search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    அறிவோம் இஸ்லாம்: தூய்மையை உபதேசித்த மார்க்கம்
    X

    அறிவோம் இஸ்லாம்: தூய்மையை உபதேசித்த மார்க்கம்

    தூய்மையை நடைமுறைப்படுத்திய மார்க்கம், இஸ்லாம். முழுக்கவனத்துடன் தூய்மையைப் பேணுபவர்களையே தன் விருப்பத்திற்கு உரியவர்களாக இறைவன் கருதுகின்றான்.
    தூய்மையை உபதேசித்த மார்க்கம்; தூய்மையை நடைமுறைப்படுத்திய மார்க்கம், இஸ்லாம். முழுக்கவனத்துடன் தூய்மையைப் பேணுபவர்களையே தன் விருப்பத்திற்கு உரியவர்களாக இறைவன் கருதுகின்றான்.

    ‘தூய்மை இறை நம்பிக்கையின் ஒரு பாதி’ என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள்.

    மனிதன் தன் ஆன்மாவைத் தூய்மையாக வைத்துக் கொள்வது இறை நம்பிக்கையின் ஒரு பாதி, உடலைத் தூய்மையாக வைத்துக் கொள்வது இறை நம்பிக்கையின் மற்றொரு பாதி ஆகும்.

    இறை நிராகரிப்பு, இணைவைப்பு, தீங்கிழைத்தல், வழிகேட்டில் மூழ்கி விடுதல் முதலிய அசுத்தங்களை விட்டும் ஆன்மாவைத் தூய்மைப்படுத்தி, தூய்மையான கோட்பாடு கள், நற்செயல்கள், நற்பண்புகளால் அதை அலங்கரிப்பது தான் ஆன்மாவைத் தூய்மைப்படுத்துவது ஆகும்.

    வெளிப்படையான அசுத்தங்கள், அழுக்குகளை நீக்கி உடலைத் தூய்மையாக, நேர்த்தியாக வைத்துக் கொள்வதுதான் உடல் தூய்மை என்பது.

    நமது அகமும், புறமும் தூய்மையாக இருக்க வேண்டும் என்பதே, இறை நம்பிக்கை நம்மில் ஏற்படுத்த விரும்பும் மாற்றம் ஆகும். நமது புறத்தோற்றமான உடலும், உடைமை களும், உறைவிடமும், சுற்றுப்புறமும் அழுக்குப் படிந்தவைகளாக இருக்கக் கூடாது. அதேபோல நமது மனமும் மாசடைந்து இருத்தலாகாது.

    தொழுகை என்பது ஒரு பரிசுத்தமான வழிபாடு. அதை மேற்கொள்பவரின் உடல், உள்ளம், உடை, அவர் நிற்கும் இடம் போன்றவை தூய்மையாக இருக்க வேண்டும். ஆகவே தான் தொழுவதற்கு முன்பு கை, கால் உள்ளிட்ட உறுப்புகளைக் கழுவித் தூய்மை செய்து கொள்வது இஸ்லாம் மார்க்கத்தில் கடமையாக்கப்பட்டுள்ளது.

    தொழுகைக்கு முன்பு செய்து கொள்ளும் அங்கத் தூய்மையைக் குறிக்க மூலத்தில் ‘ஒளு’ என்ற சொல் ஆளப்பட்டுள்ளது. இது ‘வளாத்’ என்ற சொல்லில் இருந்து பிறந்ததாகும். இதற்குத் தூய்மை, வெளிச்சம், அழகு ஆகிய பொருள்கள் அகராதியில் உள்ளன. அங்கத்தூய்மை செய்வதால் ஒருவருக்கு இந்த மூன்றும் கிடைக்கின்றன.

    ‘‘இறை நம்பிக்கையாளர்களே! நீங்கள் தொழுகைக்குச் சென்றால் உங்கள் முகங்களையும், முழங்கைகள் வரை உங்கள் கைகளையும் கழுவிக் கொள்ளுங்கள். உங்கள் தலைகளை ஈரக்கைகளால் தடவிக் கொள்ளுங்கள். கணுக்கால் வரை உங்கள் கால்களையும் (கழுவிக் கொள்ளுங்கள்)’’ என்று திருமறையிலே (5:6) இறைவன் கூறுகின்றான்.

    தொழுகை என்ற வழிபாட்டை நிறைவேற்றுவதற்கு முன்னால், கட்டாயம் அங்கத் தூய்மை (‘ஒளு’) செய்து கொள்ள வேண்டும். தவறினால் தொழுகை செல்லாது.

    ‘தூய்மையின்றி எந்தத் தொழுகையும் (இறைவனிடம்) ஏற்கப்படாது; மோசடிப் பொருள்களால் செய்யப்படும் எந்தத் தர்மமும் ஏற்கப்படாது’ என்பது நபி மொழி.

    ‘தொழுகையின் திறவுகோல், தூய்மை ஆகும்’ என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

    கதவைத் திறக்க திறவுகோல் அவசியம். அதைப் போன்று தொழுகையை நிறைவேற்ற அங்கத்தூய்மை அவசியமாகும். இதுபோலவே சொர்க்கவாசலைத் திறக்க வழிபாடுகள் அவசியம். வழிபாடுகளில் முதன்மையானது, தொழுகை. ஆகவேதான் ‘தொழுகை சொர்க்கத்தின் திறவுகோல்’ என்று நபிகளார் உவமை நயத்தோடு கூறினார்கள்.

    ‘ஒளு’ செய்யும்போது முதலில் ‘பிஸ்மில்லாஹிர் ரஹ்மானிர் ரஹீம்’ (அளவற்ற அருளாளனும், நிகரற்ற அன்புடையோனுமாகிய இறைவன் திருநாமத்தால் தொடங்குகிறேன்) என்று கூறித் தண்ணீரைக் கைகளில் எடுத்து மணிக்கட்டு வரை மூன்று முறைக் கழுவ வேண்டும். இரண்டாவதாக, பற்களைக் கைகளால் தேய்த்து மூன்று முறை வாயைக் கொப்பளிக்க வேண்டும். இதைத் தொடர்ந்து நாசித் துளைகளில் மூன்று முறை தண்ணீரை ஏற்றி அதைத் தூய்மைப்படுத்த வேண்டும். பிறகு முகத்தை மூன்று முறை சுத்தம் செய்ய வேண்டும். இதன் பிறகு இரு கைகளை முழங்கை வரை கழுவ வேண்டும். இதைத் தொடர்ந்து தலையை மூன்று முறை ஈரக்கையால் தடவ வேண்டும். இதன் பிறகு காதுகளின் உள்பகுதியை ஆள்காட்டி விரல்களாலும், வெளிப்பகுதியைக் கட்டை விரல்களாலும் ஈரக்கையால் தடவ வேண்டும். இறுதியில் இரண்டு கால்களையும் கரண்டைக் கால் வரை கழுவ வேண்டும். இத்துடன் ‘ஒளு’ செய்யும் முறை முடிவடைகிறது.

    தொழுகைக்குச் செல்லும் முன்பு அங்கத் தூய்மையில் முழுக்கவனம் செலுத்த வேண்டும். ‘ஒளு’வை முறைப்படி செய்து கொள்ள வேண்டும்.

    ‘‘மறுமை நாளில் எனது சமுதாயத்தினரின் அடையாளம் இதுவே. ‘அவர்களது நெற்றியும், ‘ஒளு’ செய்யப்பட்ட உடல் உறுப்புகளும் ஒளியால் மிளிரும்’ எனவே எவர் தம்முடைய ஒளியை அதிகப்படுத்த நாடுகிறாரோ (அவர் ‘ஒளு’வை நேர்த்தியாகச் செய்து) தம் ஒளியை அதிகப் படுத்திக் கொள்ளட்டும்’’ என்பது நபிமொழி.

    ஒருமுறை நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள், ‘உங்கள் ஒருவரின் வீட்டு வாசலில் ஆறு இருந்து அதில் ஒவ்வொரு நாளும் ஐந்து முறை குளித்தால் அவரது உடலில் அழுக்கு சிறிதேனும் இருக்குமா?’ என்று கேட்டார்கள். அதற்குத் தோழர்கள், ‘அவரிடம் அழுக்கு எதுவும் இருக்காது’ என்றனர். ‘இதுதான் ஐந்து நேரத் தொழுகைக்கு உதாரணமாகும்’ என்று நபிகளார் நவின்றார்கள்.

    பல் தூய்மை என்பது எல்லா நேரங்களிலும் விரும்பத்தக்கதும், நபிவழியும் ஆகும். இருந்தபோதிலும், ‘ஒளு’ செய்யும்போதும், தொழுகைக்குத் தயாராகும்போதும், குர்ஆன் ஓதும்போதும், தூக்கத்தில் இருந்து எழும்போதும், வாயில் வித்தியாசமான வாடையை உணரும்போதும் பல் தூய்மை என்பது மிகவும் விருப்பத்திற்குரிய நபி வழி (சுன்னத்) ஆகும். காலையிலும் மாலையிலும் பற்களைத் தூய்மை செய்வதில் நோன்பு வைத்தவர், நோன்பு வைக்காதவர் என்ற வேறுபாடு கிடையாது.

    ‘என் சமூகத்திற்கு சிரமம் ஆகி விடும் என்ற பயம் மட்டும் இல்லாமல் இருந்திருந்தால், ‘ஒளு’ செய்யும் போதெல்லாம் பற்களைத் தூய்மை செய்ய வேண்டும் என்று நான் அவர்களுக்கு உத்தரவிட்டிருப்பேன்’ என்ற நபிகளாரின் மொழி, பற்களை எப்போதும் தூய்மையாக வைத்திருக்க வேண்டும் என்ற அவர்களின் அளப்பரிய ஆர்வத்தையும், விருப்பத்தையும் வெளிப்படுத்துகிறது.

    தொழுகைக்கு முன்னர் உள்ளமும், உடலும் தூய்மையாக இருக்க வேண்டும் என்று இஸ்லாம் மார்க்கத்தைப் போல வேறெந்த மதமும் வற்புறுத்திச் சொல்லவில்லை.

    நபிகளார் கூறியபடி வாழ்ந்தால் இந்த உலகமே தூய்மையாகி விடும் என்பது மறுக்க முடியாத உண்மை.
    Next Story
    ×