search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    வரங்களை அள்ளித்தரும் காஞ்சீபுரம் தாமல் வராகீசுவரர் திருக்கோவில்
    X

    வரங்களை அள்ளித்தரும் காஞ்சீபுரம் தாமல் வராகீசுவரர் திருக்கோவில்

    காளஹஸ்திக்கு இணையான பரிகாரத் தலம், ராகு, கேது தோஷம் நீக்கும் தலம் என பல்வேறு சிறப்புகள் கொண்டு திகழ்கிறது, காஞ்சீபுரம் தாமல் வராகீசுவரர் கோவில்.
    காளஹஸ்திக்கு இணையான பரிகாரத் தலம், தொண்டை மண்டலத் திருக்கோவில், மகாவிஷ்ணு வராக அவதாரத்தில் வழிபட்ட சிவன் வாழும் தலம், சரபேஸ்வரருக்கு லிங்கத் திருமேனி அமைந்துள்ள ஆலயம், ராகு, கேது தோஷம் நீக்கும் தலம், பல்லவர், சோழர், விஜயநகர மன்னன் என பலரும் போற்றி வணங்கிய கோவில் என பல்வேறு சிறப்புகள் கொண்டு திகழ்கிறது, காஞ்சீபுரம் மாவட்டத்தில் அமைந்துள்ள தாமல் வராகீசுவரர் திருக்கோவில்.

    புராண வரலாறு :

    ஒரு முறை இரண்யாக்ஷன் என்ற அசுரன், பூமா தேவியைக் கடலுக்கு அடியில் கடத்திச் சென்று மறைத்து வைத்தான். இந்த அசுரன் இரண்யகசிபுவின் சகோதரன் ஆவான். இரண்யாக்ஷனின் இந்த செயலால் பூமியில் வாழ்ந்த உயிர்கள் அனைத்தும் துன்பம் அடைந்தன. உலக இயக்கம் நின்று போனது. தேவர்கள் அனைவரும் மகாவிஷ்ணுவிடம் சென்று பூமியைக் காத்தருளும்படி வேண்டி நின்றனர்.

    இதையடுத்து மகாவிஷ்ணு, வராக (பன்றி) அவதாரம் எடுத்து, கடலுக்குள் சென்று இரண்யாக்ஷனை அழித்து பூமாதேவியை மீட்டுக் கொண்டு வந்தார். அசுரனை அழித்த பின்னரும் வராகரின் அவேசம் அடங்கவில்லை. இதையடுத்து அவர் கடலை கலக்கிக் கொண்டிருந்தார். இதனால் கடலில் வாழ்ந்த உயிரினங்கள் அனைத்தும் துன்பம் அடைந்தன. இதனைக் கண்ட முனிவர்களும், தேவர்களும், மகாவிஷ்ணுவின் கோபத்தை கட்டுப்படுத்தும்படி சிவபெருமானை வேண்டினர்.

    சிவபெருமான், வேடன் வடிவில் தோன்றி, வராக அவதாரத்தில் இருந்த மகாவிஷ்ணுவுடன் மோதினார். வராகத்தின் கொம்பை உடைத்து, அவற்றை தனது அணிகலனாக ஆக்கிக்கொண்டான். இதற்கு பிறகு வராக உருவில் இருந்த திருமாலின் கோபம் தணிந்தது. பின்னர் திருமால், சிவபெருமானை வழிபட்டு வேடன் வடிவில் தோன்றி, வராகனை வீழ்த்தி அதன் கொம்புகளை உடைத்து அவற்றைத் தனது அணிகலன் ஆக்கினார். பின்னர் திருமால், இத்தல சிவபெருமானை வழிபட்ட பேறுபெற்றார் என்று காஞ்சி புராணம் கூறுகிறது.

    வராக அவதாரத்தில் இருந்த மகாவிஷ்ணு, சிவபெருமானை வணங்கி வழிபட்டதால், இத்தல இறைவன் வராகீசுவரர் என்றும், பன்றீசுவரர் என்றும் அழைக்கப்படுகின்றார். இந்த வரலாறு நிகழ்ந்த இடம் தாமல் என்ற திருத்தலமாகும்.

    தொன்மைச் சிறப்பு :

    பல்லவர்கள், சோழர்கள், ராஷ்டிரகூடர்கள், பாண்டியர்கள், விஜயநகர மன்னர்கள் என பல்வேறு மன்னர் களும் போற்றி வழிபட்ட திருக்கோவிலாக தாமல் சிவாலயம் திகழ்கின்றது. மன்னர்கள் காலத்திலேயே இவ்வூர் பல்வேறு போர்களைச் சந்தித்ததை வரலாறு நமக்கு எடுத்துரைக்கிறது. தாமல் என்ற பெயர், மூன்றாம் சிம்மவர்மனின் செப்பேட்டில் (கி.பி. 1556) குறிப்பிடப்பட்டுள்ளது. ஜெயங்கொண்ட சோழமண்டல தாமல் கோட்டத்தில், தாமர் நாட்டு, தாமநல்லூர் என பழங்காலக் கல்வெட்டு குறிப்பிடுகிறது. தாமல் என்பதற்கு தடாகம் அல்லது குளம் என்று பொருள் கொள்ளலாம். இந்த ஊரில் மிகப்பெரிய பல்லவர் காலத்து ஏரி இருப்பது இதனை உறுதி செய்கின்றது.

    புறநானூற்றில் தாமல் பற்றிய குறிப்பு காணப்படுகின்றது. நலங்கிள்ளியின் சகோதரர் மாவலத்தான் பற்றி, தாமலைச் சேர்ந்த தமப்ப கண்ணனார் என்ற புலவர் இயற்றிய பாடல் வாயிலாக தாமலைப் பற்றி அறிய முடிகிறது.

    ஆலய அமைப்பு :

    35 மீட்டர் நீளமும், 30 மீட்டர் அகலமும் கொண்டு இவ்வாலயம் அமைந்துள்ளது. ஆலயத்தினை ஒட்டி அழகிய திருக்குளம் உள்ளது. மேற்கு நோக்கிய 7 நிலை ராஜகோபுரம், அண்மையில் திருப்பணியின் போது அடியார்களால் எழுப்பப்பட்டுள்ளது. பல்லவர், சோழர், ராஷ்டிரகூடர், பாண்டியர், விஜயநகர மன்னர்கள் என அனைத்து மன்னர்களின் கலைப்பாணியும் இக்கோவிலில் காணப்படுகிறது.

    வெளிப்புற மண்டபம் விஜயநகர மன்னர் காலம், இதன் தூண்களில் ராமர், சீதை, லட்சுமணன் மற்றும் ராவணன் என ராமாயணக் காவியக் காட்சிகள் புடைப்புச் சிற்பங் களாகக் காட்சி தருகின்றன. உண்ணாழி எனும் உள்சுற்று மண்டபம் 50 தூண்களைக் கொண்டு சோழர் மற்றும் விஜயநகர மன்னர் பாணியில் அமைந்துள்ளது. இதில் சிவபுராணச் சிற்பங்கள் புடைப்புச் சிற்பங்களாக அமைந்துள்ளன.

    வராகீசுவரர் :

    கருவறையில் மேற்கு முகமாய் இறைவன் வராகீசுவரர் காட்சி தருகிறார். வட்ட வடிவ ஆவுடையாராக சிவலிங்கத் திருமேனியில் இறைவன் ஆசி வழங்குகின்றார். இவரே பன்றீசர், திருப்பன்றீசுவரர், திருப்பன்றீசுவரமுடையார், தாமலுடையார் எனப் பல்வேறு பெயர் களில் அழைக்கப்பட்டவர். இன்று இவரது திருப்பெயர் வராகீசுவரர் என்பதாகும்.
    வெளிப்புற மண்டபத்தினையட்டி, தெற்கு முகமாக கவுரி அம்மன் சன்னிதி அமைந்துள்ளது. இந்த அம்மன், திருக்கோவில் புனரமைப்பின்போது புதிதாக உருவாக்கியதாகும். எனினும் அன்னை நின்ற கோலத்தில் எழிலோடு காட்சி தந்து அருளாசி வழங்குகின்றார். அம்மனின் எதிரே சிம்ம வாகனத்திற்கு பதிலாக யானை வாகனம் இருக்கிறது. அன்னை சகல சம்பத்துக்களையும் அள்ளித் தருபவள் என்பதால், அன்னையை சம்பத்கவுரி என்றும் அன்போடு அழைக்கின்றனர்.

    தனிச் சிறப்புகள் :

    மாசி மாத ரத சப்தமி அன்றும், மகத்தன்றும் மாலை வேளையில், இத்தல இறைவனை, சூரியன் தன் ஒளிக்கதிர்களால் தழுவி வழிபடுவது தனிச்சிறப்பு. சரபேஸ்வரருக்கு, லிங்கத் திருமேனி இத்தலத்தில் அமைந்துள்ளது. நூற்றியெட்டு லிங்கம் அமைந்துள்ளதும், காளாஸ்திரிக்கு இணையான பரிகாரத் தலமாக விளங்குவதும் இந்த ஆலயத்தின் தனிச்சிறப்பாகும்.

    பிரதோஷம், கிருத்திகை, ஞாயிற்றுக்கிழமைகளில் ராகு -கேது பூஜை, அஷ்டமி பூஜை, மகா சிவராத்திரி, ஐப்பசி அன்னாபிஷேகம் உள்ளிட்ட விழாக்கள் வெகு சிறப்பாகக் கொண்டாடப்படுகின்றன. காலை 8 மணி முதல் முற்பகல் 11 மணி வரையிலும், மாலை 6 மணி முதல் இரவு 8 மணி வரையிலும் ஆலய தரிசனம் செய்யலாம்.

    பிற ஆலயங்கள் :

    இத்தலத்தில் கி.பி. 10-ம் நூற்றாண்டைச் சார்ந்த தாமோதரப் பெருமாள் ஆலயம் அமைந்துள்ளது. இவ்வாலயம் கி.பி. 15 மற்றும் 16-ம் நூற்றாண்டில் விஜயநகர மன்னர்களால் புனரமைக்கப்பட்ட செய்தியை வரலாறு கூறுகிறது. இதுதவிர இவ்வூரில், நரசிம்மர் பூஜித்த நரசிங்கேஸ்வர ஆலயம், திரவுபதி அம்மன் ஆலயம், பொன்னியம்மன் ஆலயம் உள்ளிட்ட பழமையான ஆலயங்களும் அமைந்துள்ளன. இத்தலத்தைச் சுற்றி ஜடாயுவுக்கு மோட்சம் தந்த திருப்புட்குழி என்ற திவ்ய தேசம், திருப்பாற்கடல், காவேரிப்பாக்கம் பஞ்சலிங்கேஸ்வரர், அம்பி சிவாலயம் உள்ளிட்ட பழமையான ஆலயங்களும் உள்ளன.

    ராகு- கேது பரிகாரத் தலம் :


    தொடர்ச்சியாக ஐந்து ஞாயிற்றுக்கிழமைகளில், ராகு காலத்தில் இத்தல இறைவனுக்கு ஐந்து தீபங்கள் ஏற்றி வழிபட்டால், ராகு- கேது தோஷங்கள் நீங்கும் என்று கூறப்படுகிறது. மேலும் ஞாயிற்றுக்கிழமைகளில் நடைபெறும் ராகு-கேது யாக பூஜைகளில் கலந்து கொண்டால், ராகு-கேது தோஷத்தில் இருந்து பூரணமாய் விடுபடலாம் என்பது பக்தர்களின் நம்பிக்கையாகும்.

    அமைவிடம் :

    காஞ்சீபுரம் மாவட்டம், காஞ்சீபுரம் வட்டத்தில் தாமல் அமைந்துள்ளது. சென்னை- பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில சென்னைக்கு மேற்கே 83 கிலோமீட்டர் தொலைவிலும், காஞ்சீபுரத்திற்கு வடகிழக்கே 14 கிலோமீட்டர் தூரத்திலும் தேசிய நெடுஞ்சாலையை ஒட்டி தாமல் அமைந்துள்ளது.
    -பனையபுரம் அதியமான்.
    Next Story
    ×