search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    காவிரி புஷ்கரம்: புனித நீராடுவது எப்படி?
    X

    காவிரி புஷ்கரம்: புனித நீராடுவது எப்படி?

    காவிரி புஷ்கரம் நடக்கும் 12 நாட்களில் உங்களுக்கு எந்த தினம் வசதியாக உகந்ததாக இருக்கிறதோ, அன்றைய தினம் காவிரியில் புனித நீராடலாம்.
    காவேரி புனித நீராடல் முறைகள் :

    1. தங்களின் ஜென்ம நட்சத்திரம் அன்று அதிகாலையில் சூரிய உதயத்தில், மதியம் அல்லது துலா லக்னம் நின்ற காலத்தில் நீராடல் நன்று.

    2. நீராடியபின் குரு கிரகத்தின் அருள் வேண்டி “சிவனை” தொழுது தங்களால் இயன்றதை ஆதரவற்றோர் இல்லத்தில் அல்லது வேதம் கற்பிக்கும் பாட சாலையில் அன்னதானம், வஸ்திர தானம் செய்தல்

    3.முன்னோர்கள் நினைவாகவும், சந்ததி பெருகவும், (குரு கிரகம் தான் புத்ர அதிபதி), முற்பிறவி, தற்கால பாபவி மோசனம் வேண்டி தர்பணம், திதி கொடுத்தல்
    குறிப்பு : எக்காரணம் கொண் டும் குரு கிரகம் வழிபாட்டை ‘தட்சணா மூர்த்தி’ க்கு செய்யக் கூடாது இது பெரும் ஆகம பிழை பாவமும் ஆகும்.

    காவிரி புஷ்கரம் நடக்கும் 12 நாட்களில் உங்களுக்கு எந்த தினம் வசதியாக உகந்ததாக இருக்கிறதோ, அன்றைய தினம் காவிரியில் புனித நீராடலாம்.
    அதிகாலையில் நீராடி விடுவது நல்லது. நீராடும் முன்பு ஒரு வெற்றிலையில் கொஞ்சம் மஞ்சள் தூள், கொஞ்சம் உதிரி பூ எடுத்துக் கொள்ளுங்கள். தண்ணீரில் கால் வைப்பதற்கு முன்பு காவிரியை தொட்டு வணங்குங்கள். பிறகு உங்களது குலதெய்வத்தை பிரார்த்தனை செய்து கொள்ளுங்கள்.

    அப்போது நமக்கு வாழ்க்கைக்கு தேவையானவற்றை மனதுக்குள் நினைத்துக் கொள்ள வேண்டும். பிறகு இஷ்ட தெய்வத்தை வணங்கி சங்கல்பம் செய்ய வேண்டும். மூன்றாவதாக மறைந்த நம் முன்னோர்களான பித்ருக்களை மனதுக்குள் நினைத்து வணங்க வேண்டும். அதன்பிறகே தண்ணீரில் கால் எடுத்து வைத்து புனித நீராட வேண்டும்.

    காவிரியின் மகிமை :

    கங்கை யமுனை சரஸ்வதி போன்ற நதிகள் தங்களில் நீரா டும் பக்தர்களின் பாவங்களைச் சுமந்து கருமை அடைந்த நிலையில், மாயூரத்தில் உள்ள காவிரி துலா ஸ்நானக்கட்டத்தில் நீராடித்தான் தூய்மை அடைகின் றனவாம். இதில் இருந்தே நம்மால் காவிரியின் மகிமையைப் புரிந்துகொள்ள முடிகிறது.

    சங்கல்பம் செய்யும் முறை...

    நீங்கள் எந்த நாளில் காவிரியில் நீராடுகிறீர்களோ... அந்த நாளின் திதி, வாரம், நட்சத்திரம், யோகம், கரணத்தைச்சேர்த்து, ஸ்ரீஅபயாம்பிகை சமேத மயூரநாத ஸ்வாமி சன்னி தௌ-ஸ்ரீஞானாம்பிகா சமேத வதான்யேஸ்வர, ஸ்ரீமேதா தட்சிணாமூர்த்தி ஸ்வாமி சன்னிதௌ-ஸ்ரீதுண்டி விநாயக கால பைரவ காசிவிஸ்வேஸ்வர ஸ்வாமி சன்னிதௌ-சர்வ மகாநதி தீர்த்த புஷ்கர புண்யநாளே காவேரி ஸ்நான மஹம் கரிஷ்யே, என்று சங்கல்பம் செய்து கொண்டு நீராட வேண்டும்.



    தினமும் காவிரி தாய் சிலை ஊர்வலம் :

    காவிரி புஷ்கரம் நடைபெறும் 12 நாளும் வேதபாராயணங்கள், ஹோமம்கள் நடத்த முடிவு செய்துள்ளனர். தினமும் மாலை 4 மணி முதல் 5 மணி வரை லலிதா சகஸ்ரநாம் பாராயணம் செய்யப்படும். 5 மணி முதல் 6 மணி வரை விஷ்ணு சகஸ்ரநாமம் பாராயணம் செய்யப்படும். 6 மணிக்கு காவிரி தாய்க்கு ஆரத்தி எடுப்பார்கள். இதற்காக காவிரி தாய் சிலையை தினமும் காவிரி கரைக்கு ஊர்வலமாக எடுத்து வருவார்கள். இதில் பங்கேற்று பாராயணங்களை கேட்பது மிகவும் நல்லது.

    வீட்டில் தெளித்தால் தோஷம் போகும் :

    காவிரி புஷ்கரம் 12 நாட்களும் மயிலாடுதுறை துலா கட்டத்தில் நீர் புனிதமாக மாறும். எனவே அந்த நீரை பாட்டில்களில் எடுத்து வந்து வீட்டில் தெளிக்கலாம். இதனால் தோஷம் நீங்கும். வீட்டில் நீங்கள் சாமி சிலை வைத்திருந்தால் அந்த நீரால் அபிஷேகம் செய்யலாம். இது கும்பாபிஷேகம் செய்த பலனை பெற்று தரும்.

    பித்ரு தர்ப்பணத்தை நீங்களே செய்யலாம் :

    காவிரி புஷ்கரம் நடக்கும் நாட்களில் காவிரி கரையோரம் பித்ருக்களுக்கு தர்ப்பணம் செய்வது மிக மிக நல்லது. இந்த தர்ப்பணம் உங்களுக்கும், உங்கள் குடும்பத்துக்கும் தலைமுறைக்கும் மிகுந்த பலனை தரும்.
    காவிரி புஷ்கரம் நடைபெறும் 12 நாட்களும் 24 மணி நேரமும் இந்த தர்ப்பணத்தை செய்யலாம். அரிசி மாவில் எள் கலந்து உருண்டை தயாரித்து பிண்டம் வைக்கலாம். பிறகு நாமே எள் நீர்விட்டு தர்ப்பணம் செய்யலாம். இது நம் மறைந்த முன்னோர்களை மேலான நிலைக்கு மேலும் உயர்த்த உதவும். அதோடு நமக்கும் பலன்களை அள்ளித்தரும்.

    காவிரி புஷ்கரம் காலம் :

    தினசரி துலா லக்னம் மற்றும் சித்திரை, சுவாதி, விசாகம் நட்சத்திரம் நேரங்களில் புனித நீராட ஏற்ற நேரமாகும்.

    தமிழ்நாட்டில் காவிரி புஷ்கரம் நடக்கும் இடங்கள் :

    ஒகேனக்கல், பவானி-கூடுதுறை, மேட்டூர், கொடுமுடி, கொக்கராயன்பேட்டை, திருச்செங்கோடு, ஸ்ரீநட்டாற்றீஸ்வரர் கோவில், கரூர், பரமத்திவேலூர், திருஈங்கோய்மலை, காட்டுப்புத்தூர், லாலாப்பேட்டை, குளித்தலை, திருப்பராய்த்துறை திருச்சி, ஸ்ரீ ஐயான் அம்மன் படித்துறை மேலச்சிந்தாமணி திருச்சி, ஸ்ரீரங்கம் கருட மண்டபம் திருச்சி, கல்லணை, திருக்காட்டுப்பள்ளி, திருவையாறு, கும்பகோணம் ஸ்ரீபகவத் படித்துறை, குத்தாலம், பூம்புகார்.
    Next Story
    ×