search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    இறை நம்பிக்கையாளர்களின் புதிய போர் தந்திரம்
    X

    இறை நம்பிக்கையாளர்களின் புதிய போர் தந்திரம்

    நபி (ஸல்) அவர்களின் மாமி ஸஃபிய்யா (ரழி) அவர்கள் செய்த இந்த வீரச்செயலினால் பெண்களும், சிறுவர்களும் பாதுகாக்கப்பட்டார்கள்.
    மதீனாவைக் காத்துக் கொள்ள அகழைத் தோண்டி வைத்திருப்பார்கள் என்று எதிரிப்படையினர் எதிர்பார்த்திருக்கவில்லை. இப்படியான திட்டத்திற்கெதிரான எவ்வித முன்னேற்பாடுகளையும் அவர்கள் செய்திருக்கவில்லை.

    அகழின் பக்கத்தில் கூட நெருங்கவிடாமல் இறைமறுப்பாளர்களை நோக்கி முஸ்லிம்கள் அம்பு மழை பொழிந்தனர். இறைமறுப்பாளர்கள் தெறித்து ஓடினர். ஆழமில்லாத இடமாகப் பார்த்து அகழினுள் சிலர் இறங்கி, மதீனாவிற்குச் செல்லும் பாதை அருகே ஏறினர். அவர்களைக் கண்ட மாத்திரத்தில் அலி (ரலி) அவர்கள், இறைமறுப்பாளர்கள் உள்நுழைந்த பாதையைத் தடுத்து அவர்கள் மீண்டும் அவ்வழியாக வெளியேற முடியாதவாறு முற்றுகையிட்டபோது, எதிரிப்படையைச் சேர்ந்த அம்ர் இப்னு அப்துஉத், முஸ்லிம்களின் பலம் அறியாமல் “யார் என்னுடன் நேருக்கு நேர் மோத விரும்புவது?” என்று கேட்க, அலி (ரலி) பாய்ந்து வாளைச் சுழற்றி சில நொடிகளில்  எதிரிப்படையைச் சேர்ந்த அம்ரைத் தாக்கி வீழ்த்தினார். இதைக் கண்டு மற்றவர்கள் ஓடிச் சிதறினர். இப்படி குறைஷிகள் அகழில் இறங்குவதற்கும், அதன் மீது பாதை அமைப்பதற்கும் முயன்று தோற்றனர்.

    இதற்கிடையில் உமர்(ரலி) குறைஷிக்குல இறைமறுப்பாளர்களை ஏசிக் கொண்டே நபிகள் நாயகத்திடம் வந்து “அல்லாஹ்வின் தூதரே! சூரியன் மறையப் போகிறது. ஆனால், இன்னும் நான் அஸ்ர் தொழவில்லை” என்றார். அதற்கு நபிகளாரும் “நானும் அஸ்ர் தொழவில்லை. நம்மை நடுத் தொழுகையைத் தொழவிடாமல் சூரியன் மறையும் வரை எதிரிகள் தாமதப்படுத்திவிட்டார்கள்.

    அல்லாஹ் அவர்களின் புதை குழிகளையும் 'வீடுகளையும்' அல்லது அவர்களின் 'வயிறுகளையும்' நெருப்பால் நிரப்புவானாக” என்று கூறினார்கள். பின்பு அந்த இடத்திலேயே முஸ்லிம்கள் அனைவரும் நபி (ஸல்) அவர்களுடன் சென்று உழுச் செய்து சூரியன் மறைந்த பின் அஸ்ரை முதலில் தொழுது பிறகு மக்ரிப் தொழுகையைத் தொழுதனர்.



    எதிரிகள் அகழைக் கடக்க முயற்சி செய்ததும், முஸ்லிம்கள் அதை எதிர்த்ததும் பல நாட்களாக நீடித்தது. இடையில் அகழ் தடையாக இருந்ததால் நேரடியான சண்டைக்கு வழியில்லாமல் இருந்தது. இரு தரப்பினரும் மாறி மாறி அம்பெறிந்து தாக்குதல் நடத்தினர். ஆகவே பலத்த சேதங்களேதும் ஏற்படவில்லை.

    முஸ்லிம் பெண்களும் சிறுவர்களும் பாதுகாக்கப்பட்டிருப்பது ஹஸ்ஸான் இப்னு ஸாபித்தின் கோட்டையென்று அறிந்து, முதலில் அதைத் தாக்க ஒரு யூதன் அக்கோட்டையைச் சுற்றி வந்தான். ஆனால் கோட்டையின் உள்ளே என்ன வகையான பாதுகாப்புப் பணிகள் உள்ளன என்று தெரியாததால் தயங்கியபடி சுற்றிக் கொண்டிருந்தான்.

    ஹஸ்ஸானைத் தவிர வேறு எந்தப் பாதுகாப்புமில்லாத நிலையில் நபிகளாரின் மாமி ஸஃபிய்யா பின்த் அப்துல் முத்தலிப்(ரலி) அவர்கள் “ஹஸ்ஸானே! இந்த யூதன் கோட்டையைச் சுற்றி வருகிறான். நபியவர்களும் நபித் தோழர்களும் நமது நிலையை அறிந்து கொள்ள முடியாமல் இருக்கிறார்கள். நாம் பாதுகாப்பின்றி இருப்பதை நமக்குப் பின்னால் இருக்கும் மற்ற யூதர்களுக்கு இவன் சொல்லிவிட்டால்? அதற்கு முன் நீ இறங்கி சென்று அவனைக் கொன்றுவா!” என்றார்கள்.

    அதற்கு ஹஸ்ஸான் தன்னால் அது முடியாத காரியமென்று மறுத்துவிட்டார். ஸஃபிய்யா(ரலி) அவர்களே ஒரு தடியைக் கையில் எடுத்துச் சென்று அந்த யூதனை கைத்தடியால் அடித்துக் கொன்றார்கள். நபி (ஸல்) அவர்களின் மாமி ஸஃபிய்யா (ரழி) அவர்கள் செய்த இந்த வீரச்செயலினால் பெண்களும், சிறுவர்களும் பாதுகாக்கப்பட்டார்கள்.

    ஆதாரம்: ஸஹீஹுல் புகாரி 4:64:4112, 5:65:4533, இப்னு ஹிஷாம்

    - ஜெஸிலா பானு.
    Next Story
    ×