search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    வாழ்வை வசந்தமாக்கும் சாயிபாபா பாமாலை
    X

    வாழ்வை வசந்தமாக்கும் சாயிபாபா பாமாலை

    கீழே கொடுக்கப்பட்டுள்ள சீரடி சாயிபாபா பாமாலையை தினமும் அல்லது வியாழக்கிழமைகளில் சொல்லி வந்தால் விருப்பங்கள் நிறைவேறும்.
    ஷீர்டியே உலகின் அழகிய புனிதத்தலம்
    ஸ்ரீ சாயிபாபா அவதரித்து அருளிய தலம்
    கல்பதருவினும் பேறு பெற்ற வேப்ப மரம்
    அதன் மடியில் அமர்ந்தாரே இறைவனின் வரம்

    பதினாறு வயதே நிரம்பிய பாலகனாம்
    பல சூரிய சந்திரர் சேர்ந்த ஒளிப்பிழம்பாம்
    ஞானம், அழகு நிறைந்த ஆண்டவர் மகனாம்
    நீர் அமர்ந்ததும் கசப்பு வேம்பும் இனிப்பானதாம்

    திருவே அமர்ந்தாள் உன் நெற்றியில் திலகமாய்
    தேஜஸ், ஸெளம்யம் நிறைந்த உருவமாய்
    வெயில், மழை பாராமல் தவமும் செய்தாய்
    பாலகன் ரூபத்திலே உலகில் தோன்றினாய்

    உன் தாய், தந்தை, குலம் யாரும் அறியாரே
    உலகம் என் வீடு, இறை என் தாய் என்றாயே
    சிலர் மொழிந்தனர் நீ சிவனின் ரூபம்
    சிலர் அறிந்தனர் நீ விஷ்ணுவின் ரூபம்

    தத்தாத்ரேய ரூபமோ? ஸ்ரீ ராமனே நீதானா?
    பீர் அவுலியாவோ? பரப்ரஹ்மமே நீதானோ?
    எந்த ரூபமானாலும் நீயே எங்கள் தெய்வமானாய்
    பக்தனின் இஷ்ட ரூபத்திலே தரிசனமும் அளிப்பாய்

    எத்தனை எத்தனை லீலைகள் புரிந்தாய்
    எண்ணற்ற ஏழைகளின் துன்பங்கள் துடைத்தாய்
    தெவிட்டாத இன்பமன்றோ உந்தன் திருக்கதைதான்
    கேட்பவரும் திளைப்பரே கானில் தேனருவி தான்

    மத, ஜாதி பேதங்களால் அழியும் மானிடம்
    உய்வுற உறவுப்பாலம் அமைத்த மஹாஅவதாரம்
    சாந்த் படீலின் குதிரையை தேடித் தந்தாய்
    திருமண வீட்டாரோடு ஷீர்டியை அடைந்தாய்

    ஆன்மீகத் தேடலில் அனைவரையும் அழைத்தாய்
    அருளோடு சேர்ந்து அற்புத அநுபவங்களும் தந்தாய்
    மசூதித்தாயாம் துவாரகமாயி! அதில் வசித்து,
    பக்தர்களை ரட்சிக்கும் நீ அன்னையன்றோ? சாயி

    திருக்கரமளித்த உதி அருமருந்தாகும் - உன்
    திருஅருட்பார்வை துயரினைப் போக்கும்
    அருள் துனியில் எங்கள் பாபங்கள் தூசாகும் - உன்
    திருப்பாதங்கள் தொட்ட ஷீர்டி சொர்க்கமாகும்

    அடைக்கலம் புகுந்ததோரை அன்புடன் ரட்சித்தாயே - உன்
    அற்புத லீலைகள் அமுதே! அமுதினும் இனிய பேரமுதே
    நீரூற்றி அகல்தீபங்கள் எரியச் செய்தாய்
    ஒளிஜோதியிலே அஞ்ஞான இருள் களைந்தாய்

    பக்தனின் கண்கள் நீர் சொறிந்தாலே அக்கணமே,
    துயர் துடைக்க அவன் அருகில் நிற்பாயே
    தாமு அண்ணா ஜாதகத்தில் ஒரு கோளாறு
    வருந்தி அழுதார் இல்லையே புத்திரப்பேறு

    உன் திருவடி அடைந்தார்க்கு இல்லை ஜாதகமே
    அளித்தாய் மாங்கனிகள் ! அடைந்தார் தாமு சந்தானமே
    விதியையும் மீறுமே உன் அற்புத அருளுமே
    நம்பிக்கையுடன் பக்தன் உன்னை பணிந்திட்டாலே

    சிவபக்தன் மேகாவையும் நீ சினந்தாயே,
    உன்னை முஸ்லிம் என்று பேதம் கொண்டதாலே
    பக்தருக்குள்ளே இல்லையே ஏற்றத்தாழ்வே
    மேகாவுக்கும் நீ இரக்கம் காட்டினாயே

    உள்ளேயே அவனை நீ உருமாற்றினாயே
    உன்னில் சிவம் கண்டு அவன் இறை அடைந்தானே
    கங்கை, யமுனை நீர் உன் பாதத்தில் சொறிந்தாயே
    தாஸ்கணுவின் பிரயாகை தாகம் தணித்தாயே

    மசூதியில் அமர்ந்து நீ அளித்தாய் ஞானோபதேசம்
    பசியுற்றோருக்கு செய்வீர் அன்னதானம்
    ஏழைகள் மேல் இரக்கம் கொள் என்றாயே
    உண்மையே சொல், நேர்மையாய் வாழ் என்றாயே

    ஷீர்டியின் கல், புல் கூட பேறு பெற்றதே
    உன் திருவடி முத்தமிட்டு இறைவனை அடைந்ததே
    அப்புல்லும், கல்லுமாய் நானிருந்தாலே - உன்
    திருவடியை என் சிரஸேந்தி களித்திருப்பேனே

    எத்தனை தவம் செய்தேன் நான் அறியேனே
    இக்கணம் உன்னைத்தொழும் பேறு பெற்றேனே
    இறையருள் பெற்ற மனிதரால் மட்டுமே
    உன்னை பூஜிக்கும் பாக்கியம் கிட்டிடுமே

    உன் அருட்பார்வை என்மேல் பட்டாலே
    என் தீவினை போய் ஆனந்தம் நிறைந்திடுமே
    உன் மென்கரங்கள் என் சிரஸின் மேல் வைப்பாயே
    உத்தமன் நினைத் தொழுகின்றோம் செவிமடுப்பாயே

    உன் பாதாரவிந்தம் தொட்ட தூசு ஒன்று போதுமே,
    என் கண்களிலே ஒற்றிக் கொண்டாடிடுவேனே
    உன் பதகமலத் தீர்த்தம் என் நாவில் பட்டாலே
    நான் பெற்ற இன்பத்தை பாடிக் களித்திடுவேனே

    என் கனவினில் என்னை ஆட்கொள்வாயே
    நிஜந்தனிலே நிதமும் என் துணை நிற்பாயே
    அணுவிலும் அணுவானாய், அகில அண்டமும் நீயானாய்
    எங்கெங்கு நோக்கிலும் நீயே நிற்கின்றாய்

    என் அன்னை நீ ! தந்தை நீ ! இவ்வுலகையே
    மூவடியாய் அளந்திட்ட திருமாலும் நீ
    அகிலம் உன் இல்லம், அண்ட சராசரம் உன் ரூபம்
    அடியார்க்கு அருள அல்லவா நீ எடுத்தாய் அவதாரம்

    குசேலனையும் குபேரனாக்கும் சக்தி இருந்துமே,
    உன் உணவை பிச்சை எடுத்து உண்டாய்
    சாயி நாமமே போக்கிடும் பல துக்கங்கள்
    சாயி நாமமே அளித்திடும் பரம சுகங்கள்

    சாயி நாமத்தினால் வியாழன் விரதம் பூண்டாலே
    சாயி நாமம் நல்கும் பல நன்மைகளுமே
    நோயுற்றோர் பிணி வேதனை நீங்கிடுமே
    துயருற்றோர் துன்பங்கள் தொலைந்திடுமே

    சாயி கிருபையால் தரித்திரம் மறைந்திடுமே
    சாயி விரதத்தால் சுகம், சாந்தி வீட்டில் நிலவிடுமே
    சாயி நாமம் தினமும் ஜபித்தாலுமே,
    ஒன்பது வியாழன் சாயி விரதம் பூண்டாலுமே,

    சாயி வருவார், இரங்குவார் நம்மிடமே,
    துன்பம் களைவார், தருவார் ஆனந்தமே
    சாயியே சாச்வதம் ! சாயியே சத்தியம் !
    இதை நம்புபவன் வாழ்விலில்லை பெருந்துன்பம்

    சாயியே பரமேஸ்வரன், சாயியே பரமாத்மன்
    சாயியே பராசக்திரூபன், சாயியே பரந்தாமன்
    நம்பிக்கை பக்தி, பொறுமையுடன் சரணடைவோம்
    சாயி அருளால் பரப்ரஹ்மானந்தம் அடைவோம்

    சாயிநாதருக்கே அர்ப்பணம்
    Next Story
    ×