search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    திருத்தணி முருகன் கோவிலில் 15-ந்தேதி ஆடிக்கிருத்திகை விழா
    X

    திருத்தணி முருகன் கோவிலில் 15-ந்தேதி ஆடிக்கிருத்திகை விழா

    திருத்தணி முருகன் கோவிலில் ஆடிக்கிருத்திகை விழா வருகிற 13-ந்தேதி தொடங்கி 17-ந் தேதி வரை 5 நாட்கள் நடக்க உள்ளது.
    திருத்தணி முருகன் கோவிலில் ஆடிக்கிருத்திகை விழா வருகிற 13-ந்தேதி தொடங்கி 17-ந் தேதி வரை 5 நாட்கள் நடக்கிறது.

    வருகிற 13-ந் தேதி ஆடி அஸ்வினியுடன் விழா தொடங்குகிறது. மறுநாள் 14-ந் தேதி ஆடி பரணியும், 15-ந் தேதி ஆடிக்கிருத்திகை விழாவும் விமரிசையாக நடக்கிறது.

    விழாவையொட்டி முருகப்பெருமானுக்கு தினமும் சிறப்பு அலங்காரத்தில் விசே‌ஷ பூஜைகள் நடக்கிறது. ஆடிக்கிருத்திகை அன்று மூலவருக்கு தங்க கவசம் அணிவிக்கப்பட்டு சிறப்பு வழிபாடு நடைபெறுகிறது.

    விழாவின் முக்கிய நிகழ்ச்சியான தெப்பத்திருவிழா 15-ந் தேதி முதல் 17-ந் தேதி வரை 3 நாட்கள் கோவிலுக்கு சொந்தமான சரவண பொய்கை திருக்குளத்தில் நடக்கிறது. இதற்கான ஏற்பாடுகள் நடந்து வருகின்றன.

    ஆடிக்கிருத்திகையையொட்டி திருத்தணி கோவிலுக்கு லட்சக்கணக்கான பக்தர்கள் வருவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.



    கோவில் நிர்வாகம் சார்பில் பக்தர்கள் மலர் காவடிகள் செலுத்துவதற்கான வசதிகள் செய்யப்பட்டுள்ளது. முருகப்பெருமானை தரிசனம் செய்யும் வகையில் சிறப்பு தரிசன வழிகளும் செய்யப்பட்டுள்ளன.

    பக்தர்கள் தலைமுடி காணிக்கை நேர்த்திக்கடன் செலுத்துவதற்கு வசதியாக திருத்தணி நகரின் அமிர்தாபுரம் நல்லான்குளம் பகுதி, சரவண பொய்கை திருக்குளம் பகுதி, சன்னதி தெரு உள்பட பல்வேறு பகுதிகளில் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.

    பக்தர்களின் வசதிக்காக தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும், ஆந்திரா, கர்நாடகா மற்றும் புதுச் சேரியில் இருந்து திருத்தணிக்கு சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகிறது. கூட்ட நெரிசலை தவிர்க்கும் வகையில் திருத்தணி நகர எல்லைகளில் உள்ள சென்னை சாலை, திருப்பதி சாலை, அரக்கோணம் சாலை, சித்தூர் சாலை, பொதட்டூர்பேட்டை சாலை போன்ற பகுதிகளில் தற்காலிக பஸ் நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளது.

    தெப்பத்திருவிழாவை யொட்டி 3 நாட்கள் தினமும் மாலை இன்னிசை கச்சேரி நடக்கிறது. போலீஸ் சூப்பிரண்டு சிபி சக்கரவர்த்தி மேற்பார்வையில் திருவள்ளூர், காஞ்சீபுரம், வேலூர், விழுப்புரம் ஆகிய மாவட்டத்தில் இருந்து 500-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளனர்.

    விழாவுக்கான ஏற்பாடுகளை திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் (பொறுப்பு) முத்து மேற்பார்வையில் தக்கார் ஜெய்‌ஷங்கர், இணை ஆணையர் சிவாஜி மற்றும் அரசுத்துறை அதிகாரிகள், திருக்கோவில் அலுவலர்கள். பணியாளர்கள் செய்து வருகின்றனர்.
    Next Story
    ×