என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கமல்ஹாசன்"

    • இந்த படத்துக்கு அனிருத் இசையமைக்கிறார்.
    • படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு விரைவில் நடைபெற இருக்கிறது.

    கமல்ஹாசன் தயாரிப்பில் ரஜினிகாந்த் நடிக்கும் புதிய படத்தை முதலில் சுந்தர் சி இயக்குவதாக இருந்தது. பின்னர் அவரது திடீர் விலகலை தொடர்ந்து, சிபி சக்கரவர்த்தி படத்தை இயக்கப் போகிறார் என அறிவிக்கப்பட்டு இருக்கிறது.

    இது ரஜினிகாந்தின் 173-வது படமாகும். இந்த படத்துக்கு அனிருத் இசையமைக்கிறார்.

    தற்போது இந்த படம் குறித்து சில தகவல்கள் வெளியாகி இருக்கிறது. ஹாலிவுட் படமான 'தி அவுட்பிட்' படத்தின் தழுவலாக இந்த படம் உருவாக இருப்பதாகவும், ரஜினிகாந்த் இதில் டெய்லராக நடிக்கப் போவதாகவும், இது 70 காலகட்டத்தில் நடக்கும் கதைக்களம் என்றும் பேசப்படுகிறது.

    ரஜினிகாந்த் - கமல்ஹாசன் கூட்டணியில் தயாராகும் இந்த புதிய படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு விரைவில் நடைபெற இருக்கிறது.

    • நாங்கள் இருவரும் சேர்ந்து நடித்ததில்லை.
    • நண்பன் மம்மூட்டி, இப்போது பத்ம பூஷன் மம்மூட்டியாகி இருக்கிறார்.

    இந்தியாவின் 77வது குடியரசுத் தினத்தை முன்னிட்டு மத்திய உள்துறை அமைச்சகம் 2026-ஆம் ஆண்டிற்கான பத்ம விருதுகள் பட்டியலை இன்று வெளியிட்டுள்ளது. இதில் நடிகர்கள் தர்மேந்திரா, மம்மூட்டி, நடிகர் மாதவனுக்கு விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளது. நடிகர் தர்மேந்திராவுக்கு பத்ம விபூஷனும், மம்மூட்டிக்கு பத்ம பூஷனும், மாதவனுக்கு பத்மஸ்ரீயும் அறிவிக்கப்பட்டுள்ளன. 

    இந்நிலையில் விருதுபெற்ற நடிகர் மம்மூட்டிக்கு நடிகர் கமல்ஹாசன் வாழ்த்து தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ள கமல்ஹாசன், 

    "என்னுடைய பிரியத்துக்குரிய நண்பர் மம்மூட்டிக்கு பத்ம பூஷன் விருது அறிவிக்கப்பட்டுள்ளது. நாங்கள் இருவரும் சேர்ந்து நடித்ததில்லை. ஆனால், நான் அவரையும் அவர் என்னையும் தூர இருந்து ரசித்தும் ஒருவருக்கொருவர் நேரடியாக விமர்சித்துக்கொண்டும் ஒரு 'கோப்பெருஞ்சோழன் பிசிராந்தையார்' நட்பை நீண்ட நாட்களாகப் பேணி வருகிறோம்.

    நாங்கள் இருவரும் இன்னும் கொஞ்சம் அதிகமாக நேரில் சந்தித்துக்கொண்டிருக்கலாமே என்று இப்போது தோன்றுகிறது. என்னுடைய ரசிகர்கள் அவருடைய ரசிகர்களாகவும் இருக்க வேண்டும் என்பதே ஒரு மம்மூட்டி ரசிகனாக என்னுடைய எதிர்பார்ப்பு. நண்பன் மம்மூட்டி, இப்போது பத்ம பூஷன் மம்மூட்டியாகி இருக்கிறார். நண்பனுக்கு வாழ்த்து." எனக் குறிப்பிட்டுள்ளார். 

    • சட்டமன்றத்தின் மாண்பைக் குலைக்கும் வகையில் ஆளுநர் செயல்படுவது ஏற்கத்தக்கதல்ல.
    • தமிழர் பெருமையை வெளிப்படுத்தும் அகழாய்வு அறிக்கைகளை முடக்குவதற்கு கண்டனம்.

    மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசன் தலைமையில் நிர்வாகக்குழு மற்றும் செயற்குழு கூட்டம் சென்னையில் நடைபெற்றது.

    இந்த கூட்டத்தில் 12 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன. இதில், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித்திட்டத்தில் மத்திய அரசு கொண்டு வந்துள்ள மாற்றங்களுக்கு கண்டனம்.

    சட்டமன்றத்தின் மாண்பைக் குலைக்கும் வகையில் ஆளுநர் செயல்படுவது ஏற்கத்தக்கதல்ல.

    தமிழர் பெருமையை வெளிப்படுத்தும் அகழாய்வு அறிக்கைகளை முடக்குவதற்கு கண்டனம்.

    மீண்டும் மீண்டும் பல்வேறு வடிவங்களில் இந்தியை திணிப்பதையும் கண்டிப்பதாக மக்கள் நீதி மய்யம் செயற்குழு கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

    பழைய ஓய்வூதியத்திட்ட பலனை வழங்கும் தமிழ்நாடு உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியத் திட்டத்தை செயல்படுத்திய முதல்வருக்கு நன்றி உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.

    மேலும், சட்டமன்ற தேர்தலில் மக்கள் நீதி மய்யம் சார்பில் போட்டியிட இன்று முதல் விருப்பமனு அளிக்கலாம் என மக்கள் நீதி மய்யம் செயற்குழு கூட்டத்தில் அறிவிக்கப்பட்டுள்ளது.

    • மக்கள் நீதி மய்யம் முதன்முதலில் களம் கண்டபோது அவர்களுக்கு 'டார்ச் லைட்' சின்னம் ஒதுக்கப்பட்டது.
    • சின்னம் எந்தெந்த தொகுதிகளில் பயன்படுத்தப்படும் என்பது கூட்டணிக் கட்சிகளின் தொகுதிப் பங்கீட்டைப் பொறுத்தே அமையும்.

    கமல்ஹாசனின் தலைமையிலான மக்கள் நீதி மய்யம் கட்சிக்கு 2026 சட்டமன்றத் தேர்தலுக்கான அதிகாரப்பூர்வ தேர்தல் சின்னமாக மீண்டும் டார்ச் லைட் சின்னத்தை இந்திய தேர்தல் ஆணையம் ஒதுக்கீடு செய்துள்ளது.

    2019 மக்களவைத் தேர்தலில் மக்கள் நீதி மய்யம் முதன்முதலில் களம் கண்டபோது அவர்களுக்கு 'டார்ச் லைட்' சின்னம் ஒதுக்கப்பட்டது.

    தற்போதைய அரசியல் சூழலில், மக்கள் நீதி மய்யம் திமுக தலைமையிலான கூட்டணியில் இணைந்துள்ளதால், வரும் தேர்தல்களில் இந்தச் சின்னம் எந்தெந்த தொகுதிகளில் பயன்படுத்தப்படும் என்பது கூட்டணிக் கட்சிகளின் தொகுதிப் பங்கீட்டைப் பொறுத்தே அமையும்.

    • 2001-ம் ஆண்டு நான் குழந்தையாக இருக்கும் போது அம்மா நடித்த ‘பஞ்சதந்திரம்’ படப்பிடிப்பு தளத்தில் நானும் இருந்தேன்.
    • கடந்த ஆண்டு சைமா விருது விழாவில் அவர் அருகில் இருந்தும் என்னால் அவருக்கு ஹாய் கூட சொல்ல முடியவில்லை.

    'முந்தானை முடிச்சு' படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமாகி தொடர்ந்து பல படங்களில் நடித்து திரையுலகில் தனக்கென தனி இடத்தை பிடித்தவர் ஊர்வசி. கமல்ஹாசனுடன் பல படங்களில் நடித்துள்ளார். தென்னிந்திய திரை உலகில் ஏராளமான படங்களில் கதாநாயகியாக நடித்து தற்போது குணசித்திர கதாபாத்திரங்களில் ஊர்வசி நடித்து வருகிறார்.

    இந்த நிலையில் ஊர்வசி மகள் தேஜலட்சுமியும் சினிமாவில் அறிமுகமாகியுள்ளார். மலையாளத்தில் உருவாகும் 'சுந்தரியாயவள் ஸ்டெல்லா' என்ற படத்தில் கதாநாயகியாக நடித்துள்ள தேஜாலட்சுமி 'பாப்லோ பார்ட்டி' என்ற படத்தில் தாய் ஊர்வசியுடன் இணைந்து நடித்துள்ளார்.

    இந்த நிலையில் ஊர்வசியும், மகள் தேஜலட்சுமியும் கமல்ஹாசனை நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றுள்ளனர். சந்திப்பின் போது எடுத்த புகைப்படங்களை தனது சமூக வலைதளத்தில் தேஜலட்சுமி பகிர்ந்து வெளியிட்டுள்ள பதிவில், 2001-ம் ஆண்டு நான் குழந்தையாக இருக்கும் போது அம்மா நடித்த 'பஞ்சதந்திரம்' படப்பிடிப்பு தளத்தில் நானும் இருந்தேன்.

    அங்கு நான் கோபமாக இருக்கும்போது கமல் சார் என்னை தூக்கி சென்று எனக்கு பிடித்த உணவை ஊட்டி விடுவார். அதனால் நான் அழ மாட்டேன். இது என் வாழ்நாளில் மறக்க முடியாத விஷயம்.

    கடந்த ஆண்டு சைமா விருது விழாவில் அவர் அருகில் இருந்தும் என்னால் அவருக்கு ஹாய் கூட சொல்ல முடியவில்லை. இதனால் நான் அழுது விட்டேன். இதையடுத்து என் அம்மா பரவாயில்லை 'மோலே' நாம் ஒரு நாள் அவரை அலுவலகத்தில் போய் பார்ப்போம் என்று கூறினார். அந்த ஒருநாள் மிக விரைவில் வர வேண்டும் என பிரார்த்தனை செய்து கொண்டிருந்தேன். அந்த நாள் வந்தது. அவரை 10 நிமிடங்கள்தான் சந்தித்தேன். ஆனால் 10 வருடங்களை போல் உணர்ந்தேன் என்று பதிவிட்டுள்ளார். 

    • பராசக்தி படம் நம் கூட்டணி எதிர்கொள்ளப்போகும் தேர்தலின் மாபெரும் முரசொலியாகப் போகிறது
    • பராசக்தி படம் வெற்றி பெற்றாக வேண்டும் என்பது என் ஆசை மட்டுமல்ல

    சுதா கொங்கரா இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்துள்ள 'பராசக்தி' படம் உலகம் முழுவதும் இன்று வெளியானது. இதனால் திரையரங்குகள் முன்பு ரசிகர்கள் கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர்.

    இந்நிலையில், பராசக்தி படத்தை பாராட்டி நடிகரும் மாநிலங்களவை எம்.பியுமான கமல்ஹாசன் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.

    அந்த அறிக்கையில், "அன்புள்ள இளவல் மாண்புமிகு தமிழ்நாடு துணை முதலமைச்சர் திரு. உதயநிதி ஸ்டாலின் அவர்களுக்கு, பராசக்தி படத்தைப் பார்க்கத் தொடங்கும் முன் நான் சற்றும் எதிர்பார்க்கவில்லை இந்தப் படம் நம் கூட்டணி எதிர்கொள்ளப்போகும் தேர்தலின் மாபெரும் முரசொலியாகப் போகிறது என்று ஆம், இந்தப் படம் வெற்றி பெற்றாக வேண்டும் என்பது என் ஆசை மட்டுமல்ல, என் உண்மையான வாழ்த்தும் கூட இந்தப் படம் திமுக வரலாற்றுக்கு இட்ட வெற்றித் திலகம்

    பின்குறிப்பு:

    பின்னால் வந்தாலும் முந்திச் சொல்ல வேண்டியது உணர்ச்சி முந்திக்கொண்டதால் பின்தங்கிய குறிப்பு இது. முதல் பாராட்டு இந்த பயோஃபிக்ஷன் கதையையும், இதன் இயக்குனர் திருமதி சுதா கொங்கராவையும், இக்கதையைத் தேர்ந்து இதற்காக உழைத்து வெற்றியும் காணப்போகும் தம்பி சிவகார்த்திகேயனையும் சேரும்.

    இந்தச் சினிமாச் சரித்திரத்தில் இணைந்துவிட்ட ரவி மோகன், அதர்வா, ஸ்ரீலீலா உள்ளிட்ட அனைத்து நடிகர்களுக்கும். ஒளிப்பதிவாளர் ரவி கே. சந்திரன், இசையமைப்பாளர் ஜி.வி பிரகாஷ், எடிட்டர் சதீஷ் சூரியா உள்ளிட்ட தொழில்நுட்பக் கலைஞர்களுக்கும் மற்றும் இந்தப் படத்துக்காக உழைத்த அனைவருக்கும் என் உளமார்ந்த பாராட்டுகள்" என்று தெரிவித்துள்ளார். 

    • படத்தை தணிக்கை செய்வது தொடர்பாக தணிக்கை வாரியத்திற்கு கால நிர்ணயம் செய்ய வேண்டும்
    • தணிக்கைக்கு செல்லும் படத்தின் காட்சிகளை திருத்தவும் நீக்கவும் வெளிப்படைத்தன்மை அவசியம்

    ஹெச். வினோத் இயக்கத்தில் விஜய் நடித்துள்ள படம் 'ஜன நாயகன்' நேற்று உலகம் முழுவதும் வெளியாக இருந்த நிலையில் தணிக்கை சான்று வழங்கப்படாததால் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இதனால் விஜய் ரசிகர்கள் பெருத்த ஏமாற்றம் அடைந்தனர். மேலும் 'ஜன நாயகன்' படத்திற்கு தணிக்கை சான்று வழங்கப்படாததற்கு பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

    இந்நிலையில், ஜன நாயகன் தணிக்கை விவகாரம் தொடர்பாக நடிகரும் மாநிலங்களவை எம்.பி.யுமான கமல்ஹாசன் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.

    அந்த அறிக்கையில், "பகுத்தறிவால் வழிநடத்தப்படும் இந்திய அரசியலமைப்பு கருத்து சுதந்திரத்தை உத்தரவாதம் செய்கிறது.

    இந்த தருணம் எந்த ஒரு படத்தையும் விட பெரியது, இது அரசியலமைப்பு ஜனநாயகத்தில் கலைக்கும் கலைஞர்களுக்கும் நாம் அளிக்கும் இடத்தை பிரதிபலிக்கிறது.

    சினிமா என்பது ஒரு தனிநபரின் உழைப்பு மட்டுமல்ல, நியாயமான மற்றும் சரியான நேரத்தில் செயல்படும் ஒரு திட்டத்தைச் சார்ந்து வாழும் எழுத்தாளர்கள், தொழில்நுட்ப வல்லுநர்கள், கலைஞர்கள் மற்றும் சிறு வணிகங்களின் கூட்டு முயற்சியாகும்.

    தெளிவு இல்லாதபோது, படைப்பாற்றல் தடைபடுகிறது, பொருளாதார செயல்பாடு சீர்குலைகிறது. மேலும் பொது நம்பிக்கை பலவீனமடைகிறது.

    தமிழ்நாடு மற்றும் இந்தியாவின் சினிமா ஆர்வலர்கள் கலைகளுக்கான ஆர்வம், பகுத்தறிவு மற்றும் முதிர்ச்சியைக் கொண்டு வருகிறார்கள். அவர்கள் வெளிப்படைத்தன்மை மற்றும் மரியாதைக்கு தகுதியானவர்கள்.

    இப்போது தேவைப்படுவது, தணிக்கை சான்றிதழுக்கான வரையறுக்கப்பட்ட காலக்கெடு, வெளிப்படையான மதிப்பீடு மற்றும் ஒவ்வொரு பரிந்துரைக்கப்பட்ட வெட்டு அல்லது திருத்தத்திற்கும் எழுதப்பட்ட, நியாயமான நியாயப்படுத்தலுடன் கூடிய சான்றிதழ் செயல்முறைகளை கொள்கை ரீதியான மறுபரிசீலனை செய்வதாகும்.

    முழு திரைப்படத் துறையும் ஒன்றிணைந்து நமது அரசு நிறுவனங்களுடன் அர்த்தமுள்ள, ஆக்கபூர்வமான உரையாடலில் ஈடுபடுவதற்கான தருணம் இது. இத்தகைய சீர்திருத்தம் படைப்பு சுதந்திரத்தைப் பாதுகாக்கும், அரசியலமைப்பு மதிப்புகளை நிலைநிறுத்தும், அதன் கலைஞர்கள் மற்றும் அதன் மக்கள் மீது நம்பிக்கையை உறுதிப்படுத்துவதன் மூலம் இந்தியாவின் ஜனநாயக நிறுவனங்களை வலுப்படுத்தும்" என்று தெரிவித்தார்.

    • முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இவ்வளவு வேலையை விட்டு விட்டு இங்கு வந்திருக்கிறார்.
    • தேர்தல் நேரம் என்று சொன்னால் ஒவ்வொரு நாளும், ஒவ்வொரு மணித்துளியும் விலைமதிக்க முடியாது.

    சினிமா தயாரிப்பாளர் ஏ.வி.எம்.சரவணன் படத்திறப்பு சென்னையில் நடந்தது. விழாவில் நடிகர் ரஜினி பேசியதாவது:-

    ஏ.வி.எம். நிறுவனத்தில் நான் 11 படம் நடித்து இருக்கிறேன். அதில் 9 படங்கள் எஸ்.பி.முத்துராமன் இயக்கிய படங்கள் ஆகும். ஒவ்வொரு படத்திலும் கதையை நாம் கேட்கவே வேண்டாம்.

    எந்த நடிகருக்கு எந்த மாதிரி படம் பண்ணனும், அவரது ரசிகர்கள் என்ன விரும்புகிறார்கள். அது வெற்றி பெற என்ன செய்ய வேண்டும் என அனைத்தையும் ஆய்வு செய்து திரைக்கதை செய்து வைத்து விட்டு, நடிகர்களுக்கு அந்தந்த கதாபாத்திரத்துக்கு என்னென்ன பண்ணனும் என்பதை செய்து, இசை, படத்தொகுப்பு எல்லாவற்றிலும் அவரது கை இருக்கும். ஆனால் யாருக்கும் தெரியாது.

    மகாபாரத குருஷேத்திர யுத்தத்தில் கண்ணன் எந்த ஆயுதமும் ஏந்தாமல் ரதத்தில் உட்கார்ந்து எப்படி ஜெயித்தாரோ, அந்த மாதிரி அவர் அலுவலகத்தில் அமர்ந்து கொண்டே எல்லா படத்தையும் ஜெயிக்க வைத்தார். எல்லா படத்தையும் வெற்றிப்படமாக்கினார்.

    சினிமா மட்டுமல்லாமல் தனிப்பட்ட முறையிலும் ஏ.வி.எம்.சரவணன் எனக்கு நிறைய உதவி செய்துள்ளார். கோடம்பாக்கம் ராகவேந்திரா மண்டபம் இருக்கும் இடம் காலியாக இருந்த போது அதை ஏ.வி.எம்.சரவணன் பார்த்துள்ளார்.

    என்னிடம் அந்த இடத்தை ஏன் அப்படியே விட்டு விட்டீர்கள் என்று கேட்டார். காலி இடத்தை அப்படியே விடக்கூடாது. ஏதாவது கட்டணும் என்று சொல்லி அவரே பார்த்து டிசைன் பண்ணி அவரே ஆர்க்கிடெக்ட் செய்து கட்டியதுதான் ராகவேந்திரா மண்டபம்.

    எனது போயஸ்கார்டன் வீட்டுக்கு அவர் வந்தார். அதன் அருகில் காலி இடம் இருந்தது. அதை 15 மடங்கு விலை சொன்னார்கள். அதற்கு ஏ.வி.எம். சரவணன் அது என்ன விலை இருந்தாலும் சரி நீங்க வாங்கிடுங்க. அங்கு வேறு யாராவது வந்தால் உங்களுக்கு தொந்தரவாக இருக்கும் என்றார். இந்த மாதிரி எவ்வளவோ விஷயங்கள் இருக்கிறது.

    சிவாஜி படம் பண்ணிய போது என்னிடம் சொன்னார். நீங்க 1990 கால கட்டத்தில் இருந்து 2 வருடத்துக்கு ஒரு படம், 3 வருடத்துக்கு ஒரு படம் பண்ணுகிறீர்கள். வயது ஆக ஆக பிசியா இருக்கணும், சுறுசுறுப்பா இருக்கணும். அது உடம்புக்கும், மனதுக்கும் நல்லது. வருடத்துக்கு ஒரு படம் பண்ணுங்க என்றார். அதை இப்போதும் செய்து கொண்டிருக்கிறேன்.

    சினிமா உலகத்துக்கு வெளியேயும் ஏ.வி.எம். சரவணனுக்கு மரியாதை இருந்தது. ஏனென்றால் அவர் அப்படி வாழ்ந்தார். அவர் எந்த அரசியல் கட்சியையும் சார்ந்தவர் அல்ல. இருந்தாலும் எம்.ஜி.ஆர். அவரை ஷெரீப் ஆக்கி அழகு பார்த்தார். ஜெயலலிதா அவர் மீது அவ்வளவு மரியாதை வைத்திருந்தார். கலைஞரும் அவர் மீது நிறைய மரியாதை வைத்திருந்தார்.

    முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இவ்வளவு வேலையை விட்டு விட்டு இங்கு வந்திருக்கிறார். தேர்தல் நேரம் என்று சொன்னால் ஒவ்வொரு நாளும், ஒவ்வொரு மணித்துளியும் விலைமதிக்க முடியாது. அந்த மாதிரி இருந்தும் அதை விட்டுவிட்டு இங்கு வந்திருக்கிறார். இங்கு வந்திருப்பதால் அவருக்கு 100 ஓட்டுகள் அதிகமாக கிடைத்து விடாது.

    ஆனாலும் கூட அவர் இங்கு வந்திருப்பது ஏ.வி. எம்.சரவணன் எந்த மாதிரி வாழ்ந்திருக்கிறார் என்பதற்கு எடுத்துக்காட்டு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் என்ன மாதிரி ஒரு அன்பும், பண்பும் கொண்டவர், உயர்ந்த உள்ளம் கொண்டவர் என்பதற்கு எடுத்துக்காட்டு.

    அசையாத சொத்துக்கு எப்போதுமே மதிப்பு அதிகம். நம் வாழ்க்கையில் நம்மை விரும்புகிறவர்கள், நமது நலனில் அக்கறை கொண்டவர்கள் ஒரு சில பேர்தான் இருப்பார்கள். அவர்கள் அசையாத சொத்துக்கள். எனக்கு அசையாத சொத்துக்களாக கே.பாலச்சந்தர், சோ, பஞ்சு அருணாசலம், ஆர்.எம்.வீரப்பன், சரவணன், கலைஞர் ஆகியோர் இருந்தனர்.

    காலத்தின் சட்டமோ என்னவோ, நாம் யார் மீது பிரியமாக இருக்கிறோமோ அவர்களை காலம் சீக்கிரமே கொண்டு சென்று விடுகிறது. ஒவ்வொருவரும் பிரியும் போது நமக்கு எவ்வளவு பணம், பேர், புகழ், குடும்பம் இருந்தாலும், அனாதையாக உணர்கிறோம்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    கமல்ஹாசன் பேசியதாவது:-

    நான் சொல்ல வேண்டிய கதை 65 வருடத்து கதை. அதை எப்படி சொல்வதென்று தெரியவில்லை. சின்ன குழந்தையாக நான் ஏ.வி.எம். ஸ்டூடியோவுக்கு போனேன். அங்கிருந்த மாந்தோப்பில் மாம்பழத்தை கடித்து விட்டு சினிமா என்றால் என்ன என்று புரிந்து கொண்டேன்.

    என்னை அந்த வயதில் இருந்து பார்த்துக் கொண்டவர்கள். அவர்கள் ஒரு குழந்தையை கொஞ்சுவது போல்தான் எனது படத்தின் தலைப்பை வைத்தனர். ஏ.வி.எம்.சரவணனுக்கு பொருந்தும் விஷயங்கள் எனக்கும் பொருந்தும்.

    அவரும் சகலகலா வல்லவர்தான். தனக்கு இருக்கும் புகழை எல்லாம் அவர் மற்றவர்களுக்கு கொடுப்பார். அவரிடம் நான் தைரியமாக பேசுவேன். அவர் ஒரு முதலாளி என்று புரிவதற்கே எனக்கு நிறைய நாள் ஆகி விட்டது. அதிக பிரசங்கம் செய்யக்கூடாது என்று எனக்கு சொல்லிக் கொடுத்தவர் எஸ்.பி.முத்துராமன்.

    ஏ.வி.எம். குடும்பத்துடன் ஒட்டிக் கொள்வதில் எனக்கு பெரிய பெருமை. அந்த உரிமையை அவர்கள் கொடுத்ததற்காக நன்றி சொல்ல கடமைப்பட்டு இருக்கிறேன்.

    ஏ.வி.எம். நிறுவனத்தில் படித்தேன் என்பது எனக்கு பெருமை. நான் அங்கு படித்த விஷயங்கள்தான் எனக்கு இன்று வரை கை கொடுத்துக் கொண்டிருக்கிறது.

    இங்கு பள்ளிக்கூடம் கட்டி இருந்தால் நான் படித்தும் இருப்பேன். என்னை வேறு பள்ளிகளில் சேர்க்க யோசித்தார்கள். என்னுடைய குணாதிசயம் தெரிந்து என்னை எப்படி வழி நடத்த வேண்டும் என்று தெரிந்த பள்ளி ஏ.வி.எம். பள்ளி. சிறப்பாக கற்றுக் கொடுத்தார்கள். நான் தவறு செய்யும் போது சத்தமாக சொல்லாமல், நான் நல்லது செய்யும் போது என்னை தோளில் தூக்கி கொண்டாடியவர் ஏ.வி.எம்.சரவணன்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    • சுந்தர் சி சொன்ன ஹாரர் ஜானர் கதை ரஜினிக்கு பிடிக்கவில்லை என்று கூறப்படுகிறது.
    • ரஜினிகாந்த் படத்தில் இருந்து விலகுவதாக சுந்தர் சி அறிவித்தார்.

    கமல்ஹாசன் தயாரிப்பில் ரஜினியின் 173-வது படத்தை சுந்தர் சி இயக்க இருந்தார். மூவரும் சந்தித்த புகைப்படங்களை வெளியிட்டு படத்தின் தொடக்கம் குறித்து ராஜ் கமல் பிலிம்ஸ் அறிவித்தது.

    ஆனால் சில நாட்களிலேயே படத்தில் இருந்து விலகுவதாக சுந்தர் சி அறிவித்தார். எதிர்பாராத காரணங்களால் விலகுவதாக அவர் தெரிவித்திருந்தார். சுந்தர் சி சொன்ன ஹாரர் ஜானர் கதை ரஜினிக்கு பிடிக்கவில்லை என்று கூறப்படுகிறது.

    இதற்கிடையே அண்மையில் செய்தியார்களிடம் பேசிய கமல் ஹாசன், 'அவரின் நிலைப்பாட்டை அவர் சொல்லி இருக்கிறார். அது பத்திரிகைகளில் பார்த்தோம். நான் முதலீட்டாளன். எனது நட்சத்திரத்திற்கு பிடித்தார் போல் கதை இருக்க வேண்டும். அவருக்கு கதை பிடிக்கும் வரை புதிய இயக்குனரை தேடிக் கொண்டு இருப்பேன்' என்றார்.

    இந்நிலையில், ரஜினியின் 173 வது படத்தை டான் பட இயக்குநர் சிபி சக்கரவர்த்தி இயக்கவிருப்பதாக ராஜ் கமல் பட தயாரிப்பு நிறுவனம் போஸ்டர் வெளியிட்டு அறிவித்துள்ளது. இப்படம் அடுத்தாண்டு பொங்கல் பண்டிகையை ஒட்டி திரைக்கு வரும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

    • இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்றுக் கொண்டு இருக்கிறது.
    • அது மிகவும் எதிர்பார்க்கப்படும் படங்களில் ஒன்றாக இருக்கும்.

    தமிழ் சினிமாவின் வெற்றிகரமான இயக்குநர்களில் ஒருவரான வெற்றிமாறன் தற்போது சிம்புவை வைத்து 'அரசன்' படத்தை இயக்கி வருகிறார். இப்படம் வடசென்னை கதையை மையமாகக் கொண்டு கேங்ஸ்டர் படமாக உருவாகி வருகிறது. இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்றுக் கொண்டு இருக்கிறது.

    இதனிடயே, கமல்ஹாசன் மற்றும் வெற்றிமாறன் ஆகியோர் ஒரு புதிய படத்திற்காகப் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளதாக சினிமா வட்டாரத்தில் தகவல் வெளியாகி இருந்தது. ஆனால் அது குறித்து எந்த அறிவிப்பும் உறுதியாக அறிவிக்கப்படவில்லை.

    இந்த நிலையில், கமல்ஹாசன் - வெற்றிமாறன் கூட்டணி பிரமாண்டமான படத்திற்கான ஆரம்பகட்ட பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளதாக கூறப்படுகிறது. இது அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டால், அது மிகவும் எதிர்பார்க்கப்படும் படங்களில் ஒன்றாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.  

    • தமிழக அரசின் மீது சுமை கூடுகிறது.
    • ஏழைகளுக்கு சேர வேண்டிய பணம், உதவி, நலத்திட்டங்கள் எல்லாம் குறைகிறது.

    சென்னை:

    சென்னை விமான நிலையத்தில் மக்கள் நீதி மய்யத் தலைவரும், மாநிலங்களவை எம்.பி.யுமான கமல்ஹாசன் செய்தியாளர்களை சந்தித்தார்.

    அப்போது, பாராளுமன்றத்தில் 100 நாள் வேலைவாய்ப்பு திட்டம் குறித்து காரசார விவாதம் நடைபெற்றது. இதில் உங்களின் பங்களிப்பு எப்படி இருந்தது? கருத்து என்ன? என்று செய்தியாளர் கேள்வி எழுப்பினார்.

    அதற்கு கமல்ஹாசன், இதில் கருத்து தான் சொல்ல முடியும். காந்தியார் அவர்களின் பெயரை காக்கவோ, மீட்கவோ வேண்டிய அவசியம் இல்லை. இதில் நாம் கவனிக்க வேண்டியது என்னவென்றால் தமிழக அரசின் மீது சுமை கூடுகிறது. ஏழைகளுக்கு சேர வேண்டிய பணம், உதவி, நலத்திட்டங்கள் எல்லாம் குறைகிறது. அதை மீட்கவும், காக்கவும் தான் முயற்சி செய்ய வேண்டும். அதை விட்டு வேறு இடத்தில் விளையாட கூடாது என்று தான் என்னுடைய தாழ்மையான கருத்து என்றார்.

    தேர்தல் நெருங்கி வருகிறது. தேர்தலையொட்டி பிரதமர் மோடி, அமித்ஷா உள்ளிட்டவர்கள் பா.ஜ.க.வுக்கு ஆதரவாக தமிழ்நாட்டில் வருகை தர உள்ளனர். இது அவர்களுக்கு சாதகமாக இருக்கும் என்று நினைக்கிறீர்களா? என்ற கேள்விக்கு அதை நான் எப்படி சொல்லமுடியும்? மக்கள்தான் சொல்லமுடியும் என்றார்.

    2026 தேர்தலில் தி.மு.க.வுக்கு ஆதரவாக பிரசாரம் செய்வீர்களா? என்ற கேள்விக்கு கண்டிப்பாக உண்டு என்று கூறினார். 

    • ரஜினிகாந்த் = வயதை வென்ற வசீகரம்!
    • பிறந்தநாளை ரஜினி ரசிகர்கள் திருவிழாவாக கொண்டாடினர்.

    நடிகர் ரஜினிகாந்த் நேற்று தனது 75-வது பிறந்தநாளை கொண்டாடினார். அவரது பிறந்தநாளை ரஜினி ரசிகர்கள் திருவிழாவாக கொண்டாடினர்.

    இந்த நிலையில், தி.முக. தலைவரும் முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் ரஜினிக்கு எக்ஸ் தள பக்கத்தில் பதிவு வெளியிட்டு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்தார்.

    அந்த பதிவில் அவர்,"ரஜினிகாந்த் = வயதை வென்ற வசீகரம்!

    மேடையில் ஏறினால் அனைவரையும் மகிழ்விக்கும் சொல்வன்மை!

    உள்ளொன்று வைத்துப் புறமொன்று பேசாத கள்ளம் கபடமற்ற நெஞ்சம்!

    ஆறிலிருந்து அறுபதுவரைக்கும் அரைநூற்றாண்டாகக் கவர்ந்திழுக்கும் என் நண்பர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்களுக்கு உளம் நிறைந்த பிறந்தநாள் வாழ்த்துகள்!

    மென்மேலும் பல வெற்றிப் படைப்புகளை அளித்து, மக்களின் அன்போடும் ஆதரவோடும் தங்கள் வெற்றிக்கொடி தொடர்ந்து பறக்கட்டும்! என்று குறிப்பிட்டிருந்தார்.

    இந்நிலையில், நடிகர் ரஜினிகாந்த் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு நன்றி தெரிவித்து பதிவு வெளியிட்டுள்ளார்.

    இதுகுறித்து ரஜினிகாந்த் தனது எக்ஸ் தள பக்கத்தில் கூறுகையில்,"என் பிறந்த நாளுக்கு வாழ்த்துத் தெரிவித்த என்னுடைய அன்பு நண்பர் மாண்புமிகு தமிழக முதலமைச்சர் திரு மு.க. ஸ்டாலின் அவர்களுக்கு என் மனமார்ந்த நன்றி" என்றார்.

    இதேபோல், பிறந்த நாள் வாழ்த்து கூறிய எனது அருமை நண்பர் கமல்ஹாசனுக்கும் எனது நன்றி என ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார்.

    இதுகுறித்து எக்ஸ் தள பக்கத்தில், "என் பிறந்த நாளில் வாழ்த்துத் தெரிவித்த என்னுடைய அருமை நண்பர் திரு கமல்ஹாசன் அவர்களுக்கு என்னுடைய மனமார்ந்த நன்றி" என்றார்.

    ×