search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    நோன்பின் மாண்புகள்: அற்புதங்கள் நிறைந்த இரவு
    X

    நோன்பின் மாண்புகள்: அற்புதங்கள் நிறைந்த இரவு

    'லைலத்துல் கத்ர் இரவை ரமலானில் கடைசிப் பத்து நாட்களில் ஒற்றைப்படையான இரவுகளில் நீங்கள் தேடுங்கள்’ என்பது நபிமொழியாகும். (அறிவிப்பவர்: அன்னை ஆயிஷா (ரலி), நூல்: புகாரி).
    புனித ரமலான் மாதத்தில் வரும் இரவுகளில் மிகவும் சிறப்பு மிக்கது, அற்புதங்கள் நிறைந்தது 'லைலத்துல் கத்ர்’ இரவாகும். இந்த இரவில் இறைவனை வணங்கி பாவ மன்னிப்பு கேட்டால் அது நிச்சயம் நிறைவேறும் என்று உறுதி தருகிறது திருக்குர்ஆனும், நபிமொழியும்.

    'நிச்சயமாக நாம் இந்தக் குர்ஆனை (மிக்க கண்ணியமுள்ள) லைலத்துல் கத்ர் என்னும் ஓர் இரவில் (முதலாவதாக) இறக்கி வைத்தோம். (நபியே!) அந்தக் கண்ணியமுள்ள இரவின் மகிமையை நீங்கள் அறிவீர்களா?. கண்ணியமுள்ள அந்த இரவு ஆயிரம் மாதங் களைவிட மிக்க மேலானதாகும்’ என்று கூறுகிறது திருக்குர்ஆன் (97:1&3).

    இந்த இரவு குறித்த நபிமொழிகள் வருமாறு:

    லைலத்துல் கத்ர் இரவின் சிறப்பை அல்லாஹ் கூறுகிறான்: 'நிச்சயமாக, நாம் அதை (குர்ஆனை) கண்ணியமிக்க (லைலத்துல் கத்ர்) இரவில் இறக்கினோம். கண்ணியமிக்க இரவு எதுவென உமக்கு அறிவித்தது எது? மேலும் கண்ணியமிக்க (அந்த) இரவு ஆயிரம் மாதங்களைவிட மிக மேலானதாகும். அதில் வானவர்களும், ரூஹூம் (ஜிப்ரீலும்) தம் இறைவனின் அனுமதியுடன் (அவனுடைய) கட்டளை ஒவ்வொன்றையும் செயல்படுத்துவதற்காக இறங்குகின்றனர். (அந்த இரவு முழுக்க) சாந்தி (பொழிந்த வண்ணமிருக்கும்); அது விடியற்காலை உதயமாகும் வரை நீடிக்கும். அறிவிப்பாளர்: சுஃப்யான் பின் உயைனா (ரஹ்) அவர்கள்.

    ‘ரமலானில் நம்பிக்கையுடனும் நன்மையை எதிர்பார்த்ததும் நோன்பு நோற்கிறவர் (அதற்கு) முன் செய்த பாவங்கள் மன்னிக்கப்படும்! லைலத்துல் கத்ரில் நம்பிக்கையுடனும் நன்மையை எதிர்பார்த்தும் நின்று வணங்குகிறவரின், முன்னர் செய்த பாவங்கள் மன்னிக்கப்படும்!‘ என்று நபிகள் கூறியதாக அபூ ஹூரைரா (ரலி) அறிவித்தார்.



    சிறப்பு மிக்க இந்த இரவில் இறைவனிடம் எப்படி பிரார்த்தனை செய்யவேண்டும் என்று நபி (ஸல்) அவர்களிடம் அன்னை ஆயிஷா (ரலி) அவர்கள் கேட்டார்கள். அப்போது நபிகளார், 'இறைவா நீ மன்னிப்பாளன், மன்னிப்பை விரும்புபவன். எனவே என்னை மன்னிப்பாயாக’ என்பதை அதிகம் ஓத வேண்டும் என்றார்கள்.
    இந்த லைலத்துல் கத்ர் இரவிலே நாம் அதிகமாக அல்லாஹ்வை வணங்க வேண்டும். நமது பாவங்களை எல்லாம் மன்னிக்கும்படி இறைவனை பிரார்த்தனை செய்யவேண்டும்.

    'லைலத்துல் கத்ர் இரவை ரமலானில் கடைசிப் பத்து நாட்களில் ஒற்றைப்படையான இரவுகளில் நீங்கள் தேடுங்கள்’ என்பது நபிமொழியாகும். (அறிவிப்பவர்: அன்னை ஆயிஷா (ரலி), நூல்: புகாரி).

    எனவே ரமலானில் இறுதிப்பகுதியில் இருக்கும் நாம் இந்த ஒற்றைப்படை நாட்களில் லைலத்துல்கத்ர் இரவை தேடுவோம். அந்த நாளில் அதிகமாக பிரார்த்தனை செய்து, பாவமன்னிப்பு கேட்டு இறைவனின் திருப்பொருத்தத்தைப்பெற முயற்சி செய்வோம், ஆமீன்.

    மவுலவி எம். எம். அப்துல் கனி, திருநெல்வேலி சந்திப்பு.
    Next Story
    ×