search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    நற்செய்தி சிந்தனை: மனதில் பதிய வையுங்கள்
    X

    நற்செய்தி சிந்தனை: மனதில் பதிய வையுங்கள்

    இந்நற்செய்தியைப் படிக்கும் நாம், ஒரு கணம் சிந்திப்போம். “உவமைகளாலன்றி வேறு வழியாக, அவர் பேசியது கிடையாது” என்ற செய்தியும் ஓர் இடத்தில், நற்செய்தியில் இடம் பெறுகிறது.
    மதேயு என்ற நற்செய்தியாளர் குறிப்பிடும் கருத்தைக் கவனிப்போம்.

    அக்காலத்தில் இயேசுவின் சீடர்கள் அவருடைய அருகிலே வந்தனர். அவர்கள் இயேசு பெருமானைப் பார்த்து, “ஏன் அவர்களோடு உவமைகள் வழியாகப் பேசுகின்றீர்” என்று கேட்டனர்.

    அவர்கள் கேட்ட கேள்விகளுக்குப் பதில் மொழியாக, அவர் இப்படிக் கூறுகிறார்:

    “விண்ணரசின் மறைபொருளை அறிவதற்கு, உங்களுக்குக் கொடுத்து வைத்திருக்கிறது. அவர்களுக்குக் கொடுத்து வைக்கவில்லை. உள்ளவர் களுக்குக் கொடுக்கப்படும். அவர்கள் நிறைவாகப் பெற்றுக்கொள்வார்கள்”.

    “மாறாக, இல்லாதவர்களிடமிருந்து, உள்ளதும் எடுத்துக்கொள்ளப்பட்டு விடும். அவர்கள் அதைக்கண்டும், காண்பது கிடையாது. கேட்டும், கேட்பது கிடையாது. புரிந்து கொள்வதும் கிடையாது. இப்படி இருப்பதால்தான், நான் அவர்களோடு உவமைகள் வழியாகப் பேசுகிறேன்”.

    “எசாயா, முன்பு சொன்ன இறைவாக்கு, அவர்களிடம் இப்படியாக நிறை வேறுகிறது”.

    “நீங்கள் உங்கள் காதுகள் வழியாகத் தொடர்ந்து கேட்கிறீர்கள். ஆனால் கருத்திலே கொள்வது கிடையாது. உங்கள் கண்களால், பார்த்துக் கொண்டுதான் இருக்கிறீர்கள். இருந்தாலும் உணர்வது கிடையாது. இந்த மக்களின் நெஞ்சமானது, மிகவும் கொழுத்துப் போய் விட்டது. அவர்களுடைய காதுகளும் மந்தமாக ஆகி விட்டது. இவர்கள், தம்முடைய கண்களை மூடிக்கொண்டு விட்டார்கள்”.

    “எனவே, கண்களால் காணாமலும், காதுகளால் கேட்காமலும், தம்முடைய உள்ளத்தால் உணராமலும், மனம் மாறாமலும் இருக்கின்றார்கள். நானும் அவர்களைக் குணம் ஆக்காமல் இருக்கிறேன்”.

    “உங்களுடைய கண்கள் பேறு பெற்றவைகள் என்பதை அறிந்து கொள்ளுங்கள். ஏனென்றால், அவைகள் காணுகின்றன. உங்கள் காதுகளும் பேறு பெற்றவைகள். ஏனென்றால் அவைகள் கேட்கின்றன”.

    “நான் உறுதியாக உங்களுக்குச் சொல்கிறேன். பல இறைவாக்கினரும், நேர்மையாளரும், நீங்கள் காண்பவற்றைக் காண்பதற்கு ஆவல் கொண்டிருந்தார்கள். ஆனால் அவர்கள் காணவில்லை. நீங்கள் கேட்பவற்றைக் கேட்க விரும்பினார்கள். ஆனால் அவர்கள் கேட்கவில்லை” என்று கூறினார்.

    இந்த நற்செய்தியை மிகவும் நுணுக்கமாக ஆராய்ந்து பார்ப்போம்.

    இயேசு பிரான், இவ்வுலகில் வாழ்ந்த குறைந்த காலத்தில், மக்களுக்குப் புரியும்படி எளிமையாகப் பேசினார். அவ்விதம் பேசும்பொழுது, அவர்கள் உணரக்கூடிய வகையில், உவமைகளைப் பயன்படுத்தினார்.

    இதைப் புரிந்து கொள்ள முடியாத இயேசு பெருமானின் சீடர்கள், இப்படி ஒரு கேள்வியை அவரிடமே கேட்கிறார்கள். உண்மைதான். இவர்கள் இவரோடே இருப்பதாலும், அவருடைய செயல்களையும், கருத்துகளையும் காண்ப தாலும், கேட்பதாலும் இப்படி ஒரு கேள்வியைத் தொடுக்கிறார்கள்.

    அவர்கள் கேட்ட கேள்விக்கு, அவர் விடை பகர்கிறார். எப்படி? சிந்தித்துப் பார்த்தால், இயேசு பெருமானின் விடையின் ஆழம் கண்டிப்பாய் நமக்குப் புரியும். ஒருபுறம் சீடர்களையும், மறுபுறம் மக்களையும் பற்றிப் பேசுகிறார்.

    சீடர்களைப் பார்த்து அவர் கூறுவதைக் கவனியுங்கள். விண்ணரசைப் பற்றி அறிந்து கொள்வதற்கு உங்களுக்குக் கொடுத்து வைத்திருக்கிறது. அவர் களுக்குக் கொடுத்து வைக்கவில்லை என்கிறார்.

    இச்செய்தியில் இருந்து, நாம் அறிந்து கொள்ள வேண்டியது என்ன என்பதைப் பற்றிச் சிந்திப்போம். நீங்கள் எந்நேரமும் என் கூடவே இருப்பதாலும், என்னுடைய செய்திகளைச் செவிமடுப்பதாலும், உங்களுக்கு அந்த நல்வாய்ப்பு இருக்கிறது என்று கூறுகிறார்.

    அதே சமயத்தில் வேறொரு செய்தியையும் எடுத்துரைக்கிறார்.

    “நீங்கள் உங்களுடைய காதுகள் வழியாகத் தொடர்ந்து கேட்கிறீர்கள். ஆனால் கருத்திலே கொள்வது கிடையாது” என்கிறார்.

    “வெறுமனே கேட்டுவிட்டால் போதாது. அதை மனதிலே பதிய வைத்துக் கொள்ள வேண்டும்” என்கிறார்.

    அடுத்தடுத்த வரிகளையும் எண்ணிப் பாருங்கள். “உள்ளவர்களுக்குக் கொடுக்கப்படும். அவர்கள் நிறைவாகப் பெற்றுக்கொள்வார்கள்”.

    உள்ளவர்கள் என்றால் பொருள் என்ன? நற்செய்தியை உண்மையில் ஏற்றுக் கொள்பவர்கள் என்பதே அதன் பொருளாகிறது. அவர்களுக்குக் கண்டிப்பாய் கொடுக்கப்படும். அவர்களும் நிறைவாகப் பெற்றுக்கொள்வார்கள்.

    இல்லாதவர்களிடம் இருந்து உள்ளதும் எடுத்துக் கொள்ளப்படும். நற்செய்தியை ஏற்றுக் கொள்ளாதவர்களிடம் இருந்து, உள்ளதும் எடுத்துக் கொள்ளப்படும் என்பதுதானே பொருளாகிறது.

    அவர்கள் கண்டும் உண்மையில் காண்பது கிடையாது. கேட்டும் கேட்பது கிடையாது. இன்னும் சொல்லப்போனால், புரிந்து கொள்வதும் கிடையாது. இப்படி இருப்பதால்தான் நான் அவர்களோடு, உவமைகள் வழியாகப் பேசு கிறேன் என்கிறார்.

    உவமைகள் மூலம் இயேசு பிரான் பேசும்போது அவர்களுக்குப் புரிகிறது. புரிவதால், அவர்கள் அதை உணர்கிறார்கள்; செயல்படுகிறார்கள். பல நேரங்களில் இம்மக்களின் நெஞ்சம் கொழுத்து விடுகிறது. அவர்களுடைய காதுகளும் மந்தமாகி விடுகிறது. தங்களுடைய கண்களை மூடிக் கொள்கிறார்கள். ஆகவே அவர்களைக் குணமாக்காமல் இருக்கிறேன் என்கிறார்.

    இந்நற்செய்தியைப் படிக்கும் நாம், ஒரு கணம் சிந்திப்போம். “உவமைகளாலன்றி வேறு வழியாக, அவர் பேசியது கிடையாது” என்ற செய்தியும் ஓர் இடத்தில், நற்செய்தியில் இடம் பெறுகிறது.

    எந்த ஒரு கருத்தையும் எடுத்துரைக்கும் பொழுது, வெறுமனே சொல்வதை விட, உவமைகளைக் கூறி புரிய வைப்பதைத் தமிழ்ப் புலவர்கள் பிற்காலத்தில் பயன்படுத்தி இருக்கிறார்கள்.

    ஏறக்குறைய இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு, இவ்வுலகில் மனிதனாகத் தோன்றிய இறை இயேசு, கடினமானவர்களிடையே, தன்னுடைய கருத்தை எடுத்துரைக்கும்பொழுது, சிறு சிறு சம்பவங்கள் வழியாகவும், உவமைகள் வழியாகவும், சாதாரண மக்கள் புரியும் வண்ணம், எளிமையாகப் பேசினார் என்பதுதான் வரலாறு.

    எளிமையில், தத்துவத்தை உள்ளடக்கிப் பேசும்பொழுது, அக்கருத்து நெஞ்சில் நிறுத்தப்படுகிறது. மீண்டும் மீண்டும் நினைவில் வந்து மோதுகிறது. கருத்தில் பொதிந்து கிடக்கும் உண்மையை, ஒருநேரம் இல்லையென்றாலும், மறுநேரம் ஏற்றுக்கொள்ள முடிகிறது.

    ஆகவே இயேசு பெருமானின் செய்திகளைச் செவி மடுப்போம். அச்செய்திகள் வழியாக நம்மை நாமே சீர்படுத்தி வாழ முற்படுவோம்.

    - செம்பை சேவியர்.
    Next Story
    ×