search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    நோன்பின் மாண்புகள்: நன்றியுடன் நடந்துகொள்வோம்
    X

    நோன்பின் மாண்புகள்: நன்றியுடன் நடந்துகொள்வோம்

    இறைவனுக்கு நன்றியுடன் நடந்துகொண்டு அதிகமாக இறைவனை புகழ்வோம். சோதனை வரும்போது பொறுமையுடன் வாழ்ந்து இறைவனின் அருளைப்பெற முயற்சிசெய்வோமாக, ஆமீன்.
    நாம் எந்த நிலையில் இருந்தாலும் பொறுமையைக் கடைப்பிடிக்கவேண்டும். இறைவன் நன்மைகளை வாரிவழங்கும்போது அதை அமைதியாக ஏற்றுக்கொண்டு இறைவனுக்கு தொடர்ந்து நன்றி செலுத்த வேண்டும். அதுபோல இறைவனின் சோதனை நம்மை நெருக்கடியில் தள்ளினால் அப்போது பொறுமை காக்கவேண்டும்.

    நன்மைகள் கிடைக்கும்போது நன்றி செலுத்தினால் அதிகமாக நன்மைகளை வழங்குவதும், சோதனைகளின் போது பொறுமையைக் கடைப்பிடித்தால் அந்த வேதனையை நீக்குவதும் இறைவனின் பண்பு. ஏன்என்றால் இந்த உலகில் உள்ள அனைத்துப்பொருட்களின் மீதும் சக்தி உள்ளவன் இறைவன்.
    இதையே திருக்குர்ஆன் (2:284) இவ்வாறு கூறுகிறது: ‘வானங்களிலும், பூமியிலும் உள்ளவை (அனைத்தும்) அல்லாஹ்வுக்கே உரியன; இன்னும், உங்கள் உள்ளங்களில் இருப்பதை நீங்கள் வெளிப்படுத்தினாலும், அல்லது அதை நீங்கள் மறைத்தாலும், அல்லாஹ் அதைப் பற்றி உங்களைக் கணக்கு கேட்பான்;

    இன்னும், தான் நாடியவரை மன்னிப்பான்; தான் நாடியவரை வேதனையும் செய்வான், அல்லாஹ் அனைத்துப் பொருட்கள் மீதும் சக்தியுடையவன்’.
    மற்றொரு திருக்குர்ஆன் வசனத்தில் கூறும்போது, ‘நம்பிக்கை கொண்டவர்களே! நாம் உங்களுக்கு அளித்துள்ளவற்றில் தூய்மையானவற்றையே உண்ணுங்கள்; நீங்கள் அல்லாஹ்வையே வணங்குபவர் களாக இருப்பீர்களாயின், அல்லாஹ்வுக்கு நன்றி செலுத்தி வாருங்கள்’ (2:172) என்று குறிப்பிடுகின்றான்.



    அதேபோல பொறுமையுடன் இருந்தால் தன்னுடைய அருள் கிடைக்கும் என்பதையும் திருக்குர்ஆன் வசனம் மூலம் கூறுகிறான் அல்லாஹ். மேலும் பொறுமையுடன் தொழுகையில் யார் ஈடுபடுகிறார்களோ அவர்களுடன் தான் இருப்பதாகவும் இறைவன் உறுதி கூறுகிறான். இதையே திருக்குர்ஆன் (2:153) இவ்வாறு கூறுகிறது:

    ‘நம்பிக்கை கொண்டோரே! பொறுமையுடனும், தொழுகையுடனும் (இறைவனிடம்) உதவி தேடுங்கள்; நிச்சயமாக அல்லாஹ் பொறுமையுடையவர்களுடன் இருக்கிறான்’.

    நல்லடியார்கள் எந்த நிலையிலும் தங்கள் மனஉறுதியை தவறவிடுவதில்லை. இறைவனின் அருள்மழை தங்கள் மீது பொழியும்போது மேலும்மேலும் தங்களை தாழ்த்திக்கொண்டு இறைவனை அதிகமாக புகழ்ந்தனர். இறைவன் தங்களுக்கு அளித்த மிகச்சிறிய நன்மைகளுக்கும் அதிகமாக நன்றி செலுத்துபவர்களாக இருந்தனர்.

    அதுபோல துன்பங்களும், வேதனைகளும் தங்களை வாட்டும்போதும் இறைச்சிந்தனை தங்களை விட்டு விலகாமல் இருந்தனர். இறைவன் கூறியபடி பொறுமையுடன் இருந்து பிரார்த்தித்தனர். அதுவே அவர்களுக்கு நன்மையாகவும் முடிந்தது. வேதனை தீர்ந்து நன்மைகள் பெருகியது.

    எனவே நாம் அனைவரும் செழிப்பான நிலையில் இறைவனுக்கு நன்றியுடன் நடந்துகொண்டு அதிகமாக இறைவனை புகழ்வோம். சோதனை வரும்போது பொறுமையுடன் வாழ்ந்து இறைவனின் அருளைப்பெற முயற்சிசெய்வோமாக, ஆமீன்.

    மவுலவி எம். எம். அப்துல் கனி, திருநெல்வேலி சந்திப்பு.
    Next Story
    ×