search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    முத்தாலம்மன் கோவில் கும்பாபிஷேகம் நடைபெற்றதையும், அதில் கலந்து கொண்ட பக்தர்களையும் காணலாம்.
    X
    முத்தாலம்மன் கோவில் கும்பாபிஷேகம் நடைபெற்றதையும், அதில் கலந்து கொண்ட பக்தர்களையும் காணலாம்.

    கடலூர் திருப்பாதிரிப்புலியூர் முத்தாலம்மன் கோவில் கும்பாபிஷேகம்

    கடலூர் திருப்பாதிரிப்புலியூர் முத்தாலம்மன்கோவில் கும்பாபிஷேகம் நடந்தது. விழாவில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
    கடலூர் திருப்பாதிரிப்புலியூர் அக்கிள் நாயுடுதெரு எதிரில் முத்தாலம்மன் கோவில் உள்ளது. இந்த கோவில் போக்குவரத்துக்கு இடையூறாக இருந்தது. இதையடுத்து இந்த கோவிலை இடிக்க மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டது. அதன்படி இக்கோவிலை இடித்து விட்டு புதிதாக கோவில் கட்டி கும்பாபிஷேகம் நடத்த நிர்வாகத்தினர் முடிவு செய்தனர். அதன்படி இக்கோவில் இடிக்கப்பட்டு, அதன் அருகிலேயே ரூ.70 லட்சம் செலவில் புதிதாக கோவில் கட்டப்பட்டது. புதுப்பொலிவுடன் காட்சி அளிக்கும் இந்த கோவில் கும்பாபிஷேக விழா கடந்த 27-ந்தேதி தொடங்கியது. இதையொட்டி விக்னேஸ்வர மற்றும் கலச பூஜையும், மாலையில் சிறப்பு ஹோமங்கள் மற்றும் தீபாராதனை நடந்தது.

    28-ந்தேதி கோ பூஜை, தன பூஜை, நவக்கிரக கலச பூஜை, ஹோமங்கள், திரவியாகுதி, பூர்ணாகுதி, தீபாராதனை நடந்தது. இரவு 8.30 மணி அளவில் புனிதநீர் அடங்கிய கலசத்தை சிவாச்சாரியார்கள் யாக சாலைக்கு கொண்டு வந்தனர். பின்னர் அங்கு யாக சாலை பூஜைகள் மற்றும் ஹோமங்கள் நடந்தது. நேற்று முன்தினம் காலை 7.30 மணிக்கு விசேஷ சந்தி, யாக மண்டப பூஜை, வேதிகா பூஜை, கும்ப பூஜை, யாக பூஜை, விசேஷ திரவியாகுதி உள்பட பல்வேறு சிறப்பு பூஜைகள், ஹோமங்கள் நடந்தது.

    நேற்று காலை 7 மணிக்கு யாக மண்டப பூஜை, வேதிகா கும்ப பூஜை, கன்யா பூஜை, தம்பதி பூஜை, 9 மணிக்கு மகா பூர்ணாகுதி, தீபாராதனை, யாத்ரா தானம் நடைபெற்றது. தொடர்ந்து காலை 9.30 மணி அளவில் யாகசாலையில் இருந்து புனிதநீர் அடங்கிய கலசங்களை சிவாச்சாரியார்கள் ஊர்வலமாக கொண்டு வந்தனர். அவருடன் முக்கிய பிரமுகர்களும் ஊர்வலமாக வந்தனர்.

    தொடர்ந்து 10 மணி அளவில் கோபுர கலசங்கள் மீது புனித நீர் ஊற்றப்பட்டு கும்பாபிஷேகம் நடந்தது. அப்போது கோவிலை சுற்றி திரண்டு நின்ற பக்தர்கள் மீது புனித நீர் தெளிக்கப்பட்டது. புனித நீர் பட்டதும் பக்தர்கள் பரவசத்துடன் சாமி கும்பிட்டனர்.

    அதன்பிறகு மூலவரான முத்தாலம்மன் மற்றும் விநாயகர், முருகன், வராஹி அம்மன் ஆகிய சாமி சிலைகளுக்கு மகா அபிஷேகம் செய்யப்பட்டு தீபாராதனை நடைபெற்றது. விழாவில் திருப்பாதிரிப்புலியூர் மட்டுமின்றி அதனை சுற்றியுள்ள பகுதிகளில் இருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். விழாவையொட்டி பக்தர்களுக்கு அன்னதானம், நீர், மோர் வழங்கப்பட்டது. விழாவுக்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகிகள் திருஞானசேகர், என்.கே.ராஜூ, கமலநாதன், சம்பத், ஆறுமுகம், சத்தியமூர்த்தி, மணிவண்ணன், முன்னாள் நகரசபை கவுன்சிலர் சுகந்திராஜூ, கதிர்வேல், ஸ்ரீதர் உள்பட பலர் செய்திருந்தனர்.
    Next Story
    ×