search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவில் ஆடிப்பூர திருவிழா இன்று தொடங்குகிறது
    X

    ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவில் ஆடிப்பூர திருவிழா இன்று தொடங்குகிறது

    ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவில் ஆடிப்பூர திருவிழா இன்று கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. விழாவில் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் வருகிற 27-ந்தேதி நடைபெறுகிறது.
    ஆண்டாளின் அவதார தினமான ஆடிப்பூர நன்நாளை கொண்டாடும் விதமாக ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவிலில் ஆடிப்பூர திருவிழா இன்று(புதன் கிழமை) காலை கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. 12 நாட்கள் நடைபெறும் இந்த திருவிழாவில் 5-ம் நாளான 23-ம் தேதி(ஞாயிற்றுக் கிழமை) காலை பெரியாழ்வார் மங்களாசாசனம் நடைபெறும். அப்போது ஆடிப்பூர பந்தலுக்கு பெரியாழ்வார் எழுந்தருளி பெரிய பெருமாள், சுந்தரராஜப் பெருமாள், சீனிவாசப்பெருமாள், திருத்தங்கல் நின்ற நாராயண பெருமாள், ஆண்டாள், ரெங்கமன்னார் ஆகியோருக்கு மங்களாசாசனம் செய்யும் வைபவம் நடைபெறும். அன்று இரவு ஐந்து கருட சேவை நடைபெறும்.

    அப்போது ஆண்டாள் பெரிய அன்ன வாகனத்திலும், ரெங்கமன்னார், பெரியபெருமாள், சுந்தரராஜப் பெருமாள், சீனிவாசப்பெருமாள், திருத்தங்கல் நின்ற நாராயண பெருமாள் கருட வாகனங்களிலும், பெரியாழ்வார் சிறிய அன்ன வாகனத்திலும் எழுந்தருளுவார்கள்.

    7-ம் நாளான 25-ம் தேதி(செவ்வாய்கிழமை) இரவு 7 மணி முதல் கிருஷ்ணன்கோவிலில் சயன சேவை நடைபெறும். அப்போது ஆண்டாள் திருமடியில் ரெங்கமன்னார் சயனத் திருக்கோலத்தில் பக்தர்களுக்கு அருள்பாலிப்பார். 8-ம் நாளான 26-ம்தேதி (புதன்கிழமை) மதுரை அழகர்கோவில் மற்றும் ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலிலிருந்து பரிவட்டங்கள் பிரசாதமாக கொண்டு வரப்பட்டு ஆண்டாளுக்கு சாற்றப்படும். 9-ம் நாளான 27-ம்தேதி (வியாழக்கிழமை) அதிகாலை ஆடிப்பூர தேரோட்டம் நடைபெறுகிறது.

    ஆடிப்பூர திருவிழாவிற்கு ஏராளமான பக்தர்கள், பல்வேறு பகுதிகளில் இருந்து வருவார்கள் என்பதால், மாவட்ட நிர்வாகம் மற்றும் காவல் துறை விரிவான பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்துள்ளது. சிறப்பு பஸ்கள், குடிநீர் வசதி, கழிப்பறை வசதிகள் உள்ளிட்டவை செய்து தர ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. பக்தர்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் நகரின் பல்வேறு இடங்களில் கண்காணிப்பு கோபுரங்கள் மற்றும் கேமராக்கள் பொருத்தப்பட்டு கண்காணிப்புப் பணியில் போலீசார் ஈடுபட உள்ளனர். மேலும் மருத்துவக் குழுவினர் மற்றும் தீயணைப்பு படையினர் முழு அளவில் பணியில் ஈடுபட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
    Next Story
    ×