search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    உஹதுப் போரில் உயிர்த்தியாகம் செய்தவர்கள்
    X

    உஹதுப் போரில் உயிர்த்தியாகம் செய்தவர்கள்

    இணைவைப்பவர்கள் மக்காவை நோக்கி பயணித்த போது, முஸ்லிம்கள் களத்தில் இறங்கி காயமடைந்தவர்களையும், வீர மரணத்தைத் தழுவியவர்களையும் காணச் சென்றனர்.
    உஹுத் போரில் நபி முஹம்மது (ஸல்) அவர்களுக்கும், ஏனைய முஸ்லிம்களுக்கும் பலத்த காயமும் களைப்பும் ஏற்பட்டிருந்தது. இருப்பினும் உரிய நேரத்திற்கு அவர்களெல்லாம் தொழுதனர். நபி முஹம்மது(ஸல்) அவர்கள் உட்கார்ந்து தொழ, நின்று தொழ இயலாத தோழர்களும் அவ்வாறே தொழுதனர். இதனை, காலித் பின் வலீத் உற்று நோக்கிக் கொண்டிருந்தார். அவருடைய மனதில் ம் இஸ்லாமிற்கு எதிராகச் செய்யும் காரியங்கள் தவறானது என்று தோன்றிக் கொண்டே இருந்தது. ஆனால் அவர் மக்காவாசிகளுக்கு ஆதரவாகவே இருந்தார்.

    இணைவைப்பவர்கள் மக்காவை நோக்கி பயணித்த போது, முஸ்லிம்கள் களத்தில் இறங்கி காயமடைந்தவர்களையும், வீர மரணத்தைத் தழுவியவர்களையும் காணச் சென்றனர். பெரும்பாலோரின் உடல் சிதைந்திருந்ததால் அடையாளம் காண முடியாத அளவிற்கு இருந்தனர். எண்பதற்கும் மேற்பட்ட காயங்களுடனிருந்த ஸஅது இப்னு ரபீஆ தனது இறுதி சுவாசித்தில் இருந்தபோதும், அல்லாஹ்வின் தூதர் மீது ஸலாம் சொல்லிவிட்டு, தான் சொர்க்கத்தின் நறுமணத்தை உணர்வதாகச் சொன்னவர், “உங்களில் ஒருவர் உயிருடன் இருக்கும் நிலையில் நபியவர்களின் உயிருக்கு ஏதாவது ஆபத்து ஏற்பட்டால் உங்களுக்கு மன்னிப்பு என்பதே கிடையாது” என்று முஸ்லிம்களிடம் தனது இறுதி வார்த்தைகளைக் கூறி உயிர் நீத்தார்.



    ஒரு நேரத் தொழுகையைக் கூடத் தொழாத உஸைம் என்பவரை, சுவனவாசிகளில் ஒருவர் என்றார்கள் நபி முஹம்மது (ஸல்). காரணம் உஸைம் உயிர் பிரியும் முன்பு, தான் அல்லாஹ்வையும் அவனது தூதரையும் நம்பிக்கை கொண்டு, இஸ்லாம் மீதுள்ள பிரியத்தினால் போரில் கலந்து கொண்டு, அல்லாஹ்வின் தூதரோடு சேர்ந்து எதிரிகளிடம் போர் புரிந்து மரணத்தைத் தழுவியவர்.

    உஹுதுப் போரில் உயிர் தியாகிகளாகக் கொல்லப்பட்டவர்களை இரண்டிரண்டு பேராக ஒரே துணியில் சேர்த்து வைத்துக் கஃபனிட்டு ‘இவர்களில் குர்ஆனை அதிகம் அறிந்தவர் யார்?' என்று நபி(ஸல்) அவர்கள் கேட்டு, ஒருவர் சுட்டிக்காட்டப்பட்டதும் அவரின் உடலை உட்குழியில் முதலில் வைத்து பின்னர் அடக்கம் செய்யப்பட்டனர். 'மறுமை நாளில் இவர்களுக்கு நானே சாட்சியாவேன்' என்று கூறிவிட்டு, அவர்களின் இரத்தத்துடனேயே அவர்களை அடக்கம் செய்யும்படி உத்தரவிட்டார்கள் நபி(ஸல்). அவர்களுக்காக நபி(ஸல்) அவர்கள் ஜனாஸாத் தொழுகை தொழவுமில்லை, மரணித்தவர்கள் நீராட்டப்படவுமில்லை.

    “முஃமின்களில் நின்றுமுள்ள மனிதர்கள் அல்லாஹ்விடம் அவர்கள் செய்துள்ள வாக்குறுதியில் உண்மையாக நடந்து கொண்டார்கள்; அவர்களில் சிலர் ஷஹீதாக (உயிர் தியாகியாக) வேண்டும் என்ற தம் இலட்சியத்தையும் அடைந்தார்கள்; வேறு சிலர் ஆர்வத்துடன் அதை எதிர் பார்த்துக் கொண்டு இருக்கிறார்கள். எந்த நிலைமையிலும் அவர்கள் தங்கள் வாக்குறுதியிலிருந்து சிறிதும் மாறுபடவில்லை” என்ற திருக்குர்ஆனின் இறைவசனம் அருளப்பட்டது.

    ஆதாரம்: இப்னு ஹிஷாம், ஸஹீஹ் புகாரி 3:56:2805, 4:61:3596, 4:64:4079, திருக்குர்ஆன் 33:23

     -ஜெஸிலா பானு.
    Next Story
    ×