search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    வண்டி வேடிக்கையில் மதுரை மீனாட்சி அம்மன்,ஸ்ரீ காமாட்சி அம்மன் பக்தர்களுக்கு அருள்பாலித்த காட்சி.
    X
    வண்டி வேடிக்கையில் மதுரை மீனாட்சி அம்மன்,ஸ்ரீ காமாட்சி அம்மன் பக்தர்களுக்கு அருள்பாலித்த காட்சி.

    குகை மாரியம்மன் கோவில் திருவிழா: ‘இந்திரலோகம்’ போல காட்சி அளித்த பக்தர்களின் வண்டிவேடிக்கை நிகழ்ச்சி

    சேலம் குகை மாரியம்மன்-காளியம்மன் கோவில் ஆடி திருவிழாவையொட்டி பக்தர்களின் வண்டி வேடிக்கை நிகழ்ச்சியானது ‘இந்திரலோகம்‘ போல காட்சி அளித்தது. ஆயிரக்கணக்கான பக்தர்கள் கண்டு பரவசம் அடைந்தனர்.
    சேலம் குகையில் உள்ள மாரியம்மன்-காளியம்மன் கோவில் ஆடிப்பண்டிகை விழா கடந்த மாதம் பூச்சாட்டுதலுடன் தொடங்கி நடந்து வருகிறது. நேற்று முன்தினம் ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் அக்னி குண்டம் இறங்கி நேர்த்திக்கடன் செலுத்தினர். நேற்று இரவு வண்டி வேடிக்கை நிகழ்ச்சி நடந்தது. அதற்காக விரதம் இருந்து வந்த பக்தர்கள் குழுவினர் வண்டி வேடிக்கை நிகழ்ச்சியை நடத்தினார்கள்.

    சேலம் குகை ஆண்டிசெட்டித்தெரு வண்டி வேடிக்கை விழா கமிட்டி சார்பாக சூரபத்மனோடு போரிட முருகன் ஸ்ரீசக்தியிடம் வேல் பெற்றுக்கொண்டு வரும் காட்சியினை மின்னொளியில் அலங்கரிக்கப்பட்ட வண்டியில் ஊர்வலமாக கோவிலுக்கு வந்தனர். புலிகுத்தி தெரு குகை இளைஞர் குழு சார்பில் தசரத மன்னர், ஜனகமன்னர் நல்லாசியுடன் நடைபெற்ற சீதா, ராமர் திருமண வண்டி வேடிக்கை காட்சி தத்ரூபமாக அமைக்கப்பட்டு வலம் வந்தது. இதனை பொதுமக்கள் வியந்து பார்த்து ரசித்தனர்.


    ஆட்டோ, லோடுமேன் தொழிலாளர்கள் சங்கம் சார்பில் நடந்த வண்டி வேடிக்கையில், முருகன், வள்ளி-தெய்வானை, வீரபாகுவுடன் அருள்பாலித்தார்.

    இதேபோல், ஆட்டோ-லோடு மேன் தொழிலாளர்கள் வண்டி வேடிக்கை குழுவினர், திருபெருகுன்றத்தில் முருகன், வள்ளி, தெய்வானை வீரபாகு ஆகியோருடன் காட்சி தருவதுபோல வலம் வந்தனர். இந்த வண்டி வேடிக்கையை அனைவரும் பார்த்து ரசித்தனர். செங்கல்பட்டி பகுதியில் உள்ள குழுவினர் சார்பில் ஸ்ரீ காமாட்சி, ஆதிசங்கரர், மீனாட்சி, விசாலாட்சி வண்டி வேடிக்கை நிகழ்ச்சி நடத்தப்பட்டது.

    இதுபோல மேலும் 10 வண்டி வேடிக்கை குழுவினர் பல்வேறு பக்தவேட காட்சிகளில் ஊர்வலமாக வந்தனர். குகை பகுதியில் இரவு 7 மணிக்கு தொடங்கிய வண்டி வேடிக்கை நிகழ்ச்சி இரவு 11 மணி வரையிலும் நடந்தது. இந்த வண்டி வேடிக்கை நிகழ்ச்சியை ஆயிரக்கணக்கான பக்தர்கள் கண்டு களித்தனர்.


    சேலம் புலிக்குத்தி தெரு இளைஞர் குழு சார்பில் சீதா, ராமர் திருமண வண்டி வேடிக்கை நிகழ்ச்சி நடந்தது.

    பக்தர்கள் ஆயிரக்கணக்கில் செலவழித்து டிராக்டர், மினிலாரி போன்றவற்றில் மின்விளக்கு அலங்காரத்தில் வண்டி வேடிக்கை நிகழ்ச்சி நடத்தியது இந்திரலோகமே மண்ணுலகிற்கு வந்ததுபோல இருந்தது. வண்டி வேடிக்கை நிகழ்ச்சியை காண சேலம் மாநகரம், மாவட்டம் மற்றும் நாமக்கல் உள்ளிட்ட வெளி மாவட்டங்களில் இருந்தும் ஆயிரக்கணக்கில் பொதுமக்கள் திரண்டு வந்திருந்தனர். முடிவில் சிறந்த முறையில் அலங்கரித்து வண்டி வேடிக்கை நடத்திய குழுவினருக்கு குகை மாரியம்மன், காளியம்மன் திருவிழா வண்டிவேடிக்கை பரிசளிப்பு சங்கம் சார்பில் பரிசுகள் வழங்கப்பட்டன.

    கூட்ட நெரிசலை சமாளிக்கும் வகையில் மாநகர போலீஸ் கமிஷனர் சஞ்சய்குமார் உத்தரவின்பேரில் உதவி கமிஷனர் அன்பு தலைமையில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். வண்டி வேடிக்கை நிகழ்ச்சியையொட்டி சேலம்-திருச்சி மெயின்ரோட்டில் போக்குவரத்து அடியோடு நிறுத்தப்பட்டது.
    Next Story
    ×