search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    அரபுலகின் ஆட்சியாளர்களுக்கு அண்ணல் நபிகளின் அழைப்பு
    X

    அரபுலகின் ஆட்சியாளர்களுக்கு அண்ணல் நபிகளின் அழைப்பு

    இஸ்லாமிய அழைப்பை தொடர்ந்து மேற்கொண்ட முஹம்மது நபி(ஸல்) பஹ்ரைன் நாட்டு ஆளுநர் அல்முன்திர் இப்னு ஸாவிக்கும் கடிதம் எழுதினார்கள்.
    இஸ்லாமிய அழைப்பை தொடர்ந்து மேற்கொண்ட முஹம்மது நபி(ஸல்) பஹ்ரைன் நாட்டு ஆளுநர் அல்முன்திர் இப்னு ஸாவிக்கும் கடிதம் எழுதினார்கள். நபிகளாரின் கடிதத்தைப் படித்ததுமே அவர் இஸ்லாமிய மார்க்கத்தால் கவரப்பட்டார். நபி(ஸல்) அனுப்பிய தூதர் மூலம் இஸ்லாம் பற்றி மேலும் தெரிந்து கொண்டு பின்பற்றலானார்.

    முஹம்மது நபி(ஸல்) அவர்களுக்குப் பதில் கடிதம் எழுதி இஸ்லாமை ஏற்க முன்வராதவர்களை என்ன செய்ய வேண்டுமென்று கேட்டு எழுதியிருந்தார். அதற்கு நபி(ஸல்) எழுதிய பதில் கடிதத்தில் ‘இஸ்லாமை ஏற்றவர்களுக்கு எல்லா உரிமைகளையும் வரிவிலக்குகளையும் தர வேண்டுமென்று” குறிப்பிட்டிருந்தார்கள். அதனால் இஸ்லாமை ஏற்காதவர்கள் வரி செலுத்த வேண்டியவர்களாக ஆனார்கள்.

    அவ்வாறான இஸ்லாமிய அழைப்பு யமாமா, ஸிரியா மற்றும் ஓமன் நாட்டுக்கும் அனுப்பி வைக்கப்பட்டன. சிலர் இஸ்லாமை ஏற்றனர், சிலர் மறுத்தனர். ஓமன் நாட்டு அரசர்களான ஜைஃபர் மற்றும் அப்துவுக்குக் கடிதம் சென்ற போது அரசர் அப்து இஸ்லாத்தை பற்றி விரிவாகக் கேட்டார். இஸ்லாமிய அழைப்பு விடுக்க ஓமனுக்குச் சென்ற அமர் இப்னு ஆஸ்(ரலி) அவர்களிடம் “நபி(ஸல்) எதைச் செய்யும்படி ஏவுகிறார்? எதைச் செய்வதிலிருந்து தடுக்கிறார்?” என்று அப்து வினவினார்.

    அதற்கு அமர்(ரலி) “அல்லாஹ்வுக்கு வழிபடவேண்டுமென ஏவுகிறார். அவனுக்கு மாறு செய்வதிலிருந்து தடுக்கிறார். பெற்றோருக்கு உபகாரம் செய்யவும், உறவினர்களைச் சேர்த்து வாழவும் சொல்கிறார். அநியாயம் செய்வது, அத்துமீறுவது, விபச்சாரம் செய்வது, மது அருந்துவது, கற்கள், சிலைகள், சிலுவைகள் ஆகியவற்றை வணங்குவது போன்ற அனைத்திலிருந்தும் தடுக்கிறார்” என்று விளக்கம் அளித்தார்.

    அதற்கு அரசர் அப்து, “நல்ல விஷயமாகத்தான் இருக்கிறது ஆனால் என் சகோதரர் பதவி ஆசை கொண்டவர், எதற்காகவும் யாருக்காகவும் விட்டுக் கொடுக்க மாட்டாரே” என்றார்.

    “உங்கள் சகோதரர் இஸ்லாமை ஏற்றுக் கொண்டால் அல்லாஹ்வின் தூதர் அவரையே அவரது கூட்டத்தினருக்கு அரசராக நியமித்து விடுவார்கள். மேலும், அந்தக் கூட்டத்தினரின் செல்வந்தர்களிடமிருந்து தர்மத்தைப் பெற்று அக்கூட்டத்தினரின் ஏழைகளுக்கே திரும்பக் கொடுத்து விடுவார்கள்” என்று அமர்(ரலி) விளக்கமளித்தபோது, ‘தர்மம்’ என்பதே அப்துவுக்குப் புதிதாக இருந்ததால் அதைப் பற்றியும் விளக்கம் கேட்டார். ஸகாத் என்கிற ஏழைவரி பற்றி அமர்(ரலி) விவரித்தார்கள்.

    ஏழைவரி நல்ல விஷயமாக இருந்தாலும் தன் சகோதரர் அதனை ஏற்க மாட்டார் என்று அப்து சொல்லிவிட்டார். சிறிது நாட்கள் அங்கு தங்கிவிட்டு இஸ்லாமை அவர்கள் ஏற்கவில்லை என்றானதும் அங்கிருந்து அமர்(ரலி) புறப்பட இருந்த போது ஆழமாக யோசித்துப் பார்த்த அரசர்கள் மறுநாள் அமர்(ரலி) அவர்களை அழைத்து அரசர்கள் இருவரும் இஸ்லாமை ஏற்றுக் கொள்வதாகவும், நபி (ஸல்) அவர்களை உண்மையாளராக ஏற்றுக் கொள்வதாகவும், ஜகாத் (ஏழை வரி) வசூலிப்பதற்கான ஏற்பாடுகளைச் செய்வதாகவும் உறுதி அளித்தனர்.

    இப்படியாக நபி(ஸல்) அவர்கள் பல அண்டை நாட்டு மன்னர்களுக்குக் கடிதங்களின் மூலம் இஸ்லாமிய அழைப்பை அனுப்பிய வண்ணமிருந்தார்கள். இஸ்லாமின் கோட்பாடுகள் பிடித்திருந்தாலும் தனது ஆட்சி பறிபோய்விடுமென்றே சிலர் நிராகரித்தனர் ஆனால் நிராகரித்தவர்கள் எப்போதும் நபியவர்களைப் பற்றிய சிந்தனையிலேயே இருந்தனர். நபியவர்களின் பெயரும் இஸ்லாமிய மார்க்கமும் நிராகரித்தவர்களிடமும் நன்கு அறிமுகமாகி விட்டிருந்தது.

    (ஆதாரம்: ரஹீக் அல்மக்தூம்)

    - ஜெஸிலா பானு.
    Next Story
    ×