search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    அத்தை மகளுக்கு வாழ்வளித்த நபிகள்
    X

    அத்தை மகளுக்கு வாழ்வளித்த நபிகள்

    முஹம்மது நபி (ஸல்) அவர்களின் காலத்தில் அரபியர்களிடம் விசித்திரமான குழந்தை வளர்ப்பு முறை இருந்து வந்தது.
    முஹம்மது நபி (ஸல்) அவர்களின் காலத்தில் அரபியர்களிடம் விசித்திரமான குழந்தை வளர்ப்பு முறை இருந்து வந்தது. தங்களுக்கு குழந்தைகள் இருக்கும் போதே வேறொருவரின் குழந்தையை வளர்ப்பு குழந்தையாக்கிக் கொண்டு, அவர்களுக்கு முழு உரிமையையும் தந்து தமது சொந்தக் குழந்தைகளைப் பழி வாங்குதல் நடைமுறையில் இருந்தது. இது உண்மையான பெற்றோர்களின் அடையாளத்தை மாற்றிக் கொள்வதாக அமைந்ததோடு, ரத்த உறவுகளைத் தகர்ப்பதாகவும் அமைந்தது. அது ஆண் குழந்தைகள் பெரும் சொத்தாகக் கருதப்பட்ட காலம். இருப்பினும் அபசகுனத்தைக் காரணம் காட்டியும், வறுமைக்குப் பயந்தும் குழந்தைகளைக் கொலை செய்து கொண்டிருந்த காலம் என்பதும் குறிப்பிடத்தக்கது.

    அது மட்டுமின்றி எதிரி குலத்தவரின் குழந்தைகள் கடத்தப்பட்டு சந்தையில் அடிமைகளாக விற்கப்படவும் செய்தனர். இப்படியாக கடத்தப்பட்டு சந்தைக்கு விற்பனைக்கு வந்தவர் ஸைத்(ரலி). இவரை ஹகீம் என்பவர் வாங்கி தனக்குப் பிரியமான அத்தை கதீஜாவுக்கு பரிசளித்தார்.

    கதீஜா(ரலி), நபிகள் நாயகம் (ஸல்) அவர்களை மணந்தபோது முஹம்மது நபி (ஸல்) அரபியர்களிடம் நிலவிய ஏற்றத் தாழ்வைத் தகர்க்க நினைத்தவர்களாக அடிமையாக இருந்த ஸைதை விடுதலை செய்து வளர்ப்பு மகனாகவே பாவித்தார்கள். அதனால் மக்களும் ஸைதை ‘ஸைத் இப்னு முஹம்மத்’ அதாவது முஹம்மதின் புதல்வர் என்றே அழைத்து வந்தனர்.

    இடைப்பட்ட காலத்தில் ஸைத்தின் சொந்தத் தந்தை தனது மகனைக் கண்டுபிடித்து வந்தபோது முஹம்மது நபியின் மீதான பிரியத்தால், ஸைத் தன் தந்தையுடன் செல்ல மறுத்துவிட்டார்.

    இனக்குழுக்களை ஒன்றிணைப்பதற்காகவும், அடிமைத்தனத்தை ஒழிப்பதற்காகவும், பாகுபாடுகளைத் தகர்ப்பதற்காகவும் பாடுபட்ட நபிகளார் உறவுகளை செம்மைப்படுத்திக் கொள்வதற்காகவே தம் மகள் ஃபாத்திமாவை அலி(ரலி) அவர்களுக்கு மணமுடித்துக் கொடுத்தது போல அடிமைத்தனத்தை ஒழிப்பதற்காக ஸைத் இப்னு ஹாரிஸாவை தனது அத்தை மகள் ஸைனப் பின்த் ஜஹ்ஷ்(ரலி) அவர்களை மணம் முடித்து வைத்தார்கள். ஆனால் திருமணமாகி சில காலத்திலேயே தம்பதியரிடையே சுமுகமான உறவு நிகழவில்லை.

    வளர்ப்பு மகன் தொடர்பான இறை வசனம் அருளப்பட்டது. அதில் “நீங்கள் எடுத்து வளர்த்தவர்களை அவர்களின் தந்தையரின் பெயர்களைச் சொல்லி இன்னாரின் பிள்ளையென அழையுங்கள் - அதுவே அல்லாஹ்விடம் நீதமுள்ளதாகும்; ஆனால் அவர்களுடைய தந்தையரின் பெயர்களை நீங்கள் அறியவில்லையாயின், அவர்கள் உங்களுக்கு சன்மார்க்க சகோதரர்களாகவும், உங்களுடைய நண்பர்களாகவும் இருக்கின்றனர்; முன்னர் இது பற்றி நீங்கள் தவறு செய்திருந்தால், உங்கள் மீது குற்றமில்லை; ஆனால், உங்களுடைய இருதயங்கள் வேண்டுமென்றே கூறினால் உங்கள் மீது குற்றமாகும்; அல்லாஹ் மன்னிப்பவனாகவும், மிக்க கிருபையுடையவனாகவும் இருக்கின்றான்” என்ற இறை வசனம் அருளப்பட்டபோது ஸைதை அனைவரும் ஸைத் இப்னு ஹாரிஸா என்று அழைக்கலானார்கள்.

    தாம்பத்திய உறவில் சுமூகமான உறவு இல்லாததால் ஸைத்(ரலி) தம் மனைவியின் போக்கு குறித்து நபி(ஸல்) அவர்களிடம் முறையிட சென்றபோது, நபி(ஸல்) அவர்கள், “அல்லாஹ்வுக்கு அஞ்சி நடந்துகொள். உன் மனைவியை மண விலக்குச் செய்துவிடாதே” என்று கூறிவிட்டார்கள். காரணம் ஸைது(ரலி) தனது மனைவியை விவாகரத்து செய்து விட்டால் அவரை, தானே மணக்க நேரிடும் என அல்லாஹ்வின் அறிவிப்பு மூலம் நபி (ஸல்) அவர்கள் அறிந்திருந்தார்கள். ஆனால், இத்திருமணம் நடந்தால் இணைவைப்பவர்கள் நபி (ஸல்) அவர்களையும் முஸ்லிம்களையும் பழிப்பார்கள். நயவஞ்சகர்களும் யூதர்களும் முஷ்ரிக்குகளும் நபி (ஸல்) அவர்களுக்கு எதிராக குழப்பங்களையும் தவறானக் குற்றச்சாட்டுகளையும் பரப்புவார்கள். அதனால், பலவீனமான நம்பிக்கையுடைய முஸ்லிம்களின் உள்ளத்தில் கெட்ட எண்ணங்கள் ஏற்படலாம் என்று நபிகளார் பயந்தார்கள்.

    அப்போது அல்லாஹ் இந்த இறைவசனத்தை அருளினான் “நபியே! எவருக்கு அல்லாஹ்வும் அருள் புரிந்து, நீரும் அவர் மீது அருள் புரிந்தீரோ, அவரிடத்தில் நீர்: “அல்லாஹ்வுக்குப் பயந்து நீர் உம் மனைவியை விவாக விலக்குச் செய்து விடாமல் உம்மிடமே நிறுத்தி வைத்துக் கொள்ளும்” என்று சொன்ன போது அல்லாஹ் வெளியாக்க இருந்ததை, மனிதர்களுக்குப் பயந்து நீர் உம்முடைய மனத்தில் மறைத்து வைத்திருந்தீர்; ஆனால் அல்லாஹ் அவன் தான், நீர் பயப்படுவதற்குத் தகுதியுடையவன்; ஆகவே ஸைத் அவளை விவாக விலக்கு செய்துவிட்ட பின்னர் நாம் அவளை உமக்கு மணம் செய்வித்தோம்; ஏனென்றால் முஃமின்களால் சுவீகரித்து வளர்க்கப்பட்டவர்கள், தம் மனைவிமார்களை விவாகரத்துச் செய்து விட்டால், அவர்களை வளர்த்தவர்கள் அப்பெண்களை மணந்து கொள்வதில் யாதொரு தடையுமிருக்கக் கூடாது என்பதற்காக இது நடைபெற்றே தீர வேண்டிய அல்லாஹ்வின் கட்டளையாகும்” என்ற தெளிவான இறைவசனம் அருளப்பட்டது.

    நபி(ஸல்) அவர்கள் தம் வாழ்நாளில் குர்ஆன் வசனங்களில் எதையேனும் மறைப்பவர்களாக இருந்திருந்தால் மேலே குறிப்பிட்ட (33:37) இதைத்தான் மறைத்திருப்பார்கள். இதன் காரணத்தால் ஸைனப்(ரலி) அவர்கள் நபி(ஸல்) அவர்களின் மற்ற துணைவியர் முன்பாக தமக்குத் தனிச் சிறப்பு இருப்பதாகப் பெருமை பாராட்டிக் கொள்வார்கள். 'உங்களை நபி(ஸல்) அவர்களுக்கு உங்கள் வீட்டார் மணமுடித்துத் தந்தார்கள். என்னையோ உயர்ந்தவனான அல்லாஹ்வே ஏழுவானங்களுக்கு மேலிருந்து நபி(ஸல்) அவர்களுக்கு மணமுடித்துக் கொடுத்தான்' என்று சொல்வார்கள்.

    ஆதாரம்: ஸஹீஹ் புகாரி 5:65:4782, 97:7420, திருக்குர்ஆன் 33:5, 33:37

    -ஜெஸிலா பானு
    Next Story
    ×