதலில் செவ்வாய் யார் என்பதை தெரிந்து கொள்ளுங்கள்.

    சப்தரிஷிகள் மொத்தம் ஏழு பேர். இந்த சப்த ரிஷிகளை பிரம்மா படைத்தார். இவர்கள் மரீசி, புலஸ்தியர், அத்திரி, பிருகு, ஆங்கிரஸ், புலகர், வசிஷ்டர் ஆகியோர் ஆவர்.

    இதில் வசிஷ்ட மகா ரிஷியின் புதல்வர் பரத்துவாசமுனிவர் ஆவார். பரத்துவாஜ் முனிவர் ராமகதையில் இடம் பெற்றவர். ராமபிரான் சீதா தேவியுடன் வனவாசம் சென்ற 14 ஆண்டுகளில் கானகத்தில் அவரை வரவேற்று உபசரித்தவர் பரத்துவாச முனிவர்.

    அவரிடம்தான் அடங்காத பசிக்கு அறுசுவை உணவளிக்கும் அமுதப்பசு காமதேனு இருந்தது.

    இவர் நர்மதை ஆற்றங்கரையில் ஆசிரமம் அமைத்து தவக்கோலம் பூண்டு தவம் இயற்றியவர். தான் கற்ற சகல சாஸ்திர வேதங்களையும், வில்வித்தை, அஸ்திர பிரயோகம் போன்ற கலைகளையும் அவரை தேடி வந்தவர்களை சீடர்களாக கொண்டு கற்றுக் கொடுத்து வந்தார்.

    ஒரு நாள் அதிகாலை பிரம்ம முகூர்த்த நேரமான 4.30 மணிக்கு காலைக்கடன் முடித்து நீராட நர்மதை ஆற்றுக்குச் சென்றார். அங்கே அந்த வேளையில் அழகு மிகுந்த தேவலோக கன்னிகை நீராடி கொண்டிருப்பதைக் கண்டார். கண்கள் வழியே காதல் தலைக்கேற ஐம்புலன்களும் ஆன்மாவுக்கு அடங்காமல் போனது. அந்தப் பெண்ணை அடைய விரும்பி அவள் சம்மதம் கேட்டார். அவளும் இணங்கினாள்.

    ரிஷிப்பிண்டம் இரவு தங்காது என்பார்கள். எனவே உடனே அந்த தேவ கன்னிகைக்கு அழகிய சிவந்த ஆண் குழந்தை பிறந்தது. அவளோ தேவ கன்னிகை! கையில் குழந்தையுடன் தேவ லோகம் செல்ல முடியாது.



    அவரோ ரிஷி மகான்! குழந்தையுடன் ஆசிரமம் செல்ல முடியாது. இருவருமே விளைவுக்கு பின்பே விபரீதத்தை உணர்ந்தனர். இருவரும் நதிக்கரையில் குழந்தையை விட்டு விட்டு கனத்த மனதுடன் தங்கள் இருப்பிடம் சென்றனர்.

    இந்தக் குழந்தையை பார்த்த பூமாதேவி, பூவுலக அன்னை மனமிரங்கி குழந்தையை தன்னுடன் எடுத்துச் சென்றாள். அந்தக் குழந்தையை ஐந்து வயது வரை சீராட்டி வளர்த்தாள். அந்தக் குழந்தையே நம் செவ்வாய் பகவான்! பூமா தேவியால் வளர்க்கப்பட்டதால் அவருக்கு பூமிகாரகன் என்ற பெயரும் உண்டு.

    வயது ஐந்து ஆனதும் பூமிகாரகன் தம் தந்தை யார் என பூமா தேவியிடம் கேட்டார். பூமா தேவியும் அவனின் கதையை கூறி குழந்தையை அழைத்துச் சென்று அவரின் தந்தை பரத்வாச முனிவரிடம் ஒப்படைத்தாள். பரத்வாசரும் தன் மகனை மகிழ்வுடன் ஏற்றுக்கொண்டார்.

    அந்த குழந்தைக்கு செவ்வாய் என பெயர் சூட்டினார். தந்தையாக இருந்து பரிவுடன் வளர்த்தார். ஆசானாக இருந்து வித்தைகள் பல கற்றுக் கொடுத்தார்.
    செவ்வாய் பகவானும் நாள்தோறும் கல்விபயிற்சி, வில்வித்தை, போர் பயிற்சி என வீரக்கலைகள் பலவும் கற்று வீராதி வீரரானார். ஆகவே அவர் வீரபத்திரர் எனவும் அழைக்கப்படுவதுண்டு.

    தாயின் மடியில் பாசத்துடன் வளராத செவ்வாய் பகவானுக்கு குடும்பம், தாய், மனைவி இல்லற உறவு என இவை எல்லாமே பிடிக்காமல் போயிற்று. எனவேதான் ஒருவரின் ஜாதகத்தில் குடும்பம், தாய், இல்லறம், மனைவி ஆகிய உறவுகள் சம்பந்தமான ஸ்தானங்களில் செவ்வாய் பகவான் நின்றாலும், பார்த்தாலும் அந்த ஸ்தானத்துக்கு பாதிப்பை உண்டு பண்ணுகிறார். இதுவே செவ்வாய் தோசம் என வழங்கப்படுகிறது.

    செவ்வாய் எந்த ஜாதகத்திலும் லக்னம் என்று குறிப்பிட்ட முதல் வீட்டிலிருந்து இரண்டாம் வீடு, நாலாம் வீடு, ஏழாம் வீடு, எட்டாம் வீடு, பனிரெண்டாம் வீடு ஆகிய ஸ்தானங்களில் செவ்வாய் நின்றால் அது செவ்வாய் தோசம் எனப்படும்.

    இதேபோல் சந்திரன் நின்ற இடத்திலிருந்தும் 2, 4, 7, 8, 12 ஆகிய இடங்களில் செவ்வாய் நிற்பதும் செவ்வாய் தோஷம் எனப்படும். சில ஜாதகங்களில் செவ்வாய் தோஷம், சிறிதளவே இருக்கும். அதற்கு செவ்வாய் கிழமைகளில் உபவாசம் இருப்பதும், கோவில் ஒன்றில் (எந்த கோவிலாக இருந்தாலும்) செவ்வாய்தோறும் தீபம் ஏற்றி வருவதும், செவ்வாய்க்கிழமை ஒன்றில் கங்கை நதியில் நீராடுவதும், பவழம் மோதிரம் அணிவதும் சிறந்த பரிகாரங்கள் ஆகும்.
    Next Story
    ×