search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    இன்று முன்னோர்களின் ஆசியை வழங்கும் ஆடி அமாவாசை விரதம்
    X

    இன்று முன்னோர்களின் ஆசியை வழங்கும் ஆடி அமாவாசை விரதம்

    ஒவ்வொரு மாதமும் அமாவாசை தினம் சிறப்பு வாய்ந்தது என்றாலும், ஆடி அமாவாசை கொஞ்சம் அதீத முக்கியத்துவத்தை பெற்றுத் திகழ்கிறது.
    23-7-2017 ஆடி அமாவாசை

    இறை வழிபாடு என்பது, நம் வாழ்வில் எவ்வளவு முக்கியமானதோ, அதே அளவுக்கு முக்கியத்துவம் பெற்றது விரதங்கள். அத்தகைய விரதங்களில் முன்னோர்களையும், தாய்- தந்தையரையும் வழிபடும் விரதம் என்பது சிறப்பு வாய்ந்ததாகத்தானே இருக்கும்.

    காலமான தங்களின் முன்னோர்கள் மற்றும் தாய்- தந்தையரை குறித்து, அவர்கள் நற்கதி அடையும் வகையில் கடைப்பிடிக்கப்படும் விரதங்கள் சிறப்புக்குரியவை. அமாவாசை, பவுர்ணமி போன்ற திதிகளில் இந்த விரதங்கள் கடைப்பிடிக்கப்பட்டு வருகின்றன. ஒவ்வொரு மாதமும் அமாவாசை தினம் இதற்கு சிறப்பு வாய்ந்தது என்றாலும், ஆடி அமாவாசை கொஞ்சம் அதீத முக்கியத்துவத்தை பெற்றுத் திகழ்கிறது.

    ‘அமா’ என்றால் ஓரிடத்தில் பொருந்தியது அல்லது சேர்ந்தது என்று பொருள். ‘வாசி’ என்றால் சாதகமான அல்லது வாய்ப்பான என்னும் கருத்தில் வருகிறது. ஒரே ராசியில் சூரியனும், சந்திரனும் ஒன்று சேரும் புனிதமான நாள் அமாவாசையாகும். அத்துடன் தேவர்களும் அமாவாசையின் அதிபர்களாக உள்ளனர். பூமியில் உள்ளவர்களை பொருத்தமட்டில் ஒவ்வொரு அமாவாசையும் முக் கியமானது. பிதுர் கருமத்திற்கு உகந்த நாள்.

    சூரியன்- பிதுர்க்காரகன், சந்திரன்- மாதுர்க்காரகன். இவர்கள் இருவரையும் சிவசக்தி சொரூபமாக சாஸ்திரங்கள் வர்ணிக்கின்றன. சூரியனும், சந்திரனும் சேரும் மாதம் என்பதால்தான், ஆடி அமாவாசை மகத்துவம் பெற்று விளங்குகிறது. அன்றைய தினம் முன்னோர்களையும், தாய், தந்தையரையும் நினைத்து திதி கொடுத்து, புண்ணிய நதிகள், கடல் போன்ற இடங்களில் புனித நீராடி இஷ்டதெய்வ ஆலயங்களில் வழிபட்டு சிறப்பு பூஜைகள் செய்ய வேண்டும். மேலும் ஏழை எளியவர்களுக்கு அன்னதானம், வஸ்திர தானம் செய்தால் நாம் செய்த பாவங்கள் விலகும். இந்த விரதம் தீய வினைகள், கர்ம வினைகள் அனைத்தையும் போக்கி வாழ்வில் புண்ணியத்தை சேர்க்கும்.

    சூரிய மண்டலத்திற்கு அப்பால் தென்மண்டலத்தில் பிதுர்க்கள் உறையும் ‘பிதுர் லோகம்’ உள்ளது.

    ஆடி அமாவாசையன்று கடல், ஆறு போன்ற நீர் நிலைகளில் நீராடினால் தீவினைகள் அகலும். அமாவாசையில் விரதம் இருந்து எள்ளும், தண்ணீரும் இறைத்து, பிண்டம் போடுதல் போன்றவற்றை செய்ய வேண்டும். தாய், தந்தை இறந்த தேதியை மறந்தவர்கள் கவலைப்படத் தேவையில்லை. அவர்கள் ஆடி அமாவாசையன்று திதி கொடுக்கலாம்.

    நோயின்றி சுகமாக வாழவும், சகல செல்வங்களையும் பெற்று இனிதாக வாழவும் பிதுர்க்களை திருப்தி செய்ய வேண்டும். ஆடி அமாவாசையன்று வீட்டில் இறந்த மூதாதையர்கள் படத்துக்கு மாலை போட்டு அவர்களுக்கு பிடித்தமான உணவு வகைகளை தலை வாழை இலையில் படைத்து அவர்களை வணங்க வேண்டும். முதலில் காகத்திற்கு உணவிட்டு பின்பு விரதம் முடிக்க கர்ம வினைகள் நீங்கும் என்பது நம்பிக்கையாக உள்ளது.

    விரதம் இருக்கும் முறை :

    ஆடி அமாவாசை விரதம் இருப்பவர்கள், காலையில் எழுந்து அருகில் இருக்கும் கடல், ஆறு போன்ற நீர்நிலைகளுக்கு சென்று குளித்துவிட்டு இறந்த முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்ய வேண்டும். அதன்பிறகு முதியவர்களுக்கு அன்னதானம் வழங்க வேண்டும். அமாவாசையன்று பெண்கள் வீட்டில் காலை உணவு உண்ணாமல், இறந்த மூதாதையர்களுக்கு பிடித்தமான உணவுகளையும் பதார்த்தங்களையும் செய்ய வேண்டும்.

    அன்றைய சமையலில் எல்லாவிதமான காய்கறிகளையும் சேர்த்துக்கொள்ள வேண்டும். விரதம் இருப்பவர்கள் எதுவும் சாப்பிடாமல் எத்தனை நபர்களை வணங்க வேண்டுமோ அத்தனை இலைகள் போட்டு சமைத்த உணவு, பதார்த்தங்களை படைத்து துணிகள் வைத்து அகல் விளக்கேற்றி, தூப தீபம் காட்டி முன்னோர்களை மனதில் நினைத்து வழிபட வேண்டும். பிறகு படைத்த உணவுகளை வீட்டிற்கு வெளியில் வைத்து காகத்துக்கு படைக்க வேண்டும். காகங்கள் உண்ட பிறகு வீட்டிற்குள் முறைப்படி பரிமாறப்பட்ட இலைகளில் உறவினர்களுடன் அமர்ந்து சாப்பிட வேண்டும். இறந்தவர்களுக்கு படைத்த துணிகளை அவர்களுக்கு பிடித்த மாணவர்கள் அணிந்து கொள்ளலாம். அமாவாசை விரதம் இருப்பவர்கள் காலையில் சாப்பிடக்கூடாது, பகலில் சாப்பிடலாம். முறைப்படி விரதமிருந்து முன்னோர்களை வழிபடுபவர்களுக்கு அவர்களின் ஆசி கிடைக்கும். முன்னோர் செய்த பாவவினைகள் நீங்கி அவர்களுக்கு முக்திபேறு கிட்டும்.

    ராமேசுவரம், வேதாரண்யம், கோடியக்கரை, திருவையாறு ஆகிய இடங்களில் புனித நீராடுவது விசேஷம். ஆடி அமாவாசையன்று விரதம் மேற்கொண்டால் ஆயுள் பலம் கூடும் என்பது பக்தர்களின் நம்பிக்கை.
    Next Story
    ×