search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    உண்மையான அனாதை யார் தெரியுமா?
    X

    உண்மையான அனாதை யார் தெரியுமா?

    பெற்றோரில் இருவரோ அல்லது ஒருவரோ தவறிவிட்டால் இருவரையோ அல்லது ஒருவரை இழந்துவிட்ட குழந்தை ‘அனாதை குழந்தை’ என்ற அடைமொழியுடன் இரக்கமாக அழைக்கப்படுகிறது.
    அனாதை என்பதற்கு தமிழ் அகராதியில் வரும் பொருள் ‘திக்கற்றவன்’, ‘ஆதரவற்றவன்’ ஆகும்.

    ‘ஆதரிப்பார் அற்றவன் அனாதை’, ‘ஆதரிக்கும் பெற்றோரை இழப்பவன் அனாதை ஆவான்’ என இஸ்லாம் கூறுகிறது.

    ஒரு குழந்தை தன் பெற்றோரின் அரவணைப்பிலும் ஆதரவிலும், அன்பிலும், அக்கறையிலும், பாதுகாப்பிலும், கண்காணிப்பிலும் வளர்கிறது.

    பெற்றோரில் இருவரோ அல்லது ஒருவரோ தவறிவிட்டால் இருவரையோ அல்லது ஒருவரை இழந்துவிட்ட குழந்தை ‘அனாதை குழந்தை’ என்ற அடைமொழியுடன் இரக்கமாக அழைக்கப்படுகிறது.

    இல்லறத்தை துறந்தால் துறவி.
    வாழ்க்கைத் துணையை இழந்தால் விதவை.
    செல்வத்தை இழந்தால் ஏழை.
    சொந்த நாட்டை துறந்தால் அகதி.
    பெற்றோரை இழந்தால் அனாதை.

    அனாதைகளை ஆதரிப்பதால் அனாதை இல்லங்கள் ஊர் தோறும் தோற்றுவிக்கப்பட்டிருக்கின்றன. முதல் அனாதை இல்லத்தை தோற்றுவித்தவன் அவனே இறைவன் ஆவான். அவன் அன்பாளன்; கிருபையாளன்.

    எல்லாம் வல்ல அல்லாஹ் திருக்குர்ஆனில், அனாதைகளின் பாதுகாப்பு, அவர்களின் மறுவாழ்வு, அவர்களின் பராமரிப்பு, அவர்களின் உரிமை, அவர்களின் பொருளாதாரம், அவர்களின் வாழ்வாதாரம், அவர்களின் இல்லறம் போன்ற அடிப்படையான உரிமைகள் பாதுகாப்பு சம்பந்தமாக இருபத்திரெண்டு இடங்களில் பேசிவருகிறான். இந்தளவு இறைவனே வலியுறுத்தி சொல்லுவது அனாதைகளின் பாதுகாப்பு முக்கியத்துவம் பெறுகிறது.

    ‘(நபியே) அவன் உம்மை அனாதையாகக் கண்டு அவன் அரவணைக்கவில்லையா?’

    ‘உம்மை வழி அறியாதவராகக் கண்டு வழிகாட்டினான்’.

    ‘உம்மை வறுமையில் கண்டு தன்னிறைவு பெற்றவராக்கினான்’. (திருக்குர்ஆன்: 93–6,7,8)

    அனாதைகளின் முக்கியமான மூன்று அம்சங்களை பற்றி மேற்கூறப்பட்ட திருக்குர்ஆனின் வசனம் கோடிட்டு காட்டுகிறது.

    1. அனாதைகளின் அரவணைப்பு, 2. அனாதைகளின் அறியாமையை போக்கி அவர்களை அறிவுசார்ந்த சமூகமாக மாற்றிக் காட்டுவது, 3. அவர்களை பொருளாதாரத்தில் தன்னிறைவு பெற்றவர்களாக ஏற்றம் காணச்செய்வது.

    இவை அடிப்படையான அம்சங்கள். பாதுகாப்பு, கல்வி, பொருளாதாரம் ஆகியவை தான் ஒரு அனாதையை சமூகத்தில் அந்தஸ்து உடையவனாக மாற்றிக்காட்டுகிறது.

    பெற்றோரை இழந்த குழந்தை, பருவ வயதை அடையும் வரைதான் அனாதை. பருவ வயதை அடைந்துவிட்ட எவரும் இஸ்லாத்தில் அனாதை இல்லை. பருவ வயதை அடையும் வரை நன்மை தரும் செயலாக உள்ளது.

    ‘நானும், அனாதையின் காப்பாளரும் சொர்க்கத்தில் இப்படி இருப்போம் என்று கூறியபடி நபி (ஸல்) அவர்கள் தங்களின் சுட்டு விரலாலும், மற்றொரு விரலாலும் (சற்றே இடைவெளிவிட்ட விரல்) சைகை செய்தார்கள்’ (அறிவிப்பாளர்: ஸஹ்ல்பின் ஸஅத் (ரலி)

    அனாதை என்பது நிரந்தரமான ஒரு அடையாளம் அல்ல. பெற்றோரை இழந்த குழந்தை பருவ வயதை அடையும் வரைதான் அனாதை. இது தற்காலிகமானது.

    ‘பருவ வயதை அடைந்த ஒருவர் அனாதையாக இருக்கமுடியாது; மேலும் மாதவிடாய் ஏற்பட்ட ஒருத்தியும் அனாதையாக இருக்க முடியாது’ என நபி (ஸல்) அவர்கள் நவின்றார்கள்.

    சரி உண்மையான அனாதை யார் தெரியுமா? இதோ அறிவுக் கருவூலம் அலி (ரலி) அவர்களின் சிந்தனையை கவனிப்போம்.

    ‘பெற்றோரை இழந்தவன் உண்மையான அனாதை இல்லை. உண்மையான அனாதை என்பவன் கல்வியும், ஒழுக்கத்தையும் இழந்தவன் தான்’.

    கல்வி, ஒழுக்கம் ஆகிய இரண்டையும் இழந்தவன் நிரந்தரமான அனாதை ஆவான்.

    நபி (ஸல்) அவர்களும் அனாதை தான். அவர்கள் பருவ வயதை அடையும் இந்த அடையாளம் தற்காலிகமாக இருந்தது. ஆனாலும் நபி (ஸல்) அவர்கள் கல்வியையும், ஒழுக்கத்தையும் இழந்த நிரந்தரமான அனாதை அல்ல.

    நபித்தோழர்களில் அபூ ஹுரைரா (ரலி), ஜுபைர் பின் அவ்வாம் (ரலி) ஆகிய இருவரும் அனாதைகளே. எனினும் இவர்கள் இழந்தது பெற்றோரைத்தான். கல்வியையும் ஒழுக்கத்தையும் அல்ல.

    குடும்பத்தில் அனாதை; கல்வியில் சாதனை. இந்த சாதனைக்கு சொந்தக்காரர் அபூஹுரைரா (ரலி) அவர்கள் ஆவார்கள். அனாதையிலும் கடும் வறுமையிலும் வாழ்ந்த அவர் ‘5374’ நபி மொழிகளை அறிவித்திருக்கிறார்.

    அனாதையாக பிறந்தாலும் கல்விக்காக வாழ்ந்தவர் அவர். இவ்வாறே எத்தனையோ அறிஞர்கள் பெற்றோரை இழந்த அனாதைகளானாலும், கல்வியையும், ஒழுக்கத்தையும் ஒரு போதும் இழக்கவில்லை.

    இந்த பட்டியலில் இமாம் புகாரி, இமாம் ஷாபி, இமாம் அஹ்மது பின் ஹன்பால், இமாம் இப்னு ஜங்ஸி, இமாம் அவ்ஜாயி, இமாம் சுயூதி, மாமேதை இப்னுஹஜர், இமாம் தவ்ரி ஆகியோர் அனாதைகளே. என்றாலும் கல்வியையும் ஒழுக்கத்தையும் அவர்கள் ஒருபோதும் இழக்கவில்லை.

    அனாதைகள் எனும் அடையாளத்தைவிட இஸ்லாமிய மார்க்கமேதைகள் எனும் பட்டத்துடன் அவர்கள் பேரும், புகழும் பெற்று இன்று வரைக்கும், உலகம் அழியும் வரைக்கும் அழியாப்புகழுடன் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். இவர்களை புகழுடன் வாழவைத்தது கல்வியும் ஒழுக்கமும் தான்.

    இஸ்லாமியர்கள் அனைவரும் கல்வி அறிவும், ஒழுக்கமும் பெற்று சிறந்துவாழ எல்லாம் வல்ல அல்லாஹ்வை பிரார்த்தனை செய்வோம்.

    மவுலவி அ.செய்யது அலி மஸ்லஹி, பாட்டப்பத்து, திருநெல்வேலி டவுண்.
    Next Story
    ×