search icon
என் மலர்tooltip icon

    சினிமா

    கந்துவட்டி புகாரில் சினிமா பைனான்சியர் போத்ரா கைது
    X

    கந்துவட்டி புகாரில் சினிமா பைனான்சியர் போத்ரா கைது

    சென்னையில் கந்துவட்டி புகாரில் பிரபல சினிமா பைனான்சியர் முகுந்த்சந்த் போத்ராவும், அவரது 2 மகன்களும் கைது செய்யப்பட்டனர்.
    சென்னை தியாகராயநகர் வடக்கு போக் ரோட்டில் வசிப்பவர் செந்தில்கணபதி. இவர் சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் புகார் மனு ஒன்றைக் கொடுத்தார். அந்த புகார் மனுவில் கூறியிருப்பதாவது:-

    நான் சென்னை தியாகராயநகரில் சொந்தமாக ஓட்டல் நடத்தி வருகிறேன். ஓட்டலை அபிவிருத்தி செய்வதற்காக, சென்னை தியாகராயநகர் விஜயராகவா ரோட்டில் வசிக்கும் முகுந்சந்த் போத்ரா (வயது 56) என்பவரிடம் கடந்த 2016-ம் ஆண்டு ஆகஸ்டு மாதம் ரூ.83 லட்சத்து 50 ஆயிரம் கடன் வாங்கினேன். கடன் வாங்கும்போது அவர் என்னிடம் வெற்று பத்திரங்களிலும், வெற்று பேப்பர்களிலும், காசோலைகளிலும் கையெழுத்து வாங்கிக்கொண்டார். அவற்றை பயன்படுத்தி போலியான ஆவணங்கள் தயாரித்து ரூ.60 கோடி மதிப்புள்ள எனது ஓட்டலில் அவருக்கு 98 சதவீதம் பங்கு இருப்பதாகவும், அந்த ஓட்டலே அவருக்குத்தான் சொந்தம் என்பது போல, அவரது வக்கீல் மூலம் பத்திரிகையில் விளம்பரம் கொடுத்தார்.

    இதுபற்றி கேட்டபோது, கையெழுத்துப்போட்டுக் கொடுத்த வங்கி காசோலை மூலம், காசோலை மோசடி வழக்குப்போட்டு உன்னை கோர்ட்டுக்கு இழுப்பேன் என்று மிரட்டினார். ரூ.83½ லட்சம் கடனுக்கு ரூ.60 கோடி மதிப்புள்ள எனது ஓட்டலை சொந்தம் கொண்டாடுகிறார். அவர் மீது கந்துவட்டி சட்டப்பிரிவின் கீழ் நடவடிக்கை எடுக்கவேண்டும்.

    இவ்வாறு புகார் மனுவில் கூறியிருந்தார்.

    இந்த புகார் மனு மீது உரிய விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்கும்படி மத்திய குற்றப்பிரிவு போலீசாருக்கு போலீஸ் கமிஷனர் ஏ.கே.விஸ்வநாதன் உத்தரவிட்டார். கூடுதல் துணை கமிஷனர் வெங்கடாச்சலபதி மேற்பார்வையில், உதவி கமிஷனர் தேவநேசன், இன்ஸ்பெக்டர் வசந்தன் ஆகியோர் இது தொடர்பாக விசாரணை மேற்கொண்டனர்.

    விசாரணையில் செந்தில்கணபதி கொடுத்த புகாரில் உண்மை இருப்பது தெரியவந்ததால் பைனான்சியர் முகுந்சந்த் போத்ரா மீதும், அவரது மகன்கள் ககன் போத்ரா (27), சந்தீப் போத்ரா (26) ஆகியோர் மீதும் வழக்குப்பதிவு செய்தனர். போலி ஆவணங்கள் தயாரித்தல், மோசடி, கொலை மிரட்டல் மற்றும் கந்துவட்டி சட்டப்பிரிவு உள்ளிட்ட 5 சட்டப்பிரிவுகளின் கீழ் வழக்கில் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

    நேற்று காலையில் முகுந்த்சந்த் போத்ராவையும், அவரது மகன்கள் ககன் போத்ரா, சந்தீப் போத்ரா ஆகியோரையும் போலீசார் கைது செய்தனர். கைதாகியுள்ள முகுந்த்சந்த் போத்ரா மிகவும் பிரபலமானவர். சினிமா பைனான்ஸ் தொழில் செய்து வந்தார். சினிமா இயக்குனர் கஸ்தூரிராஜா, நடிகர் ரஜினிகாந்த், பட அதிபர் மதன் போன்றோர் மீது புகார் கொடுத்து பரபரப்பை ஏற்படுத்தியவர் என்பது குறிப்பிடத்தக்கது.
    Next Story
    ×