search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    நாகதோஷம் நீக்கும் ஸ்ரீ சுயம்பு நாகமணி தேவி ஆலயம்
    X

    நாகதோஷம் நீக்கும் ஸ்ரீ சுயம்பு நாகமணி தேவி ஆலயம்

    நாக தோஷத்தை நிவர்த்தி செய்யும் நாகம்மா அருள்பாலிக்கும் ஆலயம் ஒன்று திம்மராய சமுத்திரத்தில் உள்ளது. ஸ்ரீ சுயம்பு நாகமணி தேவி ஆலயம் என்பது இந்த ஆலயத்தின் பெயராகும்.
    தோஷ நிவர்த்தி தலங்கள் பல உண்டு. நாக தோஷ நிவர்த்தி தலங்களும் பல உண்டு. நாக தோஷத்தை நிவர்த்தி செய்யும் நாகம்மா அருள்பாலிக்கும் ஆலயம் ஒன்று திம்மராய சமுத்திரத்தில் உள்ளது. ஸ்ரீ சுயம்பு நாகமணி தேவி ஆலயம் என்பது இந்த ஆலயத்தின் பெயராகும்.

    சுமார் 400 ஆண்டுகள் பழமையானது இந்த ஆலயம். ஒரு கருவ மரமும் அதையொட்டி ஒரு புற்றும் வளர்ந்து வர மக்கள் அந்தப் புற்றை நாகம்மாவாகப் பாவித்து வணங்கி வரத்தொடங்கினர். மரமும் வளர்ந்தது. புற்றும் வளர்ந்தது. இரண்டடி, மூன்றடி என்று தொடங்கி புற்று பத்தடி உயரத்திற்கு மேல் வளர்ந்தது. அதைத் தொடர்ந்து அந்த கிராம மக்கள் சார்பில் புற்றின் முன் ஒரு விக்கிரகம் பிரதிஷ்டை செய்யப்பட்டது.

    அந்த விக்கிரகத்தின் கீழ் பகுதி சிவலிங்கமாகவும், மேல் பகுதியில் அன்னையின் சிரசும் அமைக்கப்பட்டு அலங்கரிக்கப்பட்ட பின் அன்னையின் உருவம் மட்டுமே தெரியும் அமைப்பாக உள்ளது. அன்னை நாகமணி தேவியின் சன்னிதிக்கு வந்து வேண்டுவோருக்கு வேண்டும் அனைத்தும் கிடைப்பதாக மக்கள் கூறுகின்றனர்.

    அன்னையின் கருவறையில் அன்னை இன்முகத்துடன் அமர்ந்திருக்க அந்த கருவறை முழுவதையும் மண்புற்று ஆக்கிரமித்துள்ளது.  அந்தப் புற்றில் ஒரு நாக குடும்பமே வசிப்பதாக ஆலய நிர்வாகி எந்தவித பதற்றமும் இன்றி கூறுவது நம்மை சிலிர்க்க வைக்கிறது. அதில் வசிக்கும் சில நாகங்கள் அவ்வப்போது வெளியில் வருவது உண்டாம். பக்தர்கள் பலரும் அதைப் பார்த்திருப்பதாக மெய்சிலிர்த்தபடி தெரிவிக்கின்றனர். கருவறையில் எப்போதாவது வலம் வரும் நாகத்தை ஆராதனை செய்யவரும் அர்ச்சகர் பொருட்படுத்துவது இல்லையாம்.

    ஆலய அமைப்பு :

    ஆலயம் வடக்கு திசை நோக்கி அமைந்துள்ளது. ஒருபுறம் கொள்ளிடம் ஆறு ஓட, சாலையை விட்டு மறுபுறம் இறங்கினால் கோவிலை தரிசனம் செய்யலாம். ஆலய முகப்பின் இடதுபுறம் காளியும் வலதுபுறம் பேச்சியம்மனும் அருள்        பாலிக்கின்றனர். உள்ளே நுழைந்ததும் மகா மண்டபமும் அருகே சூலமும் சிம்மமும் உள்ளன. உட்பிரகாரத்தில் மேற்கில் மகாலிங்க சாஸ்தா, கொம்பரேஸ்வரர், காமாட்சி அம்மன், கலிங்கு நர்த்தனார், சப்த மாதாக்கள், மகாலட்சுமி, ஆஞ்சநேயர் திருமேனிகள் அருள்பாலிக்கின்றன. வடகிழக்கு மூலையில் நவக்கிரக நாயகர்கள் அருள்பாலிக்கின்றனர். அத்துடன் கிழக்கில் காத்தவராயன் சன்னிதியும் உள்ளது.  

    கருவறையின் முன் இருபுறமும் துவாரபாலகிகள் வீற்றிருக்க நாகம்மா அன்னை வடதிசை நோக்கி அருள்பாலிக்கிறாள். அன்னையின் தலைக்கு மேல் நாகம் படம் எடுத்து ஆடுவது போன்ற அமைப்பு உள்ளது.

    புற்றில் உள்ள கருவை மரத்தில் காளிதேவியும், புற்றில் நாகம்மாவும், வெளியே அங்காளப் பரமேஸ்வரியும் வாசம் செய்வதாக பல நூறு ஆண்டுகளாக நம்பிக்கை உள்ளது. ஆலய தல மரங்கள் கருவை, வேம்பு என இரு மரங்கள்.

    காவல் தெய்வங்கள் :

    மகாமண்டபத்தை விட்டு வெளியே வந்தால் அகன்று விரிந்த ஆலய வளாகம் உள்ளது. பல காவல் தெய்வங்கள் அங்கு அருள்புரிகின்றனர். மேற்கில் அங்காளப்பரமேஸ்வரி, வடக்கில் கருப்புசாமி, முனிஸ்வரர், மதுரைவீரன் ஆகியோர் அருள்பாலிக்கின்றனர். கிழக்கில் நெல்லி மரமும் அதன் அடியில் பைரவரும் அருள்பாலிக்கின்றனர். தவிர சுடலை மாடசாமி, சாம்புக மூர்த்தி, சமயபுரத்தம்மன் சன்னிதிகள் உள்ளன. தலவிருட்சமான வேம்பு அன்னை சமயபுரத்தம்மன் சன்னிதிக்கு பின்புறம் இருக்கிறது. இந்த வேம்பு மரம் அடியில் மூன்று கிளைகளாகப் பிரிந்துள்ளது. பின்னர், ஒவ்வொரு கிளைகளும் மூன்று மூன்று கிளைகளாகப் பிரிந்து பார்ப்பவர்கள் அனைவரையும் வியப்பில் ஆழ்த் திக் கொண்டிருக்கிறது.



    பூஜையும் விழாக்களும் :

    அன்னை நாகமணிக்கு ஞாயிற்றுக்கிழமை ராகு கால பூஜை நடைபெறுகிறது. மாலை 4.30 முதல் 6 மணி வரை நடைபெறும், இந்த பூஜையில் கலந்து கொள்வதால் சகல தோஷங்களும் விலகும் என்கின்றனர் பக்தர்கள். இந்த ஆலயத்தில் தீர்த்த பிரசாதமாக, புற்று மண் கலந்த நீரை வழங்குகிறார்கள். பல வியாதிகளை குணமாக்கும் வல்லமை இந்த தீர்த்தத்திற்கு உண்டு என்கின்றனர், தீர்த்த நீரை வாங்கிப் பருகி நோய் தீர்ந்த பக்தர்கள்.

    வைகாசி மாதம் வளர்பிறை பூரம் நட்சத்திரம் அன்று தொடங்கி 9 நாட்கள் இந்த ஆலயத்தில் திருவிழா நடைபெறுகிறது. முதல் நாள் காப்பு கட்டுதலுடன் விழா தொடங்கும். 7–ம் நாள் கரகம், பால்குடம், அக்னி சட்டி முதலியவைகளுடன் சுமார் 200–க்கும் மேற்பட்டோர் கொள்ளிட நதியில் இருந்து புறப்பட்டு ஆலயம் வந்து சேருவார்கள். 8–ம் நாள் அடசல் பூஜையும், 9–ம் நாள் மஞ்சள் நீராட்டு விழாவும் நடைபெறும். அனைத்து ஞாயிற்றுக்கிழமைகளிலும் ஊஞ்சல் உற்சவம் வெகு சிறப்பாக நடத்தப்படுகிறது.

    அன்னையிடம் தங்கள் குறைகளைக் கூறி வேண்டிக் கொள்பவர்கள், தங்களது வேண்டுதல் பலித்ததும் அன்னைக்கு புடவை சாத்துவதுடன், அம்பாள் சன்னிதியில் விளக்கு ஏற்றி தங்கள் நேர்த்திக்கடனை செலுத்தி வழிபட்டு நன்றியினை தெரிவித்துக்கொள்கின்றனர். இந்த ஆலயம் ‘ஓம்’ என்ற பிரணவ மந்திரத்தின் அமைப்பில் அமைந்துள்ளது வியப்பான தகவலாகும்.

    யாக பூஜை:

    தை மாதம் அஸ்த நட்சத்திரம் சஷ்டி திதியில் வரும் அம்மன் பிறந்த நாள் அன்று, அன்னையின் முன் மகா மண்டபத்தில் விசேஷ ஹோமம் நடத்தப்படுகிறது. பல நூறு பக்தர்கள் இதில் கலந்து கொள்கின்றனர்.

    ஒரு முறை இந்த யாகம் நடந்த போது ஓர் அதிசயம் நடந்துள்ளது. கொழுந்து விட்டு எரிந்த யாகத்தீயில் அன்னையின் உருவம் தீப்பிழம்பாய் மேலெழுந்து, கூடியிருந்த பக்தர்களை மெய்சிலிர்க்க வைத்ததாக கூறுகிறார்கள்.

    அந்த உருவத்தின் கையில் கத்தியும், தலையில் பிறையும் இருப்பது புகைப்படத்தில் கூட தெளிவாகத் தெரிகிறது. அந்த புகைப்படம் ஆலயத்தில் மாட்டி வைக்கப்பட்டுள்ளது.

    அன்னையின் சன்னிதியில் நாம் நுழையும் போது நம் மனதில் இனம் தெரியாத சிலிர்ப்பு உண்டாகி மனம் இலகுவாக மாறுவதை நம்மால் நிச்சயமாக உணர முடியும்.   

    ஆலயம் காலை 5½ மணி முதல் 8 மணி வரையிலும், மாலை 6 மணி முதல் இரவு 7½ மணி வரையிலும் திறந்திருக்கும். தினசரி இரண்டு கால பூஜை மட்டுமே இங்கு நடைபெறுகிறது.  

    திருவானைக்கோவிலிருந்து கல்லணை செல்லும் சாலையில் உள்ளது திம்மராய சமுத்திரம். இங்குதான் இந்த ஆலயம் உள்ளது. திருச்சி சத்திரம் பேருந்து நிலையத்தில் இருந்து 4 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது. இந்த ஆலயத்திற்கு செல்ல பேருந்து வசதி  உள்ளது. முதியோர் இல்லம் என்ற நிறுத்தத்தில் இறங்கினால் அருகிலேயே ஆலயம் உள்ளது. ஆட்டோ வசதியும் உண்டு.

    வேண்டியதை வேண்டியபடி அருளும் நாகமணி தேவியை நாமும் ஒரு முறை தரிசித்து வரலாமே!
    Next Story
    ×